ஆறுபடை அழகா…. (3)
பழனி (திருவாவினன்குடி)
பழமெதற்குப் பூவெதற்கு பழனிமலை ஆண்டவனே
பழமாகக் கனிந்து தரணியெல்லாம் மணப்பவனே
நிழலாக நின்றாலும் நினைவெல்லாம் நிறைபவனே
நிசமாக வருவாயோ நின்னருளைத் தந்திடவே ?
பாலெதற்குத் தேனெதற்கு பழனிமலைப் பாலகனே
வேலெடுத்த உனைக்கண்டால் வேதனைகள் மறையாதோ?
சொல்லெடுத்துப் பாட்டிசைத்து உனையழைக்க முருகா
சொல்லாமல் நீவருவாய் சோதனைகள் விலக்கிடவே !
தோள்சுமக்கத் துணைதேடி உனைநாடும் காவடிகள்
கண்ணிமையில் உனைநிறுத்தித் தேடிடுமே சேவடிகள்
பவனிவரும் பழநியிலே பொங்கிவரும் பால்குடங்கள்
பாசத்துடன் அணைத்திடுவாயே பக்தர்களை பழனியப்பா !
தோகைமயில் சேவல்கொடி ஏதுமின்றி நின்றாய்
போகமில்லா வாழ்வென்றும் புதிதென்று சொன்னாய்
சோகமெல்லாம் நீங்கிடுமே சொல்லிடவே உன்பெயரை
போதகனே சாதகனே புவிக்காக்கும் வேலவனே !
அவ்வையின் தமிழ்கேட்க ஓடிவந்த வடிவேலா
அகத்தியனுக்கு அருள்புரிந்த ஆனந்தத் தமிழ்வேளே!
ஆண்டியாகி நின்றாலும் அளவில்லா அருட்சுனையே
ஆவினன்குடி மலையப்பா அருள்வாயே குறைவின்றி !