-மேகலா இராமமூர்த்தி

திருமதி. ராமலக்ஷ்மி எடுத்த இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றிகள்!

இணைந்து அமர்ந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் கொஞ்சமும் பேசிக்கொள்ளாமல் செல்பேசியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் இவர்களைக் காண்கையில் தொழில்நுட்பம் மானுட வாழ்வுக்கு வரமா சாபமா என்ற எண்ணம் எழாமலில்லை.

மக்களுக்கு, நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறிவிட்ட செல்பேசியையும் அதன் நேசர்களையும் பற்றிக் கவியெழுதக் கவிஞர்கள் வருக என்று வரவேற்கின்றேன்.

*****

மூவரும் அருகிருந்தாலும் அவர்களுக்குள் ’சொல்’லெடுத்துப் பேசாமல், ஆளுக்கொரு ’செல்’லெடுத்துப் பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருக்கும் அவலத்தைத் தன் கவிதையில் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திரு. கிரிதரன்.  

ஆற்றம் கரையோரம்
ஆத்திமரம் நிழல் கொடுக்க
ஆழ்துயராம் எதுவென்று நாமறியோம்
சூழ் நிலைதான் பாதகமோ?
மூவராய் இருந்தாலும்
முணுமுணுப்பு ஏதுமற்று
முழுவதும் தொலைத்த சோகம்
முகமெல்லாம் பரவி நிற்க
திசைக்கொருவராய் தனித்தே சென்றார் நிஜத்தில்
யாரோ ஒருவர் குரல் கொடுக்க
நிஜம் திரும்பும் நிலைபோல
காலம் கடத்தும் காரணமோ?
வெற்றியோ தோல்வியோ
வேண்டும் விடைதனிலே
பரவி நிற்கும் சந்தேகம்
விடையறியா மானிடனே
காத்து இரு கனிந்து வரும் காலம்.

*****

அவசர உலகில் எல்லாமும் எல்லாரும் அந்நியப்பட்டு நிற்கும் வெறுமைநிலையைத் தன் கவிதைவழி அருமையாய் விளக்குகின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.

அவசர உலகில்
நடப்பதற்கு பயிற்சி
இருப்பதற்கு முயற்சி
தேடி அலைந்து கண்ட 
மகிழ்ச்சியில் நானும் இல்லை
நாதியும் இல்லை
எல்லாவற்றுடனும் நான்
அந்நியத்துடன்
வெறுமையின் நிழல்
நீக்கமற திசைகள் 
எல்லாம் தப்பிக்க வழியில்லை
அா்த்தமற்ற கண்களொடு அவர்கள்.

*****

”அண்டைவீட்டுக்காரரையும் அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது கைப்பேசி” என்று அதன் வீரியத்தை நேர்மையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கடிவாளமாய்…

நண்பர் நால்வர் சேர்ந்தாலே
நன்றாய்ப் பேசி ஒன்றாகப்
பண்புடன் நடந்த செயலெல்லாம்
பழங்கதை யாகிப் போனதுவே,
அண்மையில் வந்தே அமர்ந்தாலும்
அடுத்த வீட்டுக் காரரையும்
கண்ணில் படாமல் வைத்திருந்தே
கட்டிப் போட்டிடும் கைபேசியே…!

 ***** 

”மாந்தர்களே! ஊடக அலைகளோடு நாடகமாடியது போதும்! இனியேனும் உணர்வலைகளுக்கு இடம்கொடுப்போம்! உயிருள்ளவர்களாய் வாழ்வோம்!” என்று நல்லறிவு கொளுத்துகின்றார் முனைவர் மு. புஷ்பரெஜினா.

அருகில் இருந்தாலும் … தொலைவே

அந்த நாள் ஞாபகங்களை
அண்டையில் அல்ல
அலைகளில் அனுப்பி விட்டு
உணர்வால் உறவால் அல்ல
தண்ணீர்க்குழாயில் தஞ்சமடைந்து
இணைந்துள்ளனர்!
இப்போது உறவுகள் எல்லாம்
உல்லாசமாக வாழ்வதற்கே தவிர
உணர்வு பரிமாற்றத்திற்கு அல்ல.
ஊடக அலை மறுத்து
உணர்வலைக்கு இடம் கொடுப்போம்!
உண்மைக்கு வழிவிடுவோம்
உயிருள்ளவர்களாக வாழ்வோம்…

*****

ஒன்றையொன்று பார்த்திடா ஒன்பது கிரங்களைப்போல் உண்மை உறவுகளை, நட்புகளைப் புறந்தள்ளி, தொல்லைபேசியையே மானிடர் அல்லும் பகலும் அணைத்துறவாடும் இழிநிலை என்று மாறும்? என்று கேட்கும் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா, ’கேட்டினும் உள்ள உறுதி’போல் தொல்லைபேசியிலேயே மக்கள் மூழ்கிக்கிடப்பதால் அடுத்தவர்க்கு அல்லல் செய்ய யாருக்கும் நேரம் இல்லையே! என்று பகடியும் செய்கிறார்.

தொல்லை பேசி

ஒருவரையொருவர் பார்த்திடாத
ஒன்பது கிரகச் சிலைகளைப் போல
உறவு, நட்பு, பரிச்சயத்திற்கென
உயர்ந்த மதிப்பெதும் அழித்திடாது
உற்றுப் பார்க்கத் தம்மை மட்டும்
உலகமெங்கும் தொல்லை பேசிகள்
மாந்தர் கைகளில் வலம்வரும் பாங்கு
எங்கு போய் முடியும்? என்னதான் நடக்கும்?

தெருத்தெருவாய் செல்பேசி தன்னைக் காதில்
செருகியவா றுலகத்து மாந்தரெல்லாம்
சிரித்திடவும் விரும்பாது பிறரைப் பார்த்து
திரிகின்றார் தெரியாத தெருவைக் கேட்க
ஒருத்தரைத்தான் தேடிடினும் கிடைப்பதில்லை
ஒவ்வொருவர் காதிலுமோர் தொல்லைபேசி
வருத்தமிந்தத் துயர நிலை வழிகாணாது
வருவோர்கள் புதிதாயோர் ஊரில் நிற்பார்.

காதில்லைத் தீயவற்றையுற்றுக் கேட்கக்
கண்ணில்லைக் கொடுமைகளைய வதானிக்க
கையில்லைத் தீச்செயல்கள் செய்ய யாவும்
கைத்தொலை்லை பேசிகள்மேல் கவனம் வைக்கும்
தீதில்லையதனாலே உலகிற் கிந்த
ரெலிபோன்கள் அமைதிக்கும் வழிவகுக்கும்
ஆதலினால் தொழில் நுட்பம் எமக்கு ஈந்த
அரியதொரு பரிசன்றோ தொல்லை பேசி.

*****

இவ்வார நிழற்படத்துக்குத் தத்தம் சிந்தனைகளின் அடிப்படையில் நயமான கருத்துக்களை நல்ல கவிதைகளாக்கித் தந்திருக்கின்றார்கள் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

ஆத்தங்கரைச் சோறு

ஆளுக்கொரு திசையில் பொருளீட்ட
ஆழி கடந்து சென்ற பின்னும்
அலுக்கவில்லை எங்களுக்கு
ஆத்தங்கரைச் சோறு, மீண்டும் சந்தித்து
அன்றைய நாள் போல
அமர்ந்துள்ளோம் அருகருகே
அரிசிச் சோற்றை உருட்டிக் கொடுக்க
ஆச்சி இல்லாத குறை தான்!
அருமை நண்பன் பேசி வரவழைப்பான்
அறுசுவை பிரியாணி!
அது வரும் நேரம் வரை
அடுத்தமர்ந்த நண்பனுடன் கை
அகலக் கைப்பேசியில் விளையாடுகிறேன் கைப்பந்து
அரச மரத்தில் ஏறி அமர
ஆல விழுதில் ஊஞ்சலாட
ஆசைதான், செய்வோம் அதையும் இனி
ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளில்!

”ஆழிகடந்து வேலைசெய்யும் ஊழ் அமைந்துவிட்டாலும் ஒருகாலத்தில் ஒன்றாய் அமர்ந்துண்ட ஆற்றங்கரைச் சோறு அலுக்காததால் மீண்டும் கூடியிருக்கிறோம் மரத்தடியில். இதோ வந்துவிடும் பிரியாணி சிறிது நேரத்தில்; தந்துவிடும் பழைய மகிழ்ச்சியை எங்களுக்கு!” என்று ஆவலோடு காத்திருக்கும் நண்பர்களைத் தன் பாவிலே காணச்செய்திருக்கும் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 186-இன் முடிவுகள்

  1. வாய்ப்பு கொடுத்த வல்லமை மின்னிதழுக்கும், என் கவிதையை சிறந்த கவிதையாக அறிவித்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  2. வாழ்த்துக்கள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *