படக்கவிதைப் போட்டி 184-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றி!
காற்றிலேறி விண்ணைச் சாடும் நோக்கமா? இல்லை… புகைப்படத்தில் புதியகோணத்தில் காட்சிதர வேண்டும் என்ற ஊக்கமா? மனிதா உன் தேடல்தான் என்ன?
கவிஞர்கள் தம் எண்ணக்குதிரையில் பயணித்து இதற்கான விடையைக் கண்டறியட்டும்! நமக்குத் தொழில் கவிதைகளை வாசிப்பதும் அவற்றின் சிறப்பை சிலாகிப்பதுமே!
******
”ஆற்றல் மிகக்கொண்டு காற்றைக் கிழித்தெறிந்து பந்தென்று அடிப்பாயோ பரிதியை?” என்று இம்மனிதனை வியந்து வினவுகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன்.
பந்தென்று அடிப்பாயோ பரிதியை
மாலைச் செங்கதிரின்
மங்கும் இருள் சிவப்பில்
களமாடும் வெறிகொள் வீரர்
பறிபோகும் காலம்தன்னை
வசப்படுத்தும் இறுதிப் போரில்
காற்றை கிழித்தெறிந்து
ஆற்றல் மிகக்கொண்டு
ஏற்றம் மிகக்கொண்டு
மாற்றம் பலகண்டு- இகத்
தோற்றம் பல மாற
பந்தென்று அடிப்பாயோ பரிதியை
*****
”வாய்ச்சொல்லோடு முடங்கிவிடாமல் வருந்தி முயன்றால் பரிதியும் வசப்படுவது உறுதி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
தொட்டிடலாம் சூரியனை…
வந்திடும் வெற்றி யென்றேதான்
வாய்ச்சொல் மட்டும் பேசிவிட்டு
மந்தி ரித்த கோழிபோல
முடங்கிக் கிடந்தால் மூலையிலே,
வந்தி டாதே வெற்றியதனால்
வருந்தி நீயும் முயன்றிடுவாய்,
அந்த ரத்துச் சூரியனும்
அண்மையில் வந்திடும் தொடும்படியே…!
*****
”முயற்சியின் வெற்றியில் பூமியை இழந்த கால்களோடும் வானத்தை நோக்கிய கைகளோடும் தோற்றம் காட்டும் நீ, இந்தத் தலைமுறையின் தன்னம்பிக்கைச் சூரியன்” என்று தாவும் மனிதனைத் தன் பாவில் போற்றுகின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.
எண்ணியது நடந்துவிட்ட துள்ளலில்
வசப்பட வானமும்
மகிழ்ச்சியின் பெருவெள்ளமும்
இருள் சூழ்ந்துவிட்ட பூமியில்
வெளிச்சத்தை வரவேற்க
எண்ணில்லா உயிாினங்கள்
சூரியனை எழுப்பும்
ரகசியங்கள் பேசும்
இயற்கையின் உள்ளொளியில்
உன்னை உணரும் தருணம்
இறை தரிசனம்
உள்ளமது உணர்ந்துவிட்ட
ஆனந்தக் கடலில்
முத்தெடுக்க முயலும் உலகில்
முயற்சியின் வெற்றியில்
பூமியை இழந்த கால்களோடு
வானத்தை நோக்கிய கைகளோடு
தலைமுறையின் தன்னம்பிக்கை
என்றும் எழும் சூாியனாய் நீ!
*****
விண்ணில் பாயும் ஏவுகணையாய்த் தாவுகின்ற இந்த மனிதனின் தன்னம்பிக்கையில் நன்னம்பிக்கை வைத்துப் போற்றிப் பாப்புனைந்திருக்கும் பாவலருக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…
காற்றில் ஏறி வானில் மிதப்போம்!
நூல்கட்டிக் காற்றில்
பறக்கப் பட்டம் விட்டோம்
கால்கள் தவ்விக் காற்றில் ஏறிட
இறக்கை தேடினோம்
பறக்கும் பட்டத்தில் மலை மீது
நின்று குதித்து யாம்
பயணம் செய்தோம்
விமானம் செய்து உலகம்
சுற்றி வந்தோம்
சூரிய சக்தியில் ஊர்தி ஓட்டி
ஒருநாள் யாம்
உலகளந்தோம்!
ராக்கெட் வடித்து நிலாவுக்குச்
சுற்றுலா போவோம்!
செந்நிறக் கோளைச் சுற்றி
வந்து யாம்
சந்திரனில் களைப்பாறி
புவிக்கு மீள்வோம்!
நியூட்டன் காட்டும்
ஈர்ப்பு விசைக்கு அஞ்சோம்
அடிபணியோம்
எதிர்த்துப் பறப்போம்
பிரபஞ்சத் துக்கு
சுற்றுலா போவோம்!
”நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று வீரமுழக்கம் எழுப்பிய அப்பர் பெருமானைப் போல, அச்சம்விட்டு உச்சம்தொட விழையும் இம்மனிதனும் செந்நிறக்கோள் சுற்றி வெண்ணிலவில் இளைப்பாறவும், ஈர்ப்பு விசைக்கு அஞ்சாது அதனை எதிர்த்துப் பறந்து வையத்தையும் வானத்தையும் அளக்கவும் விழைவதைப் பழகுதமிழில் அழகாய்ப் பாடியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
இவ்வாரக் கவிதையாக என் கவிதை தேர்வாகி, என்னை இவ்வாரக் கவிஞராக அறிவித்த நடுவர் மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
சி. ஜெயபாரதன்