கிரேஸி மோகன்
—————————

மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே பற்றி எனக்கு தெரியாது. அந்நாளில் மயிலாப்பூர் லவ் மடியாக ஆச்சாரத்தோடு இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளிவிட்டு காதலர்கள் அமர்ந்து (நாங்கள் பார்த்த காதலர்களில் பாதி பேர்கள் நாலு முழ வேட்டி, காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த உள் பனியன், நெற்றியில் காதல் நிறைவேற கபாலீஸ்வரர் விபூதி, கற்பகாம்பாள் குங்குமம், சீனுவாசப் பெருமாள் தாயார் சன்னிதி மஞ்சள் காப்பு. பேசினால் அனுமார் கோயிலில் சாப்பிட்ட துளசி வாசனை தூக்கும்)
‘இவன் காதலிக்க வந்தானா?’ இல்லை கோயில் கச்சேரிக்கு தவில் வாசிக்க வந்தானா?’ என்று
எண்ணத் தோன்றும்….

சுவாரஸ்யமாக பேசியபடி பார்க் புல்லை காதலர் இருவரும் பிடுங்கி பிடுங்கி
வாயில் வைத்து கடிப்பார்கள். காதலர்கள் வருவதற்கு முன்பு ஹவுஸ்புல்லாக இருந்த பார்க் எழுந்து போகும் போது புல்லே இல்லாமல் கார்-பார்க் செய்யும் அளவுக்கு வெட்ட வெளியாகிவிடும்.
காதல் தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம், காதலில் வெற்றி அடைந்து கல்யாணமாகி தோல்வி அடைந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் அன்று நாங்கள் பார்த்த காதல் ஜோடிகளில் ஓரிரு ஜோடிகள் இன்றும்கூட அதே நாகேஸ்வரராவ் பார்க்கில் இளம் நரை, கொட்டாவி, ஏப்பம், இருமலோடு புல்லைப் பிடுங்கிக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காதலர்களை வேவு பார்ப்பதிலேயே ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்த எங்கள் மூவரில் “டயமாச்சுடா… அப்பா கோவிச்சுப்பா…” என்று அசமஞ்ஜமாக பேசும் நடராஜன், பார்க்கில் பெஞ்சில் அமர்ந்து கெமிஸ்ட்ரி படிக்கும் கெளசல்யாவைக் கண்டதும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க ஆரம்பித்தான். அந்நாளில் சைக்கிள் வித்தைகள் தெரிந்த நடராஜனை ‘ஹெர்குலிஸ்’ஸாகவே மதித்து பெண்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடராஜன் சைக்கிளை சரளி வரிசை, ஜண்ட வரிசை, கீர்த்தனம் என்று முறையாகப் பயின்ற மகாவித்வான். நானும் விச்சுவும் போட்டு தந்த திட்டப்படி கெளசல்யாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடராஜன் நாகேஸ்வரராவ் பார்க் அருகில் சைக்கிளில் அசுர சாகசங்களை செய்தான். கெளசல்யா எதிரே வரும் போது குரங்கு பெடலில் சுருதி சேர்த்துக் கொண்டு வரும் நடராஜன் தடாலென ஆரோகணத்துக்கு தாவி சீட்டில் அமர்ந்து இரண்டு கைகளையும் விட்டு பாலன்ஸ் ஆலாபனை செய்தபடி உச்சஸ்தாயியில் செல்லும்போது சட்டென்று அவரோகணமாக பின் சீட்டுக்கு இறங்கி, பின்பு அதிலிருந்து ரோட்டில் குதித்து சைக்கிளை மட்டும் தனி ஆவர்த்தனமாக சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அதை துரத்திச் சென்று ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பது போல ஹாண்டில் பாரைப் பிடித்து ஒரே ஜம்பில் சீட்டுக்கு தாவ… கெளசல்யா “நீயல்லவோ வீரன்” என்று கண்களால் தெரிவித்துவிட்டு கமிட் செய்யாமல் போய் விட்டாள்.

நடராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஓரளவு ஆகுபெயர், வினைத்தொகை தெரிந்த விச்சு
“கெளசல்யா, நீ வானம்னா நான் பூமி, நீ பூமின்னா நான் வயல்… நான் வயல்னா நீ நாத்து…
நீ நாத்துன்னா நான் வாத்து” என்ற ரீதியில் ஒரு காதல் கடிதம் எழுதித் தர… நடராஜன் அதை நேரிடையாக தந்தான். அதைப் படித்து விட்டு சிறிது நேரம் விசும்பி விசும்பி அழுத கெளசல்யா, நடராஜனின் வலது கையை பிடித்து, “கவிதை எழுதிய கைக்கு என் பரிசு” என்று செல்லமாக கையில் முத்தமிட்டு “நடராஜன்… கி.வா.ஜ.வுக்கு நீங்க உறவா?” என்று பேந்த பேந்த முழிக்கும் நடராஜனை பேசவிடாமல் “ஐ லவ் யூ” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

வழக்கம் போல காதலுக்கு மரியாதை இல்லை. “நடராஜனும் கெளசல்யாவும் பாம்பேக்கு ஓடிப்போவது” என்று நான் முன்மொழிய பின்வழிந்தான் விச்சு. ஓடிப்போகும் திட்டத்தை கெளசல்யாவிடம் தெரிவிக்கும் ரிஸ்க்கான பொறுப்பை விச்சு ஏற்றுக் கொண்டான். மறுநாள் இரவு எட்டு மணிக்கு நாங்கள் நாகேஸ்வரராவ் பார்க்கில் நுழைந்தபோது திட்டமிட்டபடி ஆலமரத்தடியில் நீலநிறப்புடவையுடன் கெளசல்யா அமர்ந்திருந்தாள். நடராஜன் அருகில் சென்று “கெளசல்யா ரெடியா…” என்று தோளைத் தொட்டு திருப்ப கெளசல்யாவின் அப்பா நீல புடவையை களைந்து, “ம்… ரெடி,
ஸ்டெடி ஜூட்” என்று சொல்லி நடராஜனை துரத்தி துரத்தி அடித்தார். டினோசர் போல
நடராஜனை புரட்டி புரட்டி எடுத்து ஒரேடியாக நாகேஸ்வரராவ் பார்க்கை ஜுராஸிக் பார்க் ஆக்கினார் கெளசல்யாவின் தந்தை.

சமீபத்தில் கெளசல்யாவை அம்பிகா அப்பளம் வாசலில் பார்த்தேன். “என்ன மோகன் செளக்கியமா…
ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு கடைக்குள் பார்த்து, ஏங்க… வாங்க யார் பாருங்க இங்க…” என்று கூற விச்சு நாலு குழந்தைகளுடன் வந்தான். கெளசல்யாவின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து நடராஜனை ஒதுக்கி இடைச் செருகலாக நுழைந்து கெளசல்யாவைக் கைப்பற்றிய விச்சுவை வில்லன் என்றும் சொல்ல முடியாது. தற்போது ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியின் ஓனராக இருக்கும் விச்சு கெளசல்யாவை சவுகரியமாக காப்பாற்றி வருகிறான். நடராஜன் மயிலையில்
சைக்கிள் கடை வைத்து பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறான். நாகேஸ்வரராவ் பார்க் அருகில் அமிர்தாஞ்சனம் தயாரிக்கும் இடம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை… நடராஜனின் காதல் “போயே போச்… போயிந்தே… இட்ஸ்-கான்” என்று ஆகிவிட்டது.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *