நாங்குநேரி வாசஸ்ரீ

20. தாளாண்மை

பாடல் 191

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு.

கொள்ள மாட்டாத மிகுநீரையுடைக்
குளத்தினருகே விளையும் பயிர்
வளமுடன் இருந்துப் பின் குளம்
வறண்ட நிலையில் கருகுவதுபோல்
முயற்சியின்றி உறவினர் தருவதை
மட்டுமேயுண்டு அவ்வுறவினர்
வறுமையுறும் காலம் சாவர் சிலர்
வாளின்மேல் கூத்தாடும் மகளிரின்
விழிபோல் இயங்கிச் சுறுசுறுப்பாய்
உழைக்கும் முயற்சியுடையோருக்கு
உறுமோ இப்பிழைப்பு.

பாடல் 192

ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

ஆடுகின்ற கொம்பாகி வழியில்
அமைந்த செடியும் வயிரம்கொண்டு
உறுதிமிகு மரமாய் வளர்ந்தபின்
உலகில் யானைகட்டும் தறியாகும்
முயன்று ஒருவன் தன்னைத்
தாழ்ச்சியில்லாதபடி செய்தால்
அவன் வாழ்வும் அத்தன்மைத்தாகும்.

பாடல் 193

உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; – அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.

பெரும்புலியும் மாமிசம் இல்லாக் காலம்
பிடித்துத் தின்னும் சிறு தேரையை
அறிவினால் எத்தொழிலையும்
அற்பமானது என எண்ணவேண்டா
முயற்சியினால் அத்தொழிலும்
மேம்படும் அக்கறையுடன் செய்கின்.

பாடல் 194

இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
அசையாது நிற்பதாம் ஆண்மை – இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.

தாழையை அலைகள் அசைக்கின்ற
தரமான சோலைகள் சூழ் கடற்கரையுடை
வேந்தனே! முடியாதசெயலையும் ஒரு
வழியினால் செய்து தளராது நிற்பதே
ஆண்மையாம் முடியுமெனில் பெண்களும்
அச்செயல் புரிந்து பெருமையடையாரோ?

பாடல் 195

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; – தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

நல்ல குலம் தீய குலம் என
நவிலுவதெல்லாம் வெறும்
சொல்லளவே தவிர அங்ஙனம்
சொல்லுவதில் பொருளொன்றுமில்லை
பழம் சிறப்புமிக்க பொருளும் தவமும்
பண்பான கல்வியும் முயற்சியும்
போன்றவற்றால் நற்குலம் அமைவதாம்.

பாடல் 196

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

மேற்கொண்ட செயலைச் செய்து
முடிக்கும்வரை அறிவின் திறத்தை
மனதுள் அடக்கித் தம் வலிமையை
மற்றவருக்கு வெளிப்படுத்தாது பிறரின்
மனவலிமையை அவர்தம்
உறுப்புக்களின் குறிப்பினால்
உணர்ந்தறிவர் அறிவுடையார்
இத்தகையோரின் அறிவுநுட்பத்தில்
இருக்கின்றது இவ்வுலகு.

பாடல் 197

சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

கறையானால் அரிக்கப்பட்ட
கனமான ஆலமரத்தைத்
தாங்குதூணாயதன் விழுது
தாங்குதல்போலத் தந்தையின்
தளர்ச்சியை முயற்சித்துத்
தனயன் போக்க அது நீங்கும்.

பாடல் 198

ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ? – யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்.

புள்ளியுள்ள யானையின் முகத்தையும்
புண்படுத்தவல்ல கூர்நகமும்
வலிய பாதங்களுமுடைய
வீரிய சிங்கத்தையொத்தவர்
பொருளற்று வீட்டிலிருந்து வறுமையுற்று
பாவப்பட்டுத் தாழ்ந்தாலும் தமக்குப்
பழியுண்டாக்கும் செயலைச் செய்வரோ?

பாடல் 199

தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு – ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.

தித்திக்கும் இனிய கரும்பு ஈன்ற
திரண்ட காம்பினையுடைய
குதிரையின் பிடரிமயிர் போலும்
கற்றையான பூ நறுமணம் இழந்ததுபோல்
கடும் முயற்சி செய்து தம்
பெயரை நிலைநாட்டாதவன்
பிறந்த குடி சிறந்ததாய்
இருப்பினும் என்ன பயன்?

பாடல் 200

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்; – கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

முயற்சியற்ற மூடர் பெருமுத்தரையர்
மகிழ்ந்து தரும் பொரிக்கறி உணவை
உண்பர் கறியின் பெயரும் அறியா
உயர்ந்தோர் தம் அயரா முயற்சியால்
வந்த நீருணவையும் அமிழ்தமென
விரும்பி உண்பர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *