தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

0

பேரா.பெஞ்சமின் லெபோ

பகுதி -6   ஆ  :அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?

சென்ற பகுதியில் ‘அருந்துதல்’  என்ற சொல்லும் அதன் இக்காலப் பயன்பாடும் சரியானவையே என்று பார்த்தோம்.
இனி இப்பகுதியில் அச் சொல் இலக்கிய வழக்கில் எப்படிப்  பயன்பட்டது  என்று காண்போம்.
திருவள்ளுவர் அதனை ‘உண்ணுதல்’ என்ற பொதுப் பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். (குறள் : 942).

இதுவரை பார்த்த எதிலும்  காவியங்கள் ஒன்றையும் சுட்டிக் காட்டவில்லை. அந்தக்  குறையை இந்தப் பகுதியில் தீர்த்துக்கொள்வோம். கன்னித்  தமிழில் சொல்லெடுத்துக்  காவிய மாளிகை கட்டியவன் கம்பன் அல்லவா!

‘அருந்தல்’, என்ற சொல்லை அவன் கையாளும் வகையைத் தேடுவோமே :
காதோரம் நரை கண்ட மாவீரன் தசரதன் கரிய செம்மலுக்கு முடி சூட்ட உரிய நேரம் வந்தது என்று அமைச்சர்களை அழைத்து மந்திராலோசனையில்  அமருகிறான்.

‘பவம் அற வேண்டுமெனில் தவம் செய்தல் வேண்டும் ; அது அமுதத்துக்கு ஒப்பானது.
அதை விட்டுத் தீ நஞ்சை உண்ணலாமோ!’ என்ற பொருள் பட
‘அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ?’
என்று தசரதன் கேட்கிறான்.

இந்த இடத்தில் ‘அருந்தல்’ என்ற சொல்லுக்குச் ‘சிறிது உண்ணுதல்’  என்று பொருள். நஞ்சைச் சிறிது தான் உண்ண இயலும், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு என்பது போல.

பாவாணர் காட்டுவதும் இப்பொருளே. இக்காலத்தே  இப்பொருளில் இச் சொல் பயன்படுகிறது :
காட்டு : மறவாமல்  மருந்து அருந்துக!  ; அவன் மது அருந்தினான்.

இன்னொரு பாடலைப் பார்ப்போமா? கம்பன் காவியத்துள் நுழைந்து விடடால் –
சொல்லும் பொருளும் மனத்தை வெல்லும், வெல்லும்!
அப்படி ஒரு பாடல் இதோ :

அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்துமென் றழுங்கும்
விருந்து கண்டபோ தென்னுறு மோஎன்று விம்மும்
மருந்து முண்டுகொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித் திடவுமாண் டெழாதாள்’.

அசோக வனத்திலே அமர்ந்திருக்கிறாள் சீதை. எப்படி?
இருந்த இடம் செல்லரித்துப் போய் இருக்கிறது ;
அதனைக் கூட உணராமல் ; உடல் மட்டும்தான் அங்கே
உணர்வெல்லாம் கைப் பற்றியவனைச்  சுற்றியேதான்.

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு’ என வீறாப்புப்  பேசியவள்
தன்  மடமையால் கொண்டவனைப் பிரிந்து அரக்கனின் சிறையில் கிடந்து வாடுகிறாள் ;
கடந்த காலத்தில் நடந்தவைகளை எண்ணி எண்ணி அவனைத் தேடுகிறாள்.

‘விருந்தெதிர் கோடலும் இழந்தவென்னை’ எனப் புலம்பும் கண்ணகியைச் சீதையில் காட்டுகிறான் கம்பன்.
பாடலின் இரண்டாம் வரி இதனை உணர்த்துகிறது.
முதல் வரியில், மனைவிக்கே உரிய  பரிவை, பாசத்தைக் காட்டி விடுகிறான் கம்பன்  !

‘கணவன் மிக விரும்பி உண்ணும் உணவை – கீரைக் கறியை  – யார் சமைத்துத்  தருவார்கள்?
உண்ணாமல் இருந்தால் அவன் உடம்பு என்னாகும்… ‘என்று எண்ணி எண்ணி அழுகிறாளாம்.
‘அருந்தும்’ என்ற சொல்லை இரு முறை பெய்கிறான் கமபன்,  இங்கே.
இவ்விரு இடங்களிலும் ‘உண்ணுதல்’ என்ற  பொதுப் பொருளில் தான் அச்சொல் வருகிறது.

கொஞ்சம்  இடம்  கொடுத்தால் போதும், கம்பன் முழு மடத்தையும்  பிடுங்கிக் கொள்வான்.
எனவே அவனைக் கண்டு கொள்ளாதது போல்  மேலே செல்வோம்.

கம்பன் அடியொற்றிக் காவியம் செய்தவர் வீரமாமுனிவர் என்பர். அவரின் தேம்பாவணிக் காவியத்தில்
ஒரு காட்சி :
ஊருக்கு உலகுக்கு எல்லாம் உறு துயர் களையும் எம்பிரான் ஏசு பிரானிடம் அன்னை மரியாள்
நொந்தழும் உள்ளத்தோடு கேட்கிறாள்:
சொந்த வீட்டில் தந்தை நோய்க் கொடுமையால் வாடக்  கண்டும்
இறைமகன் சிந்தை இரங்காமல் இருக்கும் காரணத்தை.
அப்போது எம்பெருமான் ஏசு பிரான் கூறுகிறார்  :

“நோய் அருந்தல் இவற்கு என, நொந்து உடல்
காயம் உண்டல் எனக்கு என, கண்டு உளம்
தீ அருந்தல் உனக்கு என, சீர்த்த ஓர்
தூய் அருந் தயைச் சூட்சி இது ஆம்” என்றான். (தேம்பாவணிபாடல்  3  – ஆம் கண்டம் பிணி தோற்றுப் படலம் பாடல் 22 )

வானகத் தந்தையின் வாக்கே வேத வாக்கென வாழ்ந்து  வந்த வள்ளல் சொல்கிறார் :
” அம்மா! மண்ணுலகத் தந்தை (சூசை) தன் நோயை அனுபவிக்கவேண்டும், உலகினர்  பாவத்திற்குப் பரிகாரமாக  நான் படுகாயம்  பட வேண்டும், இவற்றைக் கண்டு கண்டு தீயென வேதனை நீயுற  வேண்டும். இதுவே இறைவன் திருச் சித்தம்”.

இங்கே அருந்தல் என்ற சொல்  இரு முறை வருகிறது.  ஒரே பொருளைத் தருகிறது. ஆனால், உண்ணல என்ற பொருள் இங்கே இல்லை. புதுப் பொருளை உணர்த்துகிறார் வீரமாமுனிவர். துய்த்தல், அனுபவித்தல் என்ற பொருள் இப்பாடலில்  தொனிக்கிறது.

இன்னொரு  பாடலில் இச் சொல்  ஐந்து முறை வருகிறது :
‘புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ,
செவி அருந்திய கேள்வியர், தே அருள்
அவி அருந்தல் அல்லாது, அருந்த ஒன்று இலா,
நவி அருந்திய நல் உடல் வாடும் ஆல்’
(தேம்பாவணி :
முதற் காண்டம் மகிழ்வினைப் படலம் பாடல் 44. )

முதல் அடியில் வரும்              அருந்திய = விழுங்கிய ;
இரண்டாம் அடியில் வரும்     அருந்திய = பருகிய
மூன்றாவது அடியில் வரும் அருந்தல் = உண்ணுதல்
மூன்றாவது அடியில் வரும் அருந்த = உண்ண
நான்காம் அடியில் வரும்         அருந்திய = உண்ட
உண்ணுதல் என்ற பொதுப் பொருளிலும், விழுங்கிய, பருகிய என்னும் சிறப்புப் பொருள்களிலும்
இச்சொல் பயின்று வருகிறது.

பெரிய புராணம் பக்கம் போவோமா? கண்ணப்ப நாயனார் புராணம் பாடல் 742 :

‘மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார் “வழிவந் தாற்ற
வுற்றது பசிவந் தெம்மை யுதவிய விதனைக் காய்ச்சிச்
சற்றுநீ யருந்தி யாமுந் தின்றுதண் ணீர்குடித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோ மெல்ல” வென்றார்’.

இங்கே அருந்தி, தின்று, குடித்து என மூன்று  சொற்கள் இடம்  பெறுகின்றன.
முதல் இரண்டும் உண்ணல் என்ற பொதுப்  பொருளிலும்
மூன்றாவது உண்ணல் என்பதின் சிறப்புப் பொருளிலும் வந்துள்ளன.

அபிராமி அந்தாதி 5  – ஆம் பாடலில்

‘பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்

திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே’.

என வருகிறது. இங்கும் அருந்திய என்னும் சொல்லுக்கு ‘உண்ட’ என்பதே பொருள்.

இப்படி நிறைய எடுத்துக் காட்டுகள் (காஞ்சிப் புராணம், அறப்பளீசுரச் சதகம்,  நிட்டானுபூதி …. எனப்) பலப்பல இலக்கியங்களில் இருந்து காட்டிக்கொண்டே போகலாம்.இருஹ்டியாக இரண்டு :19  – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் பாடுகிறார் :

‘அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்

அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக’

(திருவருட்பா இரண்டாம் திருமுறை 38. சிவபுண்ணியத் தேற்றம்)

இங்கேயும் ‘அருந்துதல்’ = உண்ணுதல்

20  – ஆம் நூற்றாண்டின் இருபெருங் கவிஞர்களில் ஒருவரான பாரதிதாசன்,

மொள்ளையிலே “உயிர்” என்பார் பார்த்தி ருத்தல்
முறைதானோ என்றுரைத்தாள் அன்னம்! வேலன்

அள்ளையிலே காதல்,அதை அருந்தல் இன்பம்!
அகமொத்து மேல்நடத்தல் அறமாம் என்றான்’.

எனப் பாடுகிறார். (பாரதிதாசன் பாண்டியன் பரிசு)இங்கே, வீரமாமுனிவரைப் போலவே, பாரதிதாசனும், இக் சொல்லைத் துய்த்தல் என்ற பொருளில் கையாளுகிறார்.

இது வரை பார்த்ததில் ‘அருந்துதல்’ என்ற சொல் இலக்கியத்தில், சில இடங்களில் ‘துய்த்தல்’ எனற் பொருளில் வந்தாலும் ‘உண்ணல்’ என்ற (பொதுப்) பொருளில்தான் பெரும்பான்மையாகப் பயின்று வந்துள்ளது.

இதே பயன்பாட்டில் தான் இன்றும் இச் சொல் தமிழகத்தில் வழங்கி வருகிறது. எனவே, சிங்கப்பூர் நண்பர் இளங்குமரன் குறிப்பிட்ட

‘நான் உணவருந்தினேன் ; கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்….,

உணவருந்தும் நேரம்….இதில் அருந்துதல் என்ற பயன்பாடுகள் ‘
‘உண்ணுதல்’ என்ற பொருளில் வருவது சரியே, மிகச் சரியே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.