எழுத்து – 9
ரங்கராட்டினமாய் மனதில் தினம் கட்டமிடும்
சதுரங்க ஆட்டம் தான் எழுத்தும்.
மதுரமான மூளை சார்ந்த தந்திரமும்
மதுரச மதியூகக் கலை அறிவியல்.
கிடையாகவும் செங்குத்தாகவும் எழுத்துக்கள் நகர்த்தி
குதிரை, ராசா, ராணி மந்திரிகளுடன்
காய்களை அசைத்துத் தமிழ்க் கோட்டையேறும்
ஐம்புலன் அறிவுச் செல்வம் தமிழ்.
சீவனில் மலர்ந்த எழுத்து வற்றாத
சீவ நதி…மாறாத முற்றத்து மணல்
சீர் செய்து கலைத்துக் குவித்தல் போல
சீண்டிக் குலைத்து திரும்பக் கட்டும்
சீரிய பணியே எழுத்து. மாந்தர்
சீர்ப்பாட்டில் நாளானாலும் நழுவிடாது எழுத்து.
சீலமுடை எழுத்து மகா சமுத்திரம்.
பாலமிடுங்கள் பண்புடன் பாதுகாக்க! எம்முயிர்!
எங்கு விழுந்தாலும் நதி தன்
பங்கில் வழி கண்டு கடல் சேர்தல் போல
மங்காத எழுத்துமதன் வழி காணும்.
பொங்கும் எழுத்தால் ஏறும் வாசனைத்
திரவியம் மழைக்காலத் தேநீரின் கதகதப்பாய்
அரவணைத்தல் அலங்கார உற்சவ அனுபவமே!
அரவிந்தத் தமிழை தாலியின்றி மனது
கரவின்றிச் செய்த புனிதத் திருமணமிது
மனமெனும் அடர்வனத்துள் ஒளி பாய்ச்சும்
இனமறியா கதிர்வீச்சே! அறிவை மெல்லிசையாய்,
கனமழையாய் சுரம் பாட வைப்பாய்!
தனமாய் விரிந்த உள்ளங்கையாய் இருப்பாய்!
கனமென்று யாராலும் ஒளித்திடவியலாத எழுத்து (அறிவு)
தினமாய் செவிகாள் கேண்மின்களே! கற்கண்டினம்!
மனம் இனிக்க கண்காள் காண்மின்களே!
வனமெனும் வார்த்தை விண்மீன் தடாகமுலகம்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் 12-11-2018