நாகேஸ்வரி அண்ணாமலை

சிங்கப்பூர் கோலாலம்பூரிலிருந்து 1963-இல்  பிரிந்து தனி நாடாகியது.  உலகிலேயே ஒரே ஊர் உள்ள நாடு சிங்கப்பூர் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.  கோலாலம்பூரில், நம் இந்தியாவில் போல் இல்லையென்றாலும் சாலை விதிகளை எல்லாரும் அவ்வளவு ஒழுங்காக மதிப்பதில்லை.  ‘நட’ என்ற குறி வரவில்லையென்றாலும் மக்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்து விட்டு வாகனங்கள் வரவில்லையென்றால் சாலையைக் கடக்கிறார்கள்.  குப்பைகளைக் குப்பைக் கூடைகளில்தான் போட வேண்டும் போன்ற விதிகளையும் எல்லோரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.  ஆனால் சிங்கப்பூரில் இதையெல்லாம் பார்க்க முடியாது.  சிங்கப்பூர் அரசு கெடுபிடியானது.  அங்கே எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்க வேண்டும்.  அது மலேசிய ஃபெடெரேஷனிலிருந்து பிரிந்ததற்கு.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!

மலேசியாவில் தமிழ், சீன மொழிகளுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுத்தாலும் மலாய் மொழிதான் ஆட்சி மொழி.  ஆனால் சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகள்.  ஆங்கிலம் செயல்படும் ஆட்சி மொழி. இருப்பினும் மலாய், சீன, தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரையும் அணைத்துக் கொண்டு போவதுதான் முன்னேற்றத்திற்குச் சிறந்த வழி என்று சிங்கப்பூர் அரசு உணர்ந்திருப்பது போல் தெரிகிறது.  எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.  ஊரெங்கும் அறிவிப்புப் பலகைகள் நான்கு மொழிகளிலும் இருக்கின்றன.

சிங்கப்பூரில் நடந்த அகில உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டிற்கு மூன்று நாட்களும் ‘மூன்று பெரிய அரசியல் பிரமுகர்கள், இதில் இருவர் அமைச்சர்கள்’ மாநாட்டு அமைப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வந்திருந்தனர்.  ஒருவர் சீன இனத்தைச் சேர்ந்தவர். இப்படி வந்தவர்கள் பெரிய ஆரவாரத்தோடு வரவில்லை.  அவர்களுடைய மெய்க்காப்பாளர்கள், செயலாளர் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.  மாநாட்டு அமைப்பாளர்களும் மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்களும் கூறியதைக் காதில் வாங்கிக் கொண்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.  தமிழ் வளர்ச்சியிலும் தமிழர்கள் நலனிலும் அவர்கள் அக்கறை காட்டியதாகத் தெரிந்தது.

சிங்கப்பூருக்கு ஒரு தடவையாவது போய்வர வேண்டும் என்று பல தென்னிந்தியர்கள் நினைப்பதிலும் ஏங்குவதிலும்  நியாயம் இருப்பதாகவே படுகிறது.  இதன் சிறப்புக்களில் ஒன்று வளம்.  கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் இந்த நாடு வளமை அடைந்திருக்கிறது.  ஊர் முழுவதும் நவீனமான பல மாடிக் கட்டடங்கள்.  சாலைகள் எல்லாம் நேர்த்தியாகக் காணப்படுகின்றன, சுத்தமாக இருக்கின்றன.  மக்கள் எல்லோரும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடை அணிந்திருக்கிறார்கள்.  பிச்சைக்காரர்கள் என்ற ஒரு வர்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கப்பூர்ப் பொருளாதாரம் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு ஐம்பது அமெரிக்கக் காசுகள்.  இப்போது ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு எண்பத்தேழு அமெரிக்கக் காசுகள்.  ‘எங்கள் கரன்சி (currency) அமெரிக்கக் கரன்சியோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுகிறது’என்றும் ‘எங்கள் சிங்கார சிங்கப்பூர்’ என்றும் தங்கள் நாட்டை வர்ணிக்கும் சிங்கப்பூர் தமிழர்கள் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள்.

இங்கு வாழும் தமிழர்களுக்கு இங்குள்ள வளத்தை அனுபவிப்பதோடு இங்கு இன்னொரு சௌகரியமும் இருக்கிறது.  சிங்கப்பூர் இந்தியாவிற்கு அருகில் இருப்பதால் இந்தியச் சாமான்கள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன.  தமிழ்நாட்டுக் காய்கறிகள் எல்லாம் அன்றன்றே தமிழ்நாட்டிலிருந்தே வந்து விடுவதால் தமிழ்நாட்டிற்கு வெளியே கிடைக்காத சில காய்கறிகள் சிங்கப்பூரில் கிடைக்கின்றன.  மைசூரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றிருந்த எனக்கு தென்தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கும் சிறிய பாகற்காய்களைக் (இதை எங்கள் ஊரில் குருவித்தலைப் பாகற்காய் என்போம்) கண்டபோது இன்ப அதிர்ச்சியே ஏற்பட்டது.  மல்லிகைப் பூவும் செண்பகப் பூவும் பறித்த பக்குவத்திலேயே கிடைப்பதால் சிங்கப்பூர் இந்தியர்களுக்கு அவற்றைத் தலையில் சூடிக்கொள்வதற்கும் இறைவனை அலங்கரிப்பதற்கும் வசதியாக இருக்கிறது.

குட்டி இந்தியா (little India) என்று கோலாலம்பூரில் போல் இங்கும் ஒரு பகுதி இருக்கிறது.  இந்தியாவில் கிடைக்கும் எல்லாச் சாமான்களும் இங்கு கிடைக்கின்றன. இந்துக்களின் ஆன்ம தாகத்தைத் தணிக்கப் பல இந்துக் கோயில்கள் இங்கு இருக்கின்றன.  தீபாவளிக்கு இங்குள்ள வீதிகள் எல்லாம் சிறப்பாக அலங்கரிக்கப் படுகின்றன.  இந்திய உணவு வகைகளை வழங்கும் பல உணவகங்கள் இருக்கின்றன.  இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புடவைகள், சூடிதார்கள் விற்கும் பல கடைகள் இருக்கின்றன.  ஜப்பானிலிருந்து புடவை டிசைனில் பல ஜப்பானிய துணி ரகங்கள் கிடைக்கின்றன.  (மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பெண்கள் புடவை உடுத்திக்கொள்வது இப்போது மிகவும் குறைந்து வருகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)  நகைக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை.  தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருக்கும் இந்த நேரத்திலும் தங்க விற்பனை இங்கு நடந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது.

வளர்ந்துவிட்ட பல நாடுகளில் இருப்பது போலவே சிங்கப்பூரிலும் குறைந்த சம்பளத்திற்கு வீட்டில் வேலை செய்ய வேலைக்காரர்கள் கிடைக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போது வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள பிற நாடுகளிலிருந்து ஆட்கள் கிடைக்கிறார்கள்.  ஆனால் இது அரசு அனுமதியோடுதான் நடக்க வேண்டும்.  இங்குள்ள சீன, மலாய், இந்திய வம்சாவளியினரில் யாரும் வீடுகளில் வேலை செய்யும் அளவிற்கு வசதியில்லாமல் இருப்பதாகத் தெரியவில்லை.  அதனால் அரசு இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற வசதி குறைந்த நாடுகளிலிருந்து வீட்டு வேலை செய்வதற்குப் பெண்களை வரவழைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கிறது.

இப்படி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்பவர்கள் அப்படி வேலை செய்பவர்களுக்கு அரசு நியமித்திருக்கும் சம்பளத்தைக் கொடுப்பதோடு அரசிற்கும் 360 சிங்கப்பூர் டாலர்கள் கட்ட வேண்டுமாம்.  வயதானவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை நியமித்துக் கொண்டால் மட்டும் இந்தக் கட்டணத்தில் பாதிக் கட்டணம் செலுத்தினால் போதும்.  வேலை செய்ய வந்திருப்பவர்களுக்கு வீட்டோடு தங்கிக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.  இப்படி வேலைக்கு வைத்துக் கொள்பவர்களை இரண்டு வருடங்கள் வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.  இடையில் பிடிக்கா விட்டால் அனுப்பி விடலாமாம்.  பிடித்தால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடி ஓப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும்.  இப்படிப் பத்து வருடங்கள் நீடிக்கலாம்.  அதன் பிறகு வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இவர்கள் தாயகம் திரும்ப வேண்டும்.  ஒரு வருடம் கழித்து இதே மாதிரி அவர்கள் வீட்டு வேலைக்கு வரலாம்.

இந்தியாவிலிருந்து வருபவர்களைத் தேர்ந்தெடுக்க  பல ஏஜென்ஸிகள் இருக்கின்றன.  சிங்கப்பூர் செல்ல விரும்புபவர்களிடம் இவை ஒரு லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன.  தங்கள் நாட்டில் எதையும் கட்டுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு, இந்தியாவிலும் இந்த ஏஜென்ஸிக்கள் செய்யும் ‘இந்திய அரசு செய்யத் தவறிய’ தவறுகளையும் கட்டுப் படுத்தலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

சிங்கப்பூரில் பல இனத்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வாழப் பல திட்டங்களை அரசு வகுத்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்தவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கலாம் என்று விதி இருக்கிறது. எந்த இனத்தைச் சேர்ந்தவர் தன் வீட்டை விற்க விரும்பினாலும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதை விற்க வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் அந்தப் பகுதியில் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் விகிதாச்சாரம் மாறுபடாமல் இருக்கும் என்பதற்காகத்தான் இந்த விதி.

சுற்றுச்  சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க அரசு தனிப்பட்டவர்கள் கார் உபயோகிப்பதை வெகுவாக   அதைரியப்படுத்துகிறது. கார்களின் விலை அதிகம்;  கார் வைத்திருப்பவர்கள் கட்ட வேண்டிய வரி அதிகம்;  அதை ஊரின் முக்கிய வீதிகளில் ஓட்டிச் செல்ல தனிக் கட்டணம் வேறு.

வளர்ந்து விட்ட நாடுகளைப் பீடித்திருக்கும் ஒரு வியாதி சிங்கப்பூரையும்  பீடித்திருக்கிறது.  திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதுதான் இது.  பல குடும்பங்களில் ஓரிருவராவது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.  இது ஒரு புறம் இருக்க, பல இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அல்லது தங்கள் பிள்ளைகளின் துணை ஒரு இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  நம் கலாச்சாரத்தை விட்டு விடாமல் இருப்பதற்கு இது ஒரு வழி என்று நினைக்கிறார்கள்!

மற்ற வளர்ந்து விட்ட நாடுகளில் போல் இங்கும் பிளாஸ்டிக் உபயோகம் நிறைய இருக்கிறது.  உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் ஒவ்வொரு நிகழ்ச்சி ஆரம்பத்திலும் கலந்து கொண்ட பேராளர்கள் அனைவருக்கும் அவர்கள் இருக்கைகளுக்குப் பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள்.  அடுத்த நிகழ்ச்சியில் மறுபடி இன்னொரு முறை எல்லோருக்கும் ஒரு பாட்டில்.  முதல் முறை வைத்திருந்ததை அவர்கள் முழுவதும் உபயோகித்தார்களா என்று பார்த்ததாகத் தெரியவில்லை.

சிங்கப்பூரில் தனிமனித வாழ்வில் அரசின் தலையீடு அதிகமாக இருந்தாலும், பிரிட்டன் நம்மை ஆண்டு வந்த காலத்தில் அங்கு கடுமையாக உழைப்பதற்குச் சென்ற இந்தியர்கள் இப்போது வசதியாக வாழ்கிறார்கள் என்பதை எண்ணும்போது மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கிறது.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *