இதயம் நிறைத்த பரவச உணர்ச்சி
சக்தி சக்திதாசன்
உள்ளமெங்கும் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடியது. சித்தமெலாம் ஒருவகை திருப்தி நிறைந்து மகிழ்வில் முகிழ்த்தது. சொந்தமொன்று வெற்றிச் சங்கை ஊதிய ஒலி, என் காதுகளில் தேனாக ஒலித்தது.
அது 2008ஆம் ஆண்டு ஏப்ரல்/மே மாதம் என எண்ணுகிறேன். என்னுடைய அருமை நண்பர், மறைந்த பிரபல எழுத்தாளர், இலக்கியவாதி அமரர் தமிழ்வாணன் அவர்களின் இரண்டாவது மகனான ரவி தமிழ்வாணன் அவர்களின் தலைமையில் எனது நூல் ” கண்ணதாசன் ஒரு காவியம்” இலண்டனில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இடத்தில் இனிய நண்பர் ரவி தமிழ்வாணனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நான் இதுவரை காலமும் பழகிய நண்பர்களில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எதையும் மிகவும் மென்மையாகவே சொல்லுவார். எப்போதும் அவர் கோபித்து நான் பார்த்தது கிடையாது. தமிழ் மேல் காதலுடையவர். இலக்கியப் பணிக்காக எதையும் சிரமம் பாராது செய்யக்கூடியவர். அனைத்துக்கும் மேலாக எனது நூல்களின் பதிப்பாளர். அவரது அன்பு மனைவி வள்ளி, நட்புக் குணாதிசயங்களில் அவருக்குச் சளைத்தவரல்லர். இவர்களின் குடும்ப நண்பர்களாக நாம் திகழ்வது எமது பாக்கியம் அன்றி வேறொன்றில்லை.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னாதாக, வேறோர் நிகழ்ச்சிக்காக ரவியும் அவரின் மகனும் கனடா சென்றிருந்தார்கள். கனடாவிலிருந்து எமது புத்தக வெளியீட்டு விழாவிற்காக லண்டன் வருவதாக ஏற்பாடு.
அப்போதுதான் நண்பர் ரவியிடமிருந்து தொலைபேசி மூலம் ஒரு தகவல் வந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது லண்டன் பிரயாணம் ஒருநாள் பின்போடப்பட்டதாகவும், எம்முடைய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவரின் மற்றொரு நண்பர், சென்னையைச் சேர்ந்தவர், வந்திருப்பதாகவும் அவர் ரவியைச் சந்திப்பதற்காக எமது இல்லத்தை நோக்கிப் பிரயாணிப்பதாகவும், அவரையும் எம்மோடு தங்க வைக்க முடியுமா? எனவும் கேட்டிருந்தார்.
“என்ன ரவி, இதற்குக் கூட அனுமதி வேண்டுமா? எமது இல்லம் உங்களது இல்லம் இல்லையா? உங்கள் நண்பர் எனக்கும் கூட நண்பர்தான். கவலை விடுங்கள்” என்று அவருக்குக் கூறிவிட்டு. அவரது நண்பரின் தொடர்பிலக்கத்தை வாங்கிக்கொண்டேன்.
அப்படி என் வாழ்வில் இணைந்தவர்தான் நண்பர் சிறீதர்.
கையடக்கத் தொலைபேசியில் அவரை அழைத்தேன். “சார் உங்கள் வீட்டிற்கு வரும் வழியைச் சொல்லிவிடுங்கள். நானாகவே வந்து விடுகிறேன்” என்று சொன்ன அந்த மனிதரின் பண்பு என்னை வியக்கப் பண்ணியது. இதற்கிடையில் தொலைபேசியில் தொடர்புகொண்ட என் மனைவி, “நம் இல்லத்திற்கு வருகிறார், சென்னையைச் சேர்ந்தவர். நீங்களே பஸ் ஸ்டாப்புக்குச் சென்று பாதுகாப்பாக அழைத்துவரக் கூடாதா” என்று உரிமையோடு அறிவுரை சொன்னாள்.
ஏற்கெனவே அப்படியான எண்ணத்துடன் இருந்த நானும் அடிக்கடி அவரை அழைத்துப் பேசி, அவர் எங்கிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். “என்ன சார், உங்களைத் தொந்தரவு பண்ணிக்காதீங்க” என்று அந்த நண்பர் வலியுறுத்தியும் அவர் எமது இல்லத்திற்கு அருகில் உள்ள இரயில் நிலையத்திற்கு வந்ததும் அவரைத் தேடி இரெயில் நிலையம் சென்றேன்.
கையில் ஒரு பெட்டியை இழுத்துக்கொண்டு காதில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு என்னை நோக்கி வந்த சிறீதரைப் பார்த்தேன், சுமார் ஆறடி உயரம், கம்பீரமான மீசை, சுருண்ட கேசம். அழகான, அன்பான புன்னகை.
என்னை, நான் என்று புரிந்துகொண்டதும் ஓடி வந்து கைகுலுக்கிக் கொண்டார். காரில் உட்கார்ந்து பேசத் தொடங்கியதுமே ஏதோ நீண்ட நாள் பழகியவர்கள் போல பேசத் தொடங்கிவிட்டோம். எம்மை இணைத்தவர் யார் தெரியுமா? மறைந்த கவியரசர் கண்ணாதாசன் தான். என்னுடைய காரில் உள்ள சி.டியை இயக்கியதும் எனக்கே பிடித்தமான பழைய பாடல்கள், பெரும்பான்மையான கண்ணதாசன் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதிலே தொடங்கிய எமது கண்ணதாசன் பற்றிய பரஸ்பர புரிந்துணர்தல் எமக்கிடையே ஒரு பந்தத்தையே உருவாக்கிவிட்டது.
சாராக அறிமுகமாகிய நான், இப்போது அவருக்கு அண்ணனாகி விட்டேன். என் மனைவி மைதிலியோ, அவருக்கு அன்புத் தங்கையாகி விட்டாள்.
அதன் பின்னால் அவரும் நாமும் இணைந்திருந்த நாட்கள், மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். இரவு வெகுநேரம் வரை தமிழ்ப் பாடல்களைப் பற்றியும் அவற்றின் அர்த்தங்கள் பற்றியும் நேரம் போவது தெரியாமல் அளவளாவிக் கொண்டிருப்போம்.
எமது புத்தக விழாவில் நண்பர் (தம்பி) கீர்த்தியின் நூலும் வெளியிடப்படுவதாக இருந்தது. தம்பி கீர்த்தியோ ஒரு பல்கலை விற்பன்னர். நூலாசிரியர், மட்டுமல்ல, லண்டனில் தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமல்ல, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அவர் ஈடுபடாத துறையேயில்லை எனலாம். அப்புத்தக விழாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவோம் எனத் தம்பி கீர்த்தி அபிப்பிராயப்பட்டார். சிறந்த பாடகியான என் மனைவி அந்நிகழ்ச்சியில் பாட வேண்டுமென கீர்த்தி விரும்பினார்.
மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவ்வளவு விரும்பாத என் மனைவி, கொஞ்சம் தயக்கத்துடன் இசைந்தார். அவர் பாடிய பாடல்களில் ஒன்று “ஏதேதோ எண்ணம் கொண்டேன்” ஆகும். என் மனைவி பாடுவதற்கு முன்னால் ஒத்திகை பார்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர், சிறீதர். மைதிலி தயங்கும் போதெல்லாம் ஊக்கத்தை அள்ளிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி மைதிலி அந்நிகழ்வில் பங்கேற்க மிகவும் உறுதுணையாக இருந்தார்.
அக்காலக்கட்டத்திலே தான் சிறீதர் திருப்பூரில் மிகவும் பிரபலமான ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரர் மட்டுமின்றி, சின்னத்திரை நிகழ்வுகளிலும் பங்கேற்பது தெரிய வந்தது.
அவரது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்த்தபோதுதான் எமது நெஞ்சிலே இவர் நிச்சயம் ஒரு சிறந்த கலைஞனாக உருவாகுவார் என்னும் நம்பிக்கை வலுவாக எழுந்தது.
வெளியீட்டு நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடந்தேறியது. இசை நிகழ்ச்சியில் மைதிலியின் பாடல் மட்டுமல்ல, சிறீதர் அவர்களின் பாடல், மிமிக்ரி முதலியனவும் இடம்பெற்றன.
அவ்வேளையில் தம்பி கீர்த்தி, ஒரு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்படத்திற்கான சில காட்சிகள் எமது இல்லத்திலே படமாக்கப்படுவதாக இருந்தது. அது மட்டுமல்ல அப்படத்திலே தம்பி சிறீதருக்கு ஒரு முக்கிய பாத்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது.
சினிமாவில் நடிப்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த தம்பி சிறீதர், அப்படப்பிடிப்பில் ஈடுபடுவதற்காக சில நாட்கள் மேலதிகமாக எம்முடன் தங்கினார். இக்கால்க்கட்டத்தில் எமது உறவு மேலும் பலப்பட்டது. இவை எம் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்த நாட்கள்.
பல்வேறு காரணங்களினால் தம்பி கீர்த்தியின் அத்திரைப்பட முயற்சி தடைப்பட்டது. சினிமா இலட்சியம் இன்னும் வேகமாக அவரது இதயத்தில் கொழுந்து விட்டெரிய, அவ்விலட்சிய தாகத்துடன் தமிழகம் திரும்பினார் தம்பி சிறீதர்.
இன்று……..
என் நெஞ்சம் பரவசத்தால் துள்ளுகிறது. தன் இலட்சிய தாகத்திற்கு உருவம் கொடுத்துவிட்டார் தம்பி. என் தம்பி சிறீதர் வேறு யாருமல்ல, “திருப்பூர்” என்னும் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் வில்லனாகப் பாகமேற்று சிறப்புற நடித்திருக்கும் அதே சிறீதர் தான்……
அது மட்டுமன்றி அத்திரைப்படத்தில் சிறப்புற நடித்ததன் காரணமாக, வேறு பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருக்கிறார், தம்பி சிறீதர்.
அன்பான, பண்பான அந்தத் தமிழகம் தந்த உறவின் வெற்றி என் நெஞ்சைத் தாலாட்டுகிறது. தமிழ்த் திரையுலகத்திலே தனக்கென ஒரு இடத்தைத் தம்பி பிடித்துக்கொள்வார் என்னும் எமது நம்பிக்கை இன்று வெற்றியடைந்தது எம்மை ஆனந்தக் கடலில் தத்தளிக்கிறது.
நீங்கள் அனைவரும் “திருப்பூர்” என்னும் இந்தத் திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிப்பீர்கள், மகிழ்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.
இதோ என் தம்பி சிறீதரின் சமீபத்திய நேர்காணலை பின்வரும் இணயச்சுட்டியின் மூலம் பாருங்கள்.
http://chennaionline.com/video/interviews/Tiruppur-Team-Talk—Part-II/2303.col
அன்பான தம்பி சிறீதரின் வெற்றிகளுக்கு என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துவீர்கள் என நம்புகிறேன்.
===============================
படத்திற்கு நன்றி – சென்னை ஆன்லைன்