Advertisements
Featuredஆய்வுக் கட்டுரைகள்

கலீல் ஜிப்ரான் தமிழாக்கங்கள்

முனைவர் அ.தௌஃபீக் ரமீஸ்

உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,

ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி), திருச்சி – 20

 

 

      உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார். அகஸ்ட் ரோடின் என்னும் கலைஞரிடம் சிற்பமும் ஓவியமும் பயின்று அத்துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். (குறிப்பு: ஆங்கிலத்தில் Kahlil Gibran என்று எழுதப்படும் பெயரைத் தமிழில் ஜிப்ரான் என்று சிலரும் கிப்ரான் என்று சிலரும் எழுதுகிறார்கள். ஜிப்ரான் என்பதே சரி. மூல மொழியான அரபியில் அப்பெயருக்கு அரபு எழுத்து முறையின் ஐந்தாம் எழுத்தாகிய “ஜீம்” என்னும் எழுத்தே இடப்படுகிறது. எனவே அரபி லிபியில் அது ஜிப்ரான் என்றே உச்சரிக்கப்படும். அதுவே சரி).

ஜிப்ரான் என்னும் ஆன்மிகக் கவி

பாரதி, தாகூர், இக்பால் முதலிய மகாகவிகளைப் போன்றே ஜிப்ரானும் ஓர் ஆன்மிகக் கவிஞர். ஆன்மிகப் பார்வை கொண்டே சமூக அரசியல் மாற்றங்களைப் பேசியவர். அதனாலேயே அவரது ஆக்கங்கள் காலங்கடந்து, அவற்றின் சமகால நிகழ்வுகளின் தீவிரம் தேய்ந்த பின்னரும், என்றுமுளதான மானுட மதிப்புக்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்ற ஆன்மிக நோக்கால் இன்றும் தேவைப்படுகின்றனவாக, தாக்கம் செலுத்துகின்றனவாக இருக்கின்றன.

ஜிப்ரானின் இலக்கியப் படைப்புக்களில் பைபிளின் தாக்கம், அதன் மொழி நடையிலும் கருத்துக்களிலும் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஜிப்ரானை மேலோட்டமாகப் படித்தாலே அதனைக் கண்டுகொள்ளல் எளிது. அவரின் எழுத்துக்களில் காணலாகும் ஆழ்ந்த அக தரிசனங்கள், மெய்ப்பொருட் சேதிகள் ஆன்மிகத் தளமொன்றிலிருந்து அவரது அகத்திற்கு வந்து சேர்ந்தவை என்றே அவர்கள் பார்க்கின்றனர். “அவருடைய பேராற்றல் ஒரு பெரிய ஆன்மிக அணைக்கட்டிலிருந்து வருகிறது. அப்படி இல்லாதிருந்தால் அது அனைவருக்கும் பொதுவாகவும் சக்தி மிக்கதாகவும் இருந்திருக்காது” என்று கிளாட் பிரேக்டன் சொல்கிறார் (தமிழாக்கம்: அப்துல் ரகுமான்; நூல்: “முறிந்த சிறகுகள்”, ஆ.மா.சகதீசன் மொழிபெயர்ப்பு; ப.6). இருந்தபோதும், அக்கருத்துக்களுக்குக் கலீல் ஜிப்ரான் அணிவித்திருக்கும் மொழி நடை என்னும் ஆடை அவருக்கே சொந்தமானது என்றும் அவர் சொல்கிறார் (”His power came from some great reservoir of spiritual life else it could not have been so universal and so potent, but the majesty and beauty of the language with which he clothed it were all his own” – Claude Bragdon; Book: The Prophet”, preface page).

அனைத்து மகாகவிகளையும் போலவே ஜிப்ரானின் கவிதைகளும் உரைநடையும் ஞானம் பேசுகின்றன. அவரை ஒரு ஞானியாகவே கொண்டாடுகின்ற ரசிகர்களும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவர்கள் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். சூஃபிக் கவிஞர் ரூமியைப் போல. அத்தகையோரின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஞானம் அடையாத, ஆனால் ஞானம் பேசுகின்ற கவிஞர்கள் பலருண்டு. அத்தகையோரின் பட்டியலிதான் தாகூரையும் ஜிப்ரானையும் ஓஷோ வைக்கிறார்:

“வியப்பு என்னவெனில், கலீல் ஜிப்ரான் இன்னமும் விழிப்படையாதவர், எனினும், ஏதோவொரு விசித்திரமான வழியில், ஞானிகளுக்கு மட்டுமே கிடைக்கின்ற ஆழங்கள் மற்றும் உயரங்கள் குறித்து அவர் பேசுகிறார் என்பதே. அதனால்தான் அவர் தன்னளவில் ஒரு தனி வகையைச் சேர்ந்தவர் – ஆத்மஞானியும் கவிஞனுமான ஒரு விசித்திரக் கலவை – என்று நான் சொல்கிறேன். … … … … … அவரது ஆன்மாவில் ஞானி, கவிஞன் இருவருமே இருக்கிறார்கள் – அவர் மிகவும் செழிப்பானவர். கவிஞன் அதிகத் தருணங்களில் விழித்திருக்கிறான், ஞானி எப்போதாவது மட்டுமே. ஆனால் இவ்விருவரின் கலவை ஒரு புதிய வகைமையை உண்டாக்கியுள்ளது. அவ்வகையில் இன்னும் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார் – ரபீந்திரநாத் தாகூர். இந்த விசித்திர வகைமைக்கு இந்த இருவரை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்” (“The surprise is that Kahlil Gibran is not yet an awakened man yet, in some miraculous way, he speaks of those depths and those heights which are available only to the enlightened. That’s why I say he is a category in himself – a strange mixture of the mystic and the poet. … … … … … In his soul the poet and the mystic are both present – he is a very rich man. The poet is more often awake, the mystic once in a while, but the mixture of these two have created a new category to which only one other man, Rabindranath Tagore, can belong. I know only of these two persons who belong to this strange category.” (நூல்: “Reflections on Kahlil Gibran’s The Prophet”, chapter 32: ‘Time remains where it is’)).

தமிழிலக்கியச் சூழலில் ஜிப்ரானின் தாக்கம்

      இருபதாம் நூற்றாண்டில் தமிழுலகில் சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகாகவி பாரதியின் தாக்கம் என்பது தமிழில் அகத்திருந்து நிகழ்ந்த தாக்கம் என்றால் புறத்திலிருந்து தமிழ் மீது நிகழ்ந்த பெருந்தாக்கம் தாகூர் மற்றும் ஜிப்ரான் ஆகிய இருவரின் ஆளுமைகளுடையதே எனத் துணியலாம். ”பாரதியாரை அறிந்தவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு அவர் ஒரு கவிஞர் என்பதாகத்தான் தெரிந்திருக்கும். புனைகதைகளில் சில சிகரங்களை எட்டியவர் அவர் என்பதை அறிந்த கால்வாசிப் பேரில் நானும் ஒருவன். சீரியஸ் எழுத்தாளர்களிலும், பாப்புலர் எழுத்தாளர்களிலும் அவருடைய எழுத்தின் பாதிப்பு யார் யாரிடம் எந்தெந்த அம்சத்தில் இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஒரு பட்டியலே உண்டு” என்கிறார் யுவன் சந்திரசேகர் (”ஏற்கனவே”/’விருந்தாளி’, ப.177). கலீல் ஜிப்ரானின் விடயத்திலும் இப்படிச் சொல்லத்தகும்.

      தமிழ்ப் புதுக்கவிதை இயக்கமான ’வானம்பாடி’யின் உறுப்பினர்கள் மற்றும் சார்பாளர்களில் பற்பலரை அறிமுகஞ் செய்த பதிப்பாளரான கவிஞர் மீரா சில காலம் தனது பதிப்பகத்திற்கு ‘சல்மா’ என்று பெயர் வைத்திருந்தார். அப்பெயர் கலீல் ஜிப்ரானுடைய புகழ் பெற்ற குறும்புதினமான ‘முறிந்த சிறகுகள்’-இன் கதாநாயகியின் பெயர். காதலையே தனது அடிநாதமாகக் கொண்டிருந்த கலீல் ஜிப்ரானின் தாக்கத்தை மீராவின் காதற் கவிதைகளில் காணலாம் என்பதற்கு இஃதொரு குறிப்பு ஆகலாம்.

      கலீல் ஜிப்ரானுடைய எழுத்துக்களில் மனம் திரை கொடுத்தோருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். அவர் சொல்கிறார், “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ! அப்துல் ரகுமான் வந்துவிட்டார். இவருடைய கவிதைகளை வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்” (அப்துல் ரகுமானின் ”ஆலாபனை” பின் அட்டை மேற்கோள்).

      கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகள் மட்டுமன்று, அவரது உரைநடையிலும் ஜிப்ரானின் தாக்கமுண்டு. “கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும் ஆஸ்கார் ஒயில்டினுடைய சம எடை தராசு முள் வாக்கிய அமைப்பும் இவர் நடையழகாய் நிமிர்கின்றன” என்றுரைக்கிறார் கவிஞர் சிற்பி (”அவளுக்கு நிலா என்று பெயர்”, முன்னுரை: ‘இருட்டில் ஒற்றை விண்மீன்போல்…’, ப.8).

      ஜிப்ரானின் பாடுபொருளும் அவற்றை வெளிப்படுத்த அவன் மீண்டும் மீண்டும் கையாளும் குறியீடுகளும் (recurring themes and metaphors) அப்துல் ரகுமானிடமும் காணக்கிடைக்கின்றன. காதல், இசை, இறைவன், அழகு ஆகியவை இருவரிடமும் செம்பாகம் காணப்படும் பொருண்மைகள் எனில் கண்ணீர், சிறகுகள், கடல், வானம், பூக்கள் முதலிய குறியீடுகளும் இருவரிடமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

      உலகத்துக் கவிஞர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வைரமுத்து எழுதிய கட்டுரை நூல் “எல்லா நதியிலும் என் ஓடம்”. அந்நூலுள் இருபது கட்டுரைகள் உள்ளன. சோவியத் யூனியன், உருது, ஆப்பிரிகா, இந்தி, ஈரான், சிந்தி இத்தியாதி என நாடுகள் மற்றும் மொழிகளின் பெயர்களால் தொடரும் கட்டுரைத் தலைப்புக்களில் 15,16,17 எண்ணிட்ட மூன்று கட்டுரைகள் லெபனான் என்னும் ஒற்றை நாட்டின் இலக்கியம் பற்றி அமைகின்றன. பிற நாட்டு அல்லது மொழி பற்றிய கட்டுரைகளுக்குள் பல கவிஞர்கள் பற்றி எழுதியுள்ள நிலையில், லெபனான் குறித்த மூன்று கட்டுரைகளிலுமே கலீல் ஜிப்ரான் என்னும் ஒரே கவிஞரைப் பற்றித்தான் வைரமுத்து எழுதியுள்ளார்.

      ”என்னைப் பதினேழு வயதிலிருந்து பிரமிக்க வைத்த பிறமொழிக் கவிஞன் அவன்தான். அவனது கவிதை ஏடுகளைக் கைக்குழந்தையாய்க் கக்கத்தில் இடுக்கித் திரிந்திருக்கிறேன். தலையணை இல்லாமல்கூட நான் தூங்கியதுண்டு. ஆனால், அவனது ஏடு தழுவாமல் என் இமைகள் இறங்கியதில்லை” என்பது ஜிப்ரான் தன்னில் நிகழ்த்திய தாக்கம் பற்றி வைரமுத்து வரைந்திருக்கும் வாக்குமூலம் (”எல்லா நதியிலும் என் ஓடம்”, ப.128).

ஜிப்ரான் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள்

      ”பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி முன்மொழிந்தும், “தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்” என்று பாரதிதாசன் வழிமொழிந்தும் சுட்டிக்காட்டிய பணி இன்றளவும் தொடர்ந்து வருகின்ற ஒன்று. அதன்படி இந்திய மொழிகள் பலவற்றிலுமிருந்து தமிழுக்குப் பற்பலப் பனுவல்கள் மொழிபெயர்ந்து வந்துள்ளன. ஆங்கில வழியே பல உலக மொழிகளிலிருந்தும் பல வடிவங்களிலான இலக்கியங்கள் தமிழிற் பெயர்ந்துள்ளன. அவர்களுள், கலீல் ஜிப்ரானின் நூற்களைப் போல் பரவலாகத் தமிழிற் பெயர்க்கப்பட்ட, பட்டு வருகின்ற ஆளுமை வேறு யாருமில்லை எனலாம்.

      கலீல் ஜிப்ரானைத் தமிழாக்கம் செய்தோருள் ஆ.மா.சகதீசன் அவர்களை முதலிடத்தில் வைக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். “ஆ.மா.சகதீசன் கலீல் ஜிப்ரானின் பித்தர் என்று கூறுவதை விடப் பக்தர் என்று கூறுவதே சரியாக இருக்கும்” என்று சொல்லி, “ஜிப்ரானின் 20 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஜிப்ரானை அதிகமாக மொழிபெயர்த்தவர் அவர்தாம்” என்று காரணமும் காட்டுகிறார் அவர் (”முறிந்த சிறகுகள்” (நேஷனல் பப்ளிஷர்ஸ்), பக்:7-8). கலீல் ஜிப்ரானின் சிந்தனைகளை வெறுமனே நூற்களாக மட்டும் கண்டு மொழிபெயர்ப்புப் பணி செய்வதோடு அமைவதல்ல ஆ.மா.சகதீசனின் ஈடுபாடு. “வாழ்க ஜிப்ரானிஸம்” என்னும் முழக்கத்துடன் அதனை ஓர் நவீனச் சமயமாகவே அவர் பாவித்துப் போற்றுவதைக் காண்கிறோம்.

      கலீல் ஜிப்ரானை தமிழாக்கம் செய்தோருள் மிக அழகாகவும் செறிவாகவும் செய்தவர் என்று கவிஞர் புவியரசு அவர்களையே நான் கருதுகிறேன். முறிந்த சிறகுகள், தீர்க்கதரிசி, ஞானிகளின் தோட்டம், ஞானக் களஞ்சியம் ஆகிய நூற்களை அவர் தந்திருக்கிறார். மட்டுமன்று, ஜிப்ரானின் கெழுதகை நண்பரும் பெருங்கவியுமான மீக்காயில் நுஐமா எழுதிய ”The Book of Mirdad” (“மீர்தாதின் புத்தகம்”) எனும் ஒப்பரிய ஆத்மஞான நூலினையும் அவரே தமிழிற் பெயர்த்துள்ளார். ஓஷோவின் நூற்களை அதிகமாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் அவர்தாம். ஜிப்ரானும் நுஐமாவும் ஓஷோவைப் பெரிதும் ஈர்த்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்.

      ஜிப்ரானின் உரைநடைப் பனுவலான “The Prophet” என்னும் தத்துவ ஞான நூலினை வசன கவிதை வடிவில் “பேரறிவாளன்” என்னும் தலைப்புடன் பெயர்த்திருப்பவர் மெஹர்.ப.யூ.அய்யூப். (பேராசிரியர் ஜெனார்த்தனன் என்ற கவிஞர் ஜெனா என்பாரும் இந்நூலை வசன கவிதை வடிவில் தந்திருக்கிறார்). ”கலீல் கிப்ரான் என்ற பன்மொழித் திறன் வாய்ந்த பேரறிவாளனைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியாய் இந்த மொழி பெயர்ப்பை நான் கருதவில்லை. அறிவாளர் பலர் ஏற்கனவே அந்தப் பணியைச் செய்துள்ளனர்” என்கிறார் அவர் (”பேரறிவாளன்”, ப.xii). ஆனால், ஜிப்ரானை மொழிபெயர்த்தோர் பட்டியலில் தம் பெயரும் இடம்பெற வேண்டும் என்னும் ஆசை அவனது எழுத்தின் காதலரை இயக்கும் போலும்.

முறிந்த சிறகுகள், தீர்க்கதரிசி ஆகிய நூற்களை தமிழாக்கம் செய்துள்ள நலங்கிள்ளி ‘கலீல் ஜிப்ரான் கதைகள்’ என்னும் நூலும் தந்துள்ளார். அதில் நான்கு சிறுகதைகள் உள்ளன. 1908-இல் ஜிப்ரான் அரபி மொழியில் எழுதிய நூல் “அல்-அர்வாஹல் முதமர்ரிதாஹ்”. ஆங்கிலத்தில் இந்நூல் “Spirits Rebellious” என்று மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலில் மூன்று கதைகள் உள்ளன. அதில் உள்ள ”The Cry of the Graves” என்பதை ”தீர்ப்பின் விளைவு” என்னும் தலைப்பிலும், “Madam Rose Hanie” என்பதைத் “தளையற்ற காற்றிலே…” என்னும் தலைப்பிலும், ”Khalil the heretic” என்பதைத் “துறவை மீறிய உறவு” என்னும் தலைப்பிலும் தனது நூலில் நலங்கிள்ளி தந்துள்ளார். “Tears and Laughter” என்னும் ஆங்கில நூலிலுள்ள “The Bride’s Bed” என்னும் கதையினைச் “செந்நீர்ப் பஞ்சணை” என்னும் தலைப்பில் தந்துள்ளார்.

      ”ஞானக் களஞ்சியம்” (புவியரசு), “ஞான தரிசனம்” (ஆ.மா.சகதீசன்), ”மிட்டாய் கதைகள்” (என்.சொக்கன்) ஆகிய நூற்கள் கலீல் ஜிப்ரானின் பன்னூற்களிலிருந்து உரைநடைச் சித்திரங்களையும் வசனக் கவிதைகளையும் எடுத்து மொழிபெயர்த்துத் தந்துள்ள கோவைகளாகும். Fable என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறிய நீதிக்கதை வடிவத்தில் ஜிப்ரான் எழுதியிருப்பவற்றை மட்டும் தேர்ந்து மொழிபெயர்த்துள்ள என்.சொக்கன், “இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கும் கிப்ரானின் அலாதியான கதை சொல்லும் பாணிக்காகவே, அவருடைய பல நூற்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்து மொழிபெயர்த்தேன்” என்று சொல்கிறார் (”மிட்டாய் கதைகள்”, ப.7). இவ்வாறு, அவரவரும் ஒரு நோக்கு வகுத்துக்கொண்டு அதற்படத் தேர்ந்து மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற பெரும்பரப்பாக கலீல் ஜிப்ரானின் படைப்புக்கள் அமைந்துள்ளன.

ஜிப்ரானின் Forerunner, Madman ஆகிய நூற்களை இளவல் ஹரிஹரன் முறையே ’முன்னோடி’, ’பைத்தியக்காரன்’ ஆகிய நூற்களாகவும், ஜிப்ரான் தனது காதலி மே ஸியாதாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான “Love Letters” என்பதை “கடிதங்களில் ஒரு காதல் காவியம்” என்னும் நூலாக ‘க்ளிக்’ ரவியும் மொழிபெயர்த்துள்ளனர் (கண்ணதாசன் பதிப்பகம்). இது போல் கலீல் ஜிப்ரானைத் தமிழாக்கும் நூற்பணி தொடர்ந்த வண்ணமுள்ளது. மேலும், சி.ஜெயபாரதன் (jayabarathan.wordpress.com), மீனாக்ஸ் (tamilgibran.blogspot.com) ஆகியோர் நடாத்தி வருகின்ற வலைப்பூக்கள் ஜிப்ரானைத் தமிழில் வழங்கி வருகின்றன.

முடிவுரை

 மகாகவிகளின் படைப்புக்கள் மட்டுமே நூற்றாண்டுகள் கடந்தும் ஆற்றல் குன்றாது இயங்கவியலும். அத்தகைய மகாகவிகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் என்பது திண்ணம். மகாகவிகளே தொடர்ந்து ஒரு மொழியில் கவிஞர்கள் உருவாகி வருவதற்கு ஊக்கமாக இருப்பவர்கள். தான் எழுதிய மொழியில் மட்டுமல்லாது பெயர்ப்புச் செய்யப்படுகின்ற மொழிகளிலும் கவிஞர்களை உருவாக்கும் ஆற்றல் மகாகவிகளிலும் சிலருக்கே வாய்க்கின்ற பெரும்பேறு. அந்த நற்பேறு கலீல் ஜிப்ரானுக்கு நிறையவே வாய்த்துளது என்பது உண்மை.

துணை மூலங்கள்

அ) கலீல் ஜிப்ரான் நூற்கள்

 1. The Prophet, Shikha Publications, B-30, East Krishan Nagar, Delhi-51 (Year not mentioned).
 2. The Broken Wings, Reprint 1997, UBSPD, 5, Ansari Road, New Delhi-02.
 3. தீர்க்கதரிசி, தமிழில்: கவிஞர் புவியரசு, முதற்பதிப்பு: பிப்ரவரி 1994, கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
 4. பேரறிவாளன், தமிழில்: மெஹர் ப.யூ.அய்யூப், முதற்பதிப்பு: 1999, பாத்திமா பதிப்பகம், 163/32, மாதவன் சாலை, கருணாநிதி நகர், திருச்சி -20.
 5. வாழ்வின் தாகம் – தீர்க்கதரிசி, தமிழில்: கவிஞர் ஜெனா, முதற்பதிப்பு ஜூன் 1983, வெளியீடு: திருமதி ஜெ.மல்லிகா, 259, புறநகர் வீட்டுவசதித் திட்டம், இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை-3.
 6. முறிந்த சிறகுகள், தமிழில்: கவிஞர் புவியரசு,   கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
 7. முறிந்த சிறகுகள், தமிழில்: ஆ.மா.சகதீசன், முதற்பதிப்பு டிசம்பர் 2004, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
 8. சிதைந்த சிறகுகள், தமிழில்: நலங்கிள்ளி, முதற்பதிப்பு: டிசம்பர் 1986, பூம்புகார் பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை – 04
 9. ஞானக் களஞ்சியம், தமிழில்: கவிஞர் புவியரசு, முதற்பதிப்பு: ஜனவரி 1997, கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
 10. ஞான தரிசனம், தமிழில்: ஆ.மா.சகதீசன், முதற்பதிப்பு டிசம்பர் 2004, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
 11. கலீல் ஜிப்ரான் கதைகள், தமிழில் நலங்கிள்ளி, முதற்பதிப்பு டிசம்பர் 1986, கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017.
 12. ”மிட்டாய் கதைகள்”, கலீல் ஜிப்ரான், தமிழில்: என்.சொக்கன், முதற்பதிப்பு: செப்டம்பர் 2005, கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18; ISBN 978-81-8368-079-0.

ஆ) பிற நூற்கள்

 1. அப்துல் ரகுமான், “ஆலாபனை”, நான்காம் பதிப்பு ஏப்ரல் 2003, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை -17.
 2. அப்துல் ரகுமான், “அவளுக்கு நிலா என்று பெயர்”, மூன்றாம் பதிப்பு ஆகஸ்ட் 1993, திருமகள் நிலையம், 55, வெங்கட்நாரயணா தெரு, தி.நகர், சென்னை-17.
 3. வைரமுத்து, “எல்லா நதியிலும் என் ஓடம்”, நான்காம் பதிப்பு ஜூன் 1993, சூர்யா லிட்டரேச்சர் பிரைவேட் லிமிடட், 15, நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 14.
 4. யுவன் சந்திரசேகர், “ஏற்கனவே”, முதற்பதிப்பு டிசம்பர் 2003, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18.

இ) இணையத் தளங்கள்

 1. leb.net/gibran
 2. www.gibrankhalilgibran.org
 3. www.osho.com

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

 1. Avatar

  தங்கள் கட்டுரையில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இதில் சொல்ல விழைவது என்னவெனில, முதலில் நான் மொழி பெயர்த்தது கலீல் ஜிப்ரானின் “மணலும் நுரையும்” என்ற நுல்(Sand and foam) என்பதாகும். அதன் பின்னரே மற்ற இரு நூல்கள் மொழிபெயர்த்தேன். கண்ணதாசன் பதிப்பகத்தில் அம்மூன்றுமே பல பதிப்புகள் கண்டு கொண்டிருக்கிறது என்பது மக்ழ்வுக்கும், பகிர்வுக்கும் உரிய செய்தி.
  நன்றி, அன்புடன், இளவல் ஹரிஹரன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க