-விப்ரநாராயணன் 

தீப  வொளியை  வணங்கிடுவோம்
   தீயவை  அகல  வேண்டிடுவோம்
பாபம் தொலையப்  பாரதத்தில்
   பலரும்   சேர்ந்து   உழைத்திடுவோம்

அன்பும்  கருணையும்  சுரந்திடவே
   ஆதவன் அருளை நாடிடுவோம்
தன்னுள்   பகைமை  ஒழிந்திடவே
   தன்னிலை  யறிய  முனைந்திடுவோம்

புதிய ஆடைகள்  அணிந்திடுவோம்
    புதியக்  கவிதையாய்  வாழ்ந்திடுவோம்
விதியை நினைந்து  வருந்தாது
    வீரனாய்  வாழ நினைத்திடுவோம்

வெடிகள்  கொளுத்தி  மகிழ்ந்திடுவோம்
   வேதனைகள்  வராது  தடுத்திடுவோம்
படிகள்  தாண்டி  உயர்ந்திடவே
   பணிவாய் வாழக்  கற்றிடுவோம்

வாழ்வின்  பொருளை  அறிந்திடுவோம்
   வாய்மை கூறத்  துணிந்திடுவோம்
ஏழ்மை நீங்க  உறுதியுடன்
   எதையும் எதிர்க்க  இணைந்திடுவோம்

அறத்தின்  வழியில் நடந்திடுவோம்
   ஆணவ மின்றி  உதவிடுவோம்
புறத்தே தூய்மை  நிலைத்திடவே
   பசுமைப்  புரட்சி  செய்திடுவோம்

நாட்டில்  ஊழலை  ஒழித்திடுவோம்
   நேர்மையாய் வாழக் கற்பிப்போம்
வீட்டைச் சரியாய் அமைத்திடவே
    விளக்கமாய் உணர்ந்து செயல்படுவோம்

ஆடிப்  பாடக்  கூடிடுவோம்
   அனைவரும் இறைவனைத் தொழுதிடுவோம்
நாடும்  வீடும் நலம்பெறவே
   நாதன் திருவடி பணிந்திடுவோம்

2 thoughts on “தீபாவளி நினைவுகள்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க