நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

நாங்குநேரி வாசஸ்ரீ
104. உழவு
குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
பல பொழைப்பு இருந்திச்சின்னாலும் இந்த ஒலகம் வெள்ளாமைய நம்பிதான் சுத்திக்கிட்டுருக்கு. அதனால எம்புட்டு சங்கடம் இருந்தாலும் விவசாயந்தான் ஒசந்தது.
குறள் 1032
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து
வெள்ளாம பாக்காம மத்த சோலி பாக்கவங்க எல்லாரையும் விவசாயி தாங்குததால அவுக இந்த ஒலகத்தோட அச்சாணி ஆவாக.
குறள் 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
வெள்ளாம பாத்து கெடச்சத சாப்பிட்டு வாழுதவங்க தான் உரிமையோட ஒசந்த வாழ்க்க வாழுதாங்க. ஏம்னா மத்தவுக எல்லாரும் யாரையாவது கும்பிட்டு வருததுல சாப்பிட்டு அவுக பொறத்தாலயே சுத்துதவுகதான்.
குறள் 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
நெறைய ராசாவோட குடை நிழல தன் குடைக்குக் கீழ கொண்டு வருத வலிம விவசாயிக்கு உண்டு.
குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
தன் கையால சோலிபாத்து பொழைக்கவங்க மத்தவுககிட்ட கையேந்தி நிக்க மாட்டாக. தங்கிட்ட கேட்டு வந்தவுகளுக்கு இல்லன்னு சொல்லாம குடுக்கவும் செய்வாக.
குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை
வெள்ளாம பாக்கவன் சொணங்கி இருந்தாம்னா எல்லாத்திலயும் ஆசய விட்டதா சொல்லுத துறவிங்க கூட வாழ ஏலாது.
குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
ஒரு பலம் புழுதி மண்ணு கால் பலம் ஆகுத அளவு பல தடவ உழுது காயவிட்டாம்னா பொறவு ஒரு பிடி எரு இடாமக்கூட பயிர் செழுமையா வெளையும்.
குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
உழுததக் காட்டிலும் உரம் இடுதது நல்லது. இந்த ரெண்டும் செஞ்சு களை புடுங்கின பொறவு தண்ணி பாய்ச்சுததக் காட்டிலும் பயிரக் காவல் செய்யுதது நல்லது.
குறள் 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்
நெலத்துக்கு உரியவன் தெனைக்கும் நெலத்தப் போய்ப் பாக்காம சொணங்கி இருந்தாம்னா அது அவன்மேல இருக்க வெறுப்பால வெலகிப் போன பொஞ்சாதி கணக்கா வாடி வெளச்சலில்லாமப் போவும்.
குறள் 1040
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
பொழைக்க வழியில்ல னு நெனைச்சு சடவா இருக்கவனப் பாத்து பூமித்தாய் தனக்குள்ளார எளக்காரமா சிரிச்சிக்கிடுவா.