லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் 

முனைவர். த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,   அரசுக் கல்லூரி சித்தூர் பாலக்காடு, கேரளம்,678104. அலைபேசி: 9846741558.

————————————

அகிலத்தில் அளவற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில்  பலநிலைகளில்  தம்மை மேம்படுத்திக் கொண்ட இனமாக விளங்குவது மனித இனமே. அவன்  தன் சிந்தனை வளத்தால்  பற்பல நன்மைகளை  அடைந்திருக்கின்றான்  என்பது வெள்ளிடை மலை. சிந்தனைத் திறன் கொண்டு அவன் படைத்த  அருங்கலைகளுள் ஆற்றல் மிக்க  ஒன்றாக விளங்குவது  கவிதைக் கலை. மரபுக்கவிதை, புதுக்கவிதை  என்று நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கவிதைக் கலையில்  இன்றைக்குத் தடம் பதித்தவர்கள்  பலர். அவர்களில் ஒருவர்  கவிஞர் லட்சுமணன்.

லட்சுமணன் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி யினரின் வாழ்வியல் நிலைகளை நன்கு அறிந்தவர். கீழிருந்து சென்ற பிற இனத்தினரின் ஆதிக்கத்தால் நசுக்கப் பட்ட இனமாக காட்சி தரும்  பழங்குடியினரின்  பொருளியலும் பண்பாடும்  எவ்வாறு  முடங்கிக் கிடக்கின்றன என்பதை வெளிப்படுத்த விரும்பிய சமூக நல விரும்பிகளில்  கவிஞர் லட்சுமணனுக்குத் தனியிடமுண்டு.  பழங்குடியினரின் மொழிகளில்  எழுதுவது என்பது மிக அரிதான நிகழ்வாகக்  காணப்படுகின்ற ஒன்று. அத்தகு சூழலில் இன்றைய படைப்புலகில்  அவர்தம் மொழியைக் கையாண்டு அம்மக்களின்  வலிகளைக் கவிதைகளாக்கித் தந்திருப்பது என்பது லட்சுமணனின் தனிச் சிறப்பாகும். அது அவரின் பேரவாவும் கூட.

லட்சுமணன் எழுதிய   ”ஒடியன்” என்ற கவிதைத் தொகுப்பில்  கோவைக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் வாழும் இருளர் இனப் பழங்குடியினரின்  வேதனைகளும்  உரிமைக் குரல்களும்  நம் செவிகளில் விழுகின்றன. அவர்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே உணர்ந்தறிய வேண்டும் என்னும் ஆசிரியரின் அக்கறை காரணமாக இருளாமொழிச் சொல்லாடல்களே  அனைத்துக் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் வாசிப்பாளனுக்கு  ஏற்படும்  சிரமம்  கருதி  ஒவ்வொரு கவிதையின் கீழும்  குறிப்புகள் இடம்பெறுகின்றன. இத்தகைய  தனித்துவம் மிக்க கவிதைத் தொகுப்பில்  பழங்குடியினப் பெண்கள் சந்திக்கும்  இடர்பாடுகள்  சில  பதிவாகியிருக்கின்றன. பெண்ணிய நோக்கில் அணுகுபவர்களுக்கு அக்கவிதைகள்  தரும் செய்திகள் புதுமையாகத் தோன்றும் என்பது திண்ணம்.

தாய்வழிச் சமூகம்

தாய்வழிச் சமூகத்தின்  மிச்சம் மீதிகளாக விளங்கும்  பல பழங்குடியினரில்  இருளர் இனத்தவரும் அடங்குவர். எனவே அம்மக்களிடையே  ’ஆணுக்குப் பெண் அடங்கி நடத்தல்’ என்னும்  புண் புரையோடிப் போயிருப்பதாக  அறிய வழியில்லை. ஆனால் அதை உணராத  பிற சமூகத்தினர் அனேகம்பேர்  அம்மலைப்பகுதிகளில்   தற்போது  வாழ்வதுண்டு.  அவர்களால்   இருளர்களின்  மரபார்ந்த  நல்ல சமூகப் பண்புகள் விமர்சிக்கப்படும்போது  ஏற்படும் முரண்  ஏளனத்திற்குரியதாகின்றது.  ஆண்மம் 2”  என்ற கவிதை வழி அந்நிலையைக் காட்சிப் படுத்துகின்றார்  லட்சுமணன்.

  ”காடூ  டவுனு

  காரமடெ

  ஏங்கே போனாலூ

  தம்மி  முன்னாலே போகின

  காளி பின்னாலே நடக்கின

  தப்புன்னா

  புருசனியே அடிப்பின

  இன்னாக்கு அச்சாமே பாக்க

 ஆனேகட்டிக்கு வந்தவாசி

 கண்டமுள்ளூல

 நாளெல்லால்லா அடீச்சாலூ

 தீருகாதில்லே  இவுங்க வெசாம்

என்னும் கவிதை  பிற  இனத்தவரிடையே நிலவும்   ஆண் பெண் சமத்துவமின்மையை நையாண்டி செய்யும்  போக்கில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

எங்கு செல்வதாக இருந்தாலும் இருளர் இனத்தவளாகிய தம்மி முன்னாலே நடக்க அவள் கணவனாகிய காளி அவள் பின்னாலே நடக்கின்றான்.  அவன் தவறு செய்தால்   இரண்டு அடி கொடுத்துத் தவறை  உணர்த்துகின்றாள். தாய்வழிச் சமூகத்தின் நடமாடும் சாட்சியாக தம்மி இங்கே காணப்படுகின்றாள். ஆனால் கீழிருந்து பிழைப்புத் தேடிச் சென்ற  பிற இனத்தவர்களுக்கு  இத்தகைய நிகழ்வுகள்  வினோதமாகத் தெரிகின்றது.  தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி  மேலெழும்பி வந்த தந்தைவழிச் சமூகத்தின்  இன்றைய சந்ததிகளாகிய  பிற சமூகத்தினருக்கு இருளர்களின்  பழம்பண்பாடு வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகின்றது.

தந்தைவழிச் சமூகம்  உருவெடுத்த நிலையில் காலங்கள் செல்லச் செல்ல  அது ஆண்பெண் சமத்துவமின்மையை  உரமிட்டு வளர்த்தெடுத்தது. காலங்கள் பல நூறாண்டு உருண்டோடிய நிலையிலும்  பெண்சமூகம் இழந்தவற்றை மீட்டெடுப்பது என்பது எளிதில் இயலாத காரியமாகவே  இருக்கின்றது.  இந்நிலையில் ஆணுக்குப் பெண் அனைத்து வகையிலும் அடங்கி நடத்தல் என்னும் கொள்கை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளர் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை அசைத்துப் பார்க்கும் ”வந்தேறிகளின்” உள்ளடி வேலைகளை உணர்ந்து கொண்ட  இருளர் இனப் பெண் அவர்களின் பார்வையினை  விஷப் பார்வையாகச் சித்தரிப்பதில் தவறொன்று மில்லை.

தங்களின்  உடல்களை அவ்வப்போது பதம் பார்க்கும்  விஷப் பூச்சிகளின் விஷத்தினை இறக்குவதற்காக  கண்ட முள்ளால்  மூன்றுமுறை அடிப்பது இருளர்களின் வழக்கம்.  ஆனால்  கீழ்நாட்டவர்களாகிய  வந்தேறிகளின்   உள்ளத்தில்  நிரம்பியிருக்கும்  விஷத்தினை   நீக்குவதற்கு  எத்தனை முறை  அடித்தாலும்  அவ்விஷம் தீராது என்பது  இருளர் இனப் பெண்ணின்  குமுறலாகத் தெரிகின்றது.  எனவே இருளர்களின்  வாழ்விலும் சில விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள்  பிற இனத்தவரின் சகவாசத்தால்   ஊடுருவுகின்றன என்பதை  மேற்கண்ட கவிதையின்  மூலம் கோடிட்டுக் காட்டுகிறார் கவிஞர்.

 விதவைக் கோலத்திற்கு விலக்களித்த சமூகம்

தாய்வழிச் சமூகத்தின்  சிறந்த பண்புகளில் ஒன்று விதவை என்ற நிலை இடம் பெறாமை.  இருளர் சமூகத்திலும்  விதவைக் கோலத்தினைக் காண்பது  அரிது. இதை உணராத பிற இனத்தவர்  கணவனை இழந்த இருளரினப் பெண்களைப் பழித்துரைப்பது  அறியாமையின் வெளிப்பாடு. கணவனை இழந்து விட்டால்  மலர், திலகம், பிற அலங் காரப் பொருட்கள், வெண்மையல்லாத பிற வண்ண உடைகள் முதலானவற்றை  துறந்துவிட வேண்டும் என்ற கட்டாய நிலை இருளர் சமூகத்தில் இல்லை.  இதனை புதிர் என்ற தலைப்பிலான கீழ் வரும் கவிதை  விளக்கிக் காட்டுகின்றது.

அப்பேங்கொடாத்த பச்செ பாவாடெ

  அண்ணேங்கொடாத்த  நீலே  சீலெ

  தொட்டில்லே ரொங்குகாதிருந்தே

  போடுகே

  கழுத்து  பாசி

  செல்லி தந்தெ

  செத்த பிந்துக்கும்

  அச்சாமேதானே கெடாக்கு 

  ‘இருளச்சிக்கு திமிரடங்கலெங்கா

  கெம்பனூரு கவுண்டிச்சி

என்ற கவிதை தரும் செய்தி மனதிற்கு இனம்புரியாததொரு நெருடலை ஏற்படுத்துகின்றது. காலங்காலமாக பெண்ணடிமையாகிய கூண்டுக்குள் இருந்து பழகிப் போன பிற சமுகத்தைச் சார்ந்த  பெண்களுக்கு  இருளர்களின்  ஆண்பெண் சமத்துவப்போக்கு  ஒருவித அத்துமீறலாகத் தெரிகின்றது. அதனால் இருளச்சிக்குத் திமிரடங்கலெ என்றதொரு  தவறான புரிதலுக்கு இடங்கொடுத்து  விடுகின்றனர். பிற சமூகத்தினரிடம்  இடம்பெற்றிருக்கும்  சில பண்பாட்டு அடையாளங்கள் பெண்களை எவ்வளவு  இழிவான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்பதை கவிதையில் இடம்பெறும்  இருளரினப் பெண்  தன் கூற்றால் விளங்க வைக்கின்றாள்.

ஒவ்வொரு பெண்ணும் தன் சிறு வயதிலிருந்தே  ஒரு சில அணிகலன்களால் தன்னை அலங்கரித்துக் கொள்கின்றாள். வண்ண உடைகளால் தன் மேனியை மூடி மறைக்கின்றாள். இது அவளுடைய தார்மீக  உரிமை. பொருளீட்ட இயலாத சிறு குழந்தையாக இருக்கும் நிலையில் அவளுடைய தந்தையும், தமையனும் அவளுக்கு வேண்டிய அவ்வடிப்படைத் தேவைகளை நிறைவு  செய்து தருவர். அந்நிலையை பிற சமூகத்தினருக்கு  நினைவு படுத்துவது போல  அப்பேங்கொடாத்த பச்செ பாவாடே; அண்ணேங் கொடாத்த நீலே சீலே; தொட்டில்லே ரொங்குகாதிருந்தே (உறங்கும் போதிருந்தே) போடுகே கழுத்துப் பாசிஎன்று  அவை ஒரு பெண் பிறந்ததிலிருந்து  அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவை  என்பதை எடுத்துரைக்கின்றாள் ஓர் இருளச்சி. இவைகளெல்லாம்  திருமணம் முடிந்த நிலையில்  கணவனால்  கொடுக்கப் பட்டவை களல்ல. ஒரு பெண் பிறந்ததிலிருந்து  அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவைகள். கணவன் என்ற ஒருவன் அவளுடைய வாழ்வில்  வந்தபோது அவன் கொடுத்த தாலி என்ற ஒன்று மட்டுமே இடையில் அவளால் அணியப்படுகின்றது.   எனவே கணவன் இறந்து விடும் நிலை உருவானால் அவன் கொடுத்த தாலியை மட்டுமே  ஒரு பெண் இழக்க நேரிடலாம்  என்னும்  நிதரிசனத்தை  மனித சமுகத்திற்கு உணர்த்துகின்ற நடமாடும் சாட்சிகள் இருளரினப் பெண்கள்.

மேலே ஓர் இருளப்பெண்ணால் உணர்த்தப்பட்ட  யதார்த்தம் மறைக்கப்பட்ட நிலையில் அல்லது மறுக்கப்பட்ட நிலையில் பிற இனத்தாரிடையே பெண்சமூகத்தின்  அத்தனை உரிமைகளும் பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்டிருந்தன. விதவைக்கோலம் என்பது ஆதிக்க சமூகம் வளர்த்தெடுத்த   அநீதிகளில் ஒன்று. இதன் மூலம் குளிர் காய்ந்த ஆண்கள் பலருண்டு. இத்தகைய நடைமுறைத் தவறுகளை பழங்குடியின சமூகம் ஒரு போதும் செய்ததில்லை. ஆனால்  குஞ்சிலிருந்து நன்கு பழக்கப்பட்ட ’கூண்டுக்கிளி’  தன்னலமனம் படைத்த ஜோசியக்காரனின்  கூண்டுதான்  தன்னைப்  பாதுகாக்கும் கவசம் என்று தவறாக எண்ணி மகிழ்வதைப் போல  பிற சமூகத்தைச் சார்ந்த பெண்களும் பெண்ணடிமை நடைமுறைகளை உணர்ந்துகொள்ளத் தவறியதோடு  அவை தம்மினத்தின் பெருமையைத் துலக்கிக் காட்டும் கவசமாகக் கருதிக் கொண்டிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும். இந்த நிலைதான் “லட்சுமணனின் கவிதையில் இடம்பெறும் ”கெம்பனூரு கவுண்டிச்சியின் மனநிலையாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது.

பெண்குழந்தைகளைப் பேணிக்காக்கும் சமூகம்

பிற சமூகங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் வேண்டா வெறுப்பாக அக்குழந்தையை   வளர்க்க முற்படுவர். சிலர் பெண்சிசுக் கொலையைச் செய்து கருவிலேயே சமாதி கட்டி விடுவதும் உண்டு.  இத்தகு அவல நிலைக்குக் காரணமாக அமைவது  வரதட்சணை என்றதொரு கொடிய நோய்  பிற சமூகங்களில் புரையோடிப் போனதன் விளைவே என்பதை அனைவரும் அறிவர்.  அதற்கான பிரதிபலனை இப்பொழுது பழங்குடி யினரல்லாத பிற சமூகத்தினர் நன்கு  அனுபவிக்கின்றார்கள். பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து போனதால் சில ஆண்களுக்குத் திருமணம் நிகழ வழியில்லாத வகையில் பெண்கிடைப்பது அரிதாகிப் போனது. ஆனால்  அதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் உருவாகாமல் இருப்பது  குறிப்பிடத்தக்கது. இத்தகு  இடைஞ்சல்கள்  இருளர் போன்ற பழங்குடியினர் சமூகங்களில் நிகழ வழியில்லை.

பழங்குடியினர்  சமுகங்களில்  வரதட்சணை மற்றும் பெண்சிசுக்கொலை போன்ற அனர்த்தங்கள் அரங்கேறுவதில்லை. பெண்மைக்குரிய மரியாதையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கி நிற்பதில்லை. எனவே பண்பட்டதொரு சமூகமேம்பாட்டினை அங்கே காண முடிகின்றது.

வாழ்வியல் முரண்பாடு

தன்னலமற்ற மனித சமூகத்தைக் காண்பது அரிதான ஒன்று.  தனக்குப் பிறக்கும் வாரிசு பெண்ணாக இருந்தால்   வருந்துகின்ற மனிதன்  தான் வளர்க்கும் கால்நடைகள்  பெண்கன்றை  ஈன்றால் மிக மகிழ்ந்து போகின்றான். மனிதனின் பொருளாதார வாழ்வியலில்  ஏற்படுகின்ற முரண்  இத்தகைய சூழல்களை உருவாக்குகின்றன. பெண்  குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி  அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை என்பதன் பெயரில் ஒரு பெருந்தொகையினை இழக்க வேண்டிய நிலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு உருவாகின்றது. வரதட்சணை கொடுக்க இயலாத நிலை உருவாகுமானால்  புகுந்த வீட்டில் பெண் நல்லவிதமாக வாழ இயலாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய இடர்பாடுகள் நிறைந்த  சமூகத்தில் பெண் பிறந்த வீட்டா ருக்கு ஒரு சுமையாக மாறவேண்டிய நிலை காணப்படுகின்றது.  அதேவேளையில்  கால்நடைகளின் பெண்கன்றுகள் கால்நடைப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைவதோடல்லாமல் பால்வளம் தருவனவாகவும் திகழ்கின்றன. கால்நடைப் பெருக்கமும், பால்வளமும் மனிதனின் பொருளாதார வளத்தினை மேம்படுத்துகின்ற போது பெண்குழந்தைகளோ பெற்றோர்களுடைய பொருளாதாரச் சரிவின் மூலகாரணமாகத் தெரிகின்றனர். இத்தகையதொரு  அவலநிலையினை  ஆணாதிக்கச் சமூகம் பழங்குடியினரல்லாத  பிற சமூகங்களில் உருவாக்கி வைத்திருக்கின்றது. இதுவே பெண்சிசு மரணத்திற்கும், சில சமயங்களில் பெண் வாழாவெட்டியாக மாறிப் போய் விடுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

பெண்சிசுக் கொலை, வாழாவெட்டி  போன்ற வாழ்வியல் சுணக்கங்களை  தங்கள் வாழ்க்கையில் கண்டுணராத பழங்குடியினப் பெண்களுக்கு  பிற சமூகங்களில் அத்தகு நிலைகளைக் கண்டபோது  அவற்றைப் பற்றி விளங்கிக்கொள்ள இயலாத நிலை உருவாகின்றது. இதனை லட்சுமணனின் ஆண்மம் 3 என்ற கவிதை  புலப்படுத்துகின்றது.   

“  ’மாடு பொட்டக்கன்னு போட்டிருக்கு

  கண்ணாலம் கணக்கா

  எல்லாத்துக்குஞ் சொல்லுக

  கோமயம் தெளிக்கினா

  கோமாளி நாய்க்கனுக்கு பொங்கல் வெக்கின

  என்னாதுக்கொ

  பொறந்தது  பேத்தியுன்னு

 பெணாங்குகா நாய்க்கச்சி.

என்ற கவிதையில்  நாயக்கரினப்  பெண்ணொருத்தி  தன் மகனுக்குப் பிறந்த  பெண் வாரிசாகிய பேத்தியை வரவேற்பதற்குத் தயங்கிய தன்மையினைக் கண்டு வியக்கின்றாள் ஓர் இருளரினப் பெண்.  அதேவேளையில் தன்னுடைய மாடு பெண்கன்றை ஈன்றவுடன்  அனைவரிடமும் சொல்லி மகிழ்கின்றாள் ‘நாய்க்கச்சி’. அத்துடன் நின்று விடாமல்  இல்லத்தினை தூய்மை செய்து தான் வழிபடும் “கோமாளிநாய்க்கன்” என்ற தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றாள். இவற்றையெல்லாம் கவனிக்கின்ற  இருளரினப் பெண் இந்நிலை ஏனென்று தெரியாமல்  குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றாள். இத்தகு காட்சிகளை நாம் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழும் மண்ணின் மைந்தர்களான இருளர்களிடமும் வந்தேறிகளான  பிற இனமக்களிடமும் காண்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிதரிசனமே லட்சுமணன் கவிதையில் பதிவாகியிருக்கின்றது.

பழந்தமிழ்ப் பண்பாட்டில் ஆண்பெண் சமத்துவம்  இயல்பாகக் காணப்பட்ட ஒன்று.  இதுவே பழங்குடியினர்  பண்பாட்டில் இன்றும் நிலைபெறுகின்றது. ஆனால் சங்ககாலச் சூழலிலிருந்து  ஆண்பெண் சமத்துவ நிலையில் சமச்சீரின்மை உருவாகிய தன்மையினை வரலாறு விவரிப்பது உண்டு. அந்நிலை இன்றைய பிற சமூகத்தினரிடையே வேரூன்றி விட்டது. அது தொற்று நோய்  போல பழங்குடியினரிடமும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே லட்சுமணன்  போன்ற சமூக ஆர்வலர்களின்  ஆசையாக இருக்கின்றது  என்பதை  ஒடியன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன.

——————————–

துணை நின்ற நூல்கள்:

  1. சுப்பிரமணியன். கா, சங்ககாலச் சமுதாயம்(1993), என். சி.பி.எச், அம்பத்தூர், சென்னை -98.
  2. திலகவதி.க. சங்ககால மகளிர் வாழ்வியல், (2001)இறையருள் பதிப்பகம், திருச்சி.
  3. பஞ்சாங்கம்.க, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், (2012), அன்னம் வெளியீடு, தஞ்சாவூர் – 07.
  4. பெரியாழ்வார்.ஆர், இருளர் வாழ்வியல், (1982), சென்னை நூலகம்.
  5. லட்சுமணன், ஒடியன் (2011),என்.சி.பி.எச், அம்பத்தூர்,சென்னை – 98.

 

1 thought on “லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் 

  1. இருளர்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் அரிய கவிதைகளை இருளர் மொழியில் (தமிழெழுத்துக்களில்) எழுதியுள்ள லட்சுமணனின் கவிதைகளை ஆய்ந்து பெண்ணுரிமைக் கருத்துக்கள் பழங்குடியினர் வாழ்வில் மிக இயல்பாக அமைந்துள்ளமையை எடுத்துக்காட்டியிருக்கும் விதம் அருமை. இருளர் மொழியை நன்காய்ந்துள்ள நீங்கள் இருளர் அகராதி ஒன்று வெளிக்கொணர்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தரவேண்டும். நன்று.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க