பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

தொகுப்பு: புவனா கோவிந்த்

அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்று மூலம் ஏற்படக் கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்கத் தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடிக் கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே,நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே வெளியே எடுத்துச் செல்லும் வேலையைத்தான் செய்யும்.

தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாகப் போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்து விட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களைச் சரியாகக் கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சுத்தமானத் தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக் கிருமித் தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்து விடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

படத்திற்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க