-சுரேஜமீ 

காற்றின் அலைகொண்டு காலம்வென் றாயே
காதல் ரசம்தந்து கண்ணன் ஆனாயே
ஏற்றும் விளக்காகி ஏழைகவர்ந் தாயே
என்றும் தமிழர்தம் வாழ்விலிணைந் தாயே
போற்றும் எவர்நெஞ்சின் புத்தகமா னாயே
போதை புகுந்ததுபோல் பொங்கியெழுந் தாயே
சாற்றும் கவிதையெலாம் சங்கதியா னாயே
சாகா வரம்பெற்ற கவியரச நீயே!

அற்றை நிலவினிலும் ஆங்கேநீ யிருந்து
அன்னைத் தமிழாலே அண்டமளந் தவனே!
இற்றை வருநிலவும் இன்னுமுன் நினைவால்
இன்பம் விளைக்கிறதே இன்னிசைத் தேனாக!
வற்றா துயிர்நதிபோல் வாரி வழங்கிடுமுன்
வார்த்தைத் தமிழாலே வண்ணங் கூட்டுகிறோம்
பொற்றா மரைவாழும் பூவை மீனா மகிழும்
பொழிதமிழே முத்தையா வெனும் பேரோனே!

பற்றை விலக்கென்றே பாரதஞ் சொன்னாலும்
பாசம் பிடித்திட்டே பாவியுனைத் தொலைத்தாய்
பற்றும் எகிறியதாய்ப் பாவம் செய்திட்டார்
பண்ணில் தமிழ்வந்தாள் பத்தனுனைக் காக்கத்
தூற்றும் மனிதரெல்லாம் துச்சமென எறிந்தே
துன்பம் கடந்து வந்த தூமணி நீயன்றோ
நாற்றம் இசைக்கின்ற நற்றமிழ் ஆனாயே
நாளும் உனைப்போற்றி நானும் மகிழ்கின்றேன்!

தேற்றும் பலபாடல் தேன்தமிழ்ச் சொல்லாலே
தீட்டும் மதிகொண்ட தென்றல் தேரோனே
சேற்றில் விழுந்தாலும் செந்தா மரையாய்ச்
சீறி எழுந்திட்ட சிங்கமன்றோ! கண்ணா!
ஊற்றுச் சுரங்கம்நீ! உன்னதத் தமிழும்நீ
உன்னால் கவியானோர் ஊரில் பலருண்டு
போற்றி வணங்குகிறேன்! புன்னகைப் பூவுனையே!
புக்க எனக்குள்ளே கண்ணதாச! நீயே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *