இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்.

சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது மடல் எனும் இந்தத் தொடர் பத்தியின் நோக்கம் ஒரு நாட்டினிலே பிறந்து, மற்றொரு நாட்டின் தத்துப்பிள்ளையாக வாழும் ஒரு புலம்பெயர் மனிதனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியது. அவனது பார்வை எனும் கண்ணாடியினூடாகப் பார்ப்பது எப்படி இருக்கும் எனும் ஒரு காலப்பதிவேயாகும். எனது இந்த 44 வருட இங்கிலாந்து வாழ்க்கையில் நான் எதிர் கொண்ட பிரச்சனைகள் பல, நான் அடைந்த அனுபவங்கள் பல, என் கண்முன்னே நிகழ்ந்த உலக நிகழ்வுகள் பல. குறிப்பாக எனது தாய்மண்ணில் ஆரம்பித்த போர் இன்று முற்று முழுதாக முடக்கப்பட்டு போர்க்காலச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வுக் காலத்தில் என் உடன்பிறப்புகள் வாழ்வினை எதிர்நோக்கும் ஒரு நிலையை காண்கிறேன். இப்போர்க்காலச் சூழல்கள் எனக்குக் கொடுத்த அனுபவச் செழிப்புகள், அதனால் நான் இழந்த பல தொப்புள்கொடி உறவுகள் எனப்பலவகையான நிகழ்வுச் சுழல்களுக்குள் அகப்பட்டு அதனால் கிடைத்த அனுபவச்சுழல்களுக்குள் உழன்று கொண்டிருக்கிறேன்.

சுமார் 30 வருடகாலப் போர்க்காலச் சூழலில் எனது தாயக மண்ணின் உறவுகள் அவர்கள் எந்த இனத்தை, மொழியை, மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அனுபவித்த சோகங்களும் இழப்புகளும் எண்ணிலடங்காதவை. அதன் நிழலைக் கூடத் தொட்டுப்பார்க்காத நிலையில் அவர்களின் அக்காலச்சூழலின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி எந்தவிதமான கருத்துக்கூறும் உரிமையும் எனக்கில்லை என்பதுவே உண்மை. அதேசமயம் இங்கிலாந்து எனும் நாடு என்னைத் தனது பிள்ளையாகத் தத்தெடுத்து மாணவனாக நுழைந்த என்னை ஒரு தகவல், தொழில்நுட்ப பொறியியலாளனாக உயர்த்தி வைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள் அன்று மாணவனாக இருந்தபோதும் இன்று ஒரு ஓய்வுபெற்ற பொறியியலாளனாக இருக்கும் போதும் நிச்சயமாக எனது வாழ்வின் பல நிலைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தாக்கங்கள் வெளிப்படையாக தெரியக்கூடிய வகையில் நிகழாது போனாலும் கூட மறைமுகமாக நிச்சயமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்வின் அன்றாடத் தேவைகளைத் தேடியோடும் நிலையில் இருக்கும் போது இவ்வரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராயும் அளவுக்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. மேலோட்டமாக அவ்வப்போது செய்திகளின் மூலம் அறிந்து கொள்வதை விட மேலதிகமாக அதற்கப்பாற்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை.

இன்று நிலைவேறு !

மனதில் படுவதை எழுத்தில் வடிப்பதை முழுமூச்சாக செயற்படுத்தி வரும் ஒரு வேளையிது. இப்போது இங்கிலாந்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கூர்மையாக அவதானிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது, அதற்கான அவகாசமும் கிடைத்திருக்கிறது. இதுவரை உங்களுடன் நான் பல நிலைகளில் இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் இம்மடல்கள் மூலமாகப் பகிர்ந்து வந்திருக்கிறேன். இன்று அதாவது 2019ம் ஆண்டு , செப்டெம்பர், 4ம்நாௐள் நிச்சயமாக நான் இங்கிலாந்து அரசியல் வரலாற்றின் ஒரு சரித்திர திருப்புமுனையில் இருப்பதாகவே உணர்கிறேன். இத்திருப்பம் ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் எனக்கு நேர்மறையான தாக்கத்தையா? அன்றி எதிர்மறையான தாக்கத்தையா? தரப்போகிறது என்பது காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் இன்று ஐக்கிய இராச்சியம் பெரும்பான்மையான வாக்குகளினால் எடுத்திருக்கும் முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் முதன்முறையாக நிகழ்க்கிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும் என்று சுட்டிக்காட்ட எந்த உதாரணமும் கிடையாது.

சுமார் ஒரு மாதத்தின் முன் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் சில அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கிறார். இம்முடிவுகள் அனைத்துப் பாராளுமன்ற அரசியலுக்குமே தாய் எனக்கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினை பிரதமர் பொரிஸ் ஜான்சன் கையாளும் முறையை ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விலகல் உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் எதுவித உடன்படிக்கையுமில்லாமல் விலகுவது உறுதி என்கிறார் எமது பிரதமர். ஒருக்காலும் இல்லை. விலகல் உடன்படிக்கை எட்டாவிடில் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் எண்ண முடியாத அளவில் பாதிக்கப்படும். அதனால் உடன்படிக்கை இல்லாமல் விலக முடியாது எனும் கட்டளையைச் சட்டமூலமாக்குவதன் மூலம் பொரிஸ் ஜான்சன் அவர்களைப் கட்டிப்போட முனைகிறார்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்றப் பெரும்பான்மையில் ஒரேயொரு அதிகப்படியான உறுப்பினர்களையே பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது கட்சி கொண்டிருந்தது. வட அயர்லாந்தின் அரசியல் கட்சியான டி.யூ.பி எனும் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அரசுக் கட்டிலில் பொரிஸ் ஜான்சன் அமர்ந்திருக்கிறார். அக்டோபர் 31ம் தேதி  எங்கே தம்மைத் தமது வாக்கின்படி ஐக்கிய இராச்சியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடியாமல் பாராளுமன்றப் பெரும்பான்மை கட்டிப் போட்டுவிடுமோ எனப் பிரதமர் அஞ்சினார்.

என்ன காரணம் என்கிறீர்களா?

அவரது கருத்துக்கு அவரது கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களிலேயே பலர் எதிரான நிலையைக் கொண்டிருப்பதே ! பளிச்சிட்டது அவருக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு வருடமும் பாரளுமன்றம் கோடை விடுமுறைக்காகக் கலைக்கப்படுவதுண்டு. மீண்டும் கூட்டப்படும் போது புதிய பாரளுமன்றத் தொடரில் அரசாங்கம் அத்தொடரில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை இங்கிலாந்து மகாராணி பாராளுமன்றக் கூடத்தொடரைத் திறந்து வைத்து அறிபதுவே சம்பிரதாயம். கடந்த இரண்டரை வரிடங்களுக்கு மேலாக ரெக்ஸிட் எனும் சிக்கலைத் தீர்பது ஒன்றே அரசின் முன்னால் பிரதான செயற்பாடக் இருந்தது. இதன் காரணத்தினால் இம்மகாராணியாரின் திறப்பு வைபவம் நடைபெறாமல் இருந்தது. பிடித்துக் கொண்டாரே பொரிஸ் ஜான்சன்! விடுவாரா என்ன? கோடை விடுமுறையத் தொடர்ந்து செப்டெம்பர் 3ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாகவே தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்துப் பாராளுமன்றம் செப்டெம்பர் 9ம் தேதி தொடக்கம் அக்டோபர் 14ம் தேதிவரை இயங்காமல் முடக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குக் காரணமாக ஜனநாயகச் சம்பிரதாயப்படி புதிய பாரளுமன்றத்தொடரை மகாராணியார் திறந்து வைத்து , புதிய பிரதமரான தமது அமைச்சரவை இப்பாரளுமன்றக் கூட்டத் தொடரில் நாட்டின் நலன்கருதி எடுக்கப்போகும் செயற்பாடுகளை அறிப்பிப்பார் என்று கூறினார்.

கொதித்தெழுந்தனர் எதிர்கட்சியினர். ஏன் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் பல பாராளுமன்ர அங்கத்தினர்களுமே அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்தனர். பிரதமரின் இச்செய்கை ஜனநாயகப் பாராளுமன்ற பொறிமுறைக்கு எதிரானது என்றும், பிரதமர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். “உடன்படிக்கையற்ற விலகலுக்கு” பாராளுமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது. பாராளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதிவரை மூடி வைத்தால் , 31ம் தேதி விலகும் காலக் கெடுவினைத் தடைசெய்யும் அளவிற்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனும் சாணக்கிய தந்திரத்தைப் பிரதமர் கையாளுகிறார் என்பதுவே அவர்களது குற்றச்சாட்டு. நாடு முழுவதும் பலபகுதிகளில் இதற்குக் கணிசமான எதிப்புக் கிளம்பியது. அசையவில்லை பிரதமர். நான் சொன்னது சொன்னதுதான் என்று விஜய் பாணியில் சொன்னார். உடன்படிக்கையுடனோ அன்றி உடன்படிக்கயற்றோ அக்டோபர் 31ம் தேதி விலகுவது உறுதி என்று சூளுரைத்தார்.

சிறுபான்மை அரசாங்கம், அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மையோ ஒன்றே ஒன்று. விடுவார்களா? எதிர்க்கட்சியினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றம் மறுபடியும் கூடும் நாளான 3ம் தேதிக்கு முன்னதாக ஒன்றுகூடித் திட்டம் தீட்டினார்கள். பொறிமுறை ஒன்ற வகுத்தார்கள். இங்கிலாந்து ஜனநாயகத்தின் ஒரு விழுதைப் பற்றிக் கொண்டார்கள். எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களோடு அரசாங்கத்தைச் சேர்ந்த சுமார் 17 உறுப்பினர்கள் கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டெம்பர் 3ம் தேதி பாராளுமன்றம் கூடியது. 4ம் தேதி பாராளுமன்றச் செயற்பாடுகளை அரச நிர்வாகத்தினர் கையிலிருந்து பிடுங்கி பாராளுமன்ற அங்கத்தினர்கள் நடத்துவார்கள் எனும் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.அரசுக்கு எதிராக 328 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 307 வாக்குகளும் விழுந்தன. விளைவு இன்றைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கைகளில் இருந்து எதிர்க்கட்ச்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட உறுப்பினர்களின் கைகளுக்கு மாறியது. எதிர்க்கட்சியினர் “ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய உடன்படிக்கை எட்டாத பட்சத்தில் பிரதமர் அவ்வகையான உடன்படிக்கையான எட்டுவதற்கான கால அவகாசத்தினை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற வேண்டும்” எனும் பணிப்புரையை சட்டமாக்குவதற்கான பிரேரணையை முன்வைக்கிறார்கள்.

இதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 4ஆம் தேதி மாலை இடம்பெறும். இதிலும் அரசு தரப்பு தோல்வியடயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையும் பட்சத்தில் தான் பொதுத்தேர்தலை முன்னெடுக்கப்போவதாக 3ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரின் பிரேரணை வெற்றி பெற்றால் அது சட்டமூலமாக்கப்படுவதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும். பிரதமர் பொதுத்தேர்தலைத் தான் நினைத்த மாத்திரத்தில் கோர முடியாது காரணம். 2010ம் ஆண்டு படவிக்கு வந்த டேவிட் கமரன் அரசினால் எந்த வொரு அரசாங்கமும் ஐந்து வருட காலத்துக்கு முன்னால் கலைக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமுலாக்கியது.

பிரதமர் பொரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தல் வேண்டி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் பிரேரணை வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு தேவை. ஆனால் இன்றைய பிரேரணை சட்டமூலமாக்கப்படும் வரை பொதுத்தேர்தலுக்கான ஆதரவை தாம் வழங்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் அறிவித்துள்ளார்.

போச்சுடா !

இதுவரை காலமும் வாய்திறக்கும் போதெல்லாம் இந்த அரசாங்கம் ஒரு வெத்து அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றே மாற்றுவழி எனக்கோஷமிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இப்போ அதற்கு ஆதரவளிக்க முடியாது என்று சொல்லி விட்டாரே ! என்ன செய்யப் போகிறார் பொரிஸ் ஜான்சன்? சதுரங்கப் பலகையில் சுற்றி நிற்கும் காய்களிடமிருந்து தப்ப அவரது அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்?

அன்பிய உறவுகளே இதற்கான பதிலை உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனை இதன் சாட்சியாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதும் ஒரு அற்புதமான நிகழ்வே ! உலக ஜனநாயகத்துக்கே முன்னோடி தாம் என மார்த்தட்டிக் கொள்ளும் ஐக்கிய இராச்சியம் எப்படி இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரப் போகிறது?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

04.09.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *