படக்கவிதைப் போட்டி – 217

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 217

 1. காலமும் கரைத்துத் தான் பார்த்தது
  கடந்து நிற்கும் சிலையும்
  மறைந்து நிற்கும் வரலாறும்

  மனிதச் சிந்தனைக்கு எட்டாத அறிவில்
  சற்று முயற்சிக்கத் துணியும் பறவை

  ஏதேனும் உணர்ந்து விட்ட துணிவில்
  பறந்த களைப்புக் காற்றோடு போனாலும்
  வரலாற்றுத் தடத்தில் தன் சிந்தை
  விலக மனமற்று அமர்ந்திருக்கும் அது.

  மன்னனின் ஆசையில் முகிழ்த்த சிலை
  அவன் மறைந்தும் தான் வாழும்
  மகத்துவத்தை உலகுக்குக் காட்டும் விந்தை .

  நீண்ட வாழ்தலின் ரகசியம் கேட்டு
  ஒரு பறவையின் நீண்ட நிற்றல்
  வெற்றிக்கிட்டும் என்ற நப்பாசையில்.

 2. ஒரு பறவையின் பெருந்தன்மை…
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  ஈசனுக்கு அடியானே.. உனை இதயம் கவர
  வடித்த சிற்பி இன்றில்லை.. இருந்திருந்தால்..
  அவன் இதயமே நின்று போயிருக்கும்..
  பொலிவிழந்த உன் நிலை கண்டு..!!

  தமிழன் ஒரு அடிமுட்டாள்.. தான்
  வாழ்ந்த வரலாறை பாதுகாக்கத் தெரியவில்லை..
  வெள்ளையனால் வீழ்ந்தைப் போற்றிக் காக்கிறான்..
  பூம்புகாரைப் போற்றவில்லை.. கீழடியைக் காக்கவில்லை..!!

  கயவர் கூட்டத்தாலும்.. கால வெள்ளத்தாலும்..
  மறைந்த திரவியங்கள் ஏராளம்.. ஏராளம்..
  இருக்கின்ற சிலவற்றையேனும் பேணாமல் தனது
  வரலாறு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறான்..!!

  நல்லதை விட்டுவிட்டு நாகரிகமென்ற பெயரில்
  நரகத்திற்கு ஒப்பான பண்பாடுகளில் திளைக்கிறான்..
  தாய்மொழி கற்றுத்தராததை வேற்று மொழிகள்
  தந்திடுமென நம்பி ஏமாந்து போகிறான்..!!

  நந்தியே.. சிதிலமடைந்த உன்னைத் தமிழன்
  நட்டாற்றில் விட்டுவிட்டதாய் நீ எண்ணிவிடாதே..
  நானிருக்கிறேன்.. வானவில்லின் வண்ணங்களைக் கொணர்ந்து
  என் சிறகுத்தூரிகையால் உன்னை மெருகேற்றுகிறேன்..!!

 3. இன்றே நன்று…

  காலக் கறையான் அரிப்புக்குக்
  கோவில் சிலையும்
  விதிவிலக்கல்ல..

  கும்பிடும் சிலையும்
  கைவிடப்படுகிறது
  ஊனம் உடலில் வந்துவிட்டால்,
  கருவறைப் பாதுகாப்பிலிருந்து
  வெளியேற்றப்பட்டு
  கடும் வெயில்
  காற்றுமழைப் பாதிப்பிலும்
  காக்கைக் குருவி எச்ச
  அவமதிப்பிலும் அவதிப்படுகிது..

  கற்றுக்கொள் மனிதா
  நிரந்தரமல்ல எதுவும்,
  நடப்பு வாழ்வில்
  கிடைப்பதை வைத்து
  நன்றாய்ச் செய்,
  அதுவும்
  இன்றே செய்…!

  செண்பக ஜெகதீசன்…

 4.               தூதுவனின் தூதுவன்

  ஈசனின் வாகனமாம்
  காலனின் தோழனாம்
  இன்புற்றோரின் யாசகங்களை
  மகேசனின் செவிமடிக்கு
  கொண்டு சேர்க்கும் தூதுவனே
  நந்தி கேசவனே
  குறைத்தீர்க்கும் மகேஸ்வரனே….
  கற்சிலைக்கும் கேட்கும் திறனுண்டு
  இப்பூவுலகில் பரவிகிடக்கும்
  மாந்தர் கூட்டமே
  உன் மனக்குறைகளையும்,பேராசைகளையும்
  குறைவில்லாமல் கொட்டிவிடு
  மனநோய்க்கு வேறு சிறந்த மருந்தில்லை
  (கடவுள்)நம்பிக்கையை தவிர
  என்ற சான்றோரின் சிந்தனைக்கு
  உன் சிற்பமும் ஒரு சான்றுதானே
  முயலாமை என்னும் ஆற்றை
  கடக்காமல்
  முயற்சி என்னும் கடலில் நீந்த முடியாது
  என்பதறியா மடவர் தான்
  குறுக்கு வழியில் யாசகம் செய்வாரோ
  அவர்கள் பெற்ற யோகத்தின் சாபம் தான்
  உன் சிதலடைந்த சிற்பமோ
  பலரின் குறைதீர்த்த உன் நிலமை
  இன்று படுமோசமோ
  எனக்கும் செவியுண்டு பேசும் திறனுண்டு
  பறக்கும் சிறகுண்டு அதுவல்லா
  தன்னலமில்லா மனமுண்டு
  நீ படும்துயரினை
  எவரொரருவர் தீர்ப்பாரோ
  அவர் செவிகளுக்கு
  நான் சென்றுரைக்கிறேன்…..

                                                          சுந்தர்

 5. என் குறைப்பாட்டை
  நான் முறைப்பாட்டாய்
  உன் செவியில் சொல்ல
  இன் புவியின் நாதன்
  பொன் பாதத்தில் சமர்ப்பி.

  எனக்குண்டு பேரழகு;
  கண்கவரும் பல்வண்ணம்;
  பறந்து உலாவ இறக்கை;
  ஆனாலும் இல்லை
  நீண்ட வாழ்வும்
  நெடிந்துயர் உடலும்;

  ஆகவே எனக்காகக்
  வலியுடலும், நீள் ஆயுளையும்
  வேண்டினேன் எனச்சொல்.

  சொல்ல மறந்திடாதே..
  நானும் நாதன் இனமே; அவர்
  கழுத்து போல் நீலநிறம்;
  அப்படியிருக்க ஏன்
  இந்த ஓரவஞ்சனை
  என்பதுவே என்கேள்வி.

  கேளாய் புள்ளினமே
  விடை காதில் கேட்டதற்கு
  விடையொன்று சொல்கிறேன்
  உன் நீலம் பிறப்பில் இருந்தது .
  நாதன் நீலம் நஞ்சில் பிறந்தது.

  இறக்கை வண்ணமாக வந்த நீலமும் – பிறர்
  இறப்பை தடுக்க வந்த நீலமும் வெவ்வேறு.
  உன் இறக்கையின் வெறுமனே இயல்பு
  நஞ்சுண்ட நீலம் பெறுமான உழைப்பு

  எம்பெருமான் கழுத்தினைப்போல் உலகு காக்க
  என் கழுத்தில் ஏர்தாங்கி உழுது உணவளிப்பதனாலே
  உழைப்பே உயர்வு என்று அழகினைப் பற்றி கவலையில்லாமல்
  சதாசிவமாய் இருப்பதாலே நான் அம்மா என்றழைக்கும்
  உமையும் நாதரும் தேடி என்முதுகில் அமர்கிறார்கள்.

  கந்தமுண்டு, அழகுண்டு, நிறமுண்டு என்றாலும் மலர்கள்தான்
  அந்தமில்லா அவரைத்தேடி சென்று அலங்கரித்துப்பின் அலர்கள்
  ஆகி நீங்கும் – அவை ஆயுள் அவ்வளவுதான். அதுபோலே நின்னதுவும்.
  என்போலே உழைக்க நீ தயாரென்றால் என்போலே வலிவுடலும்
  நீள் ஆயுளும் உனக்கு நான் கேட்பேன் நாதனிடம் . வேண்டுமா?
  விடை கேட்டது கேள்வி. விட்டுப்பறந்தது பறவை.

Leave a Reply

Your email address will not be published.