அரசியல்: அனுபவமா? ஆரோக்கியமா?

0

சக்தி சக்திதாசன்

sakthidasan2010ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற இங்கிலாந்து பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தை இழந்து, பத்தாண்டுக் காலம் அரசியல் நாற்காலியில் கோலோச்சிக்கொண்டிருந்த இங்கிலாந்து தொழிற்கட்சி (லேபர் கட்சி), எதிர்க் கட்சி ஆகியது பலரும் அறிந்ததே.

இத்தோல்வியைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக இருந்த கோர்டன் பிறவுண், தனது கட்ச்சியின் நலன் கருதி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து லேபர் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்யும் படலம் ஆரம்பமானது.

இந்தத் தலைவரைத் தெரிவு செய்யும் முறை மூன்று பிரிவுகளாலானது. அதாவது லேபர் கட்சியைத் சேர்ந்த மூன்று தரப்பினர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாவார்.

1)லேபர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய பாரளுமன்றத்து லேபர் கட்சி உறுப்பினர்கள்.
2)சாதாரண லேபர் கட்சி அங்கத்தினர்கள்.
3)லேபர் கட்சியின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்.

மேற்கூறிய மூன்று பிரிவினர்களும் ஆளுக்கொரு வாக்கு வீதத்தில் வாக்களிப்பார்கள். இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் மொத்த வாக்குகளில் 33.3 விகித வாக்குகளைத் தமக்குக் கொண்டுள்ளார்கள்.

இத்தேர்தல் யூன் மாதம் தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெறும்.

இத்தேர்தலில் மொத்தம் ஜந்து பேர் போட்டியிட்டார்கள். இதில் போட்டியிடுவோர் போட்டிடுவதற்கு பிரேரிக்கப்படுவதற்கு முன்பாக லேபர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 12.5 வீதமானோரின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.

இம்முறை போட்டியிட்ட ஜந்து வேட்பாளர்களில் ஓர் அதிசயம் என்னவென்றால் முன்னணி வேட்பாளர்கள் இருவரும் அண்ணன், தம்பி என்பதே.

ஆமாம், இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லிபாண்ட் (David Milliband) ஐ எதிர்த்து, அவரது தம்பி எட் மில்லிபாண்ட் (Ed Milliband) போட்டியிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்ல, இத்தேர்தலில் ஊடகங்களுக்கு இருந்த ஆர்வத்தின் அளவை அதிகரிக்கப் பண்ணியது.

தொழிற்கட்சியைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்க இடையில் என்ன வேறுபாடு இருக்கும் என்று நீங்கள் எண்ணுவது சகஜமே.

முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் கீழ் தொழிற்கட்சி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டது. தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சி என்னும் அபிப்பிராயத்தைப் போக்கிப் புதிய லேபர் கட்சி என்னும் முத்திரையின் கீழ் மிதவாத இடதுசாரிக் கொள்கைகளின் வழி சென்றது.

மூத்த சகோதரரான டேவிட் மில்லிபாண்ட், டோனி பிளேயரின் தீவிர ஆதரவாளர். பழைய அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்தவர். மிதவாத இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவர். ஆனால் தம்பி எட் மில்லிபாண்டோ, தோல்வியுற்ற பிரதமர் கோர்டன் பிறவுணின் ஆதரவாளர். தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற்றவர். அது மட்டுமின்றி தீவிர இடதுசாரி என்னும் அபிப்பிராயத்தைப் பெற்றவர்.

இத்தேர்தலில் போட்டியிட்ட ஐவருக்கும் தமது விருப்பின் படி 1, 2, 3, 4, 5 என்று அனைவரும் வாக்களிப்பார். முதலாவது வாக்குக் கணிப்பில் கடையாக வந்த போட்டியாளரின் வாக்குகள், அடுத்த விருப்பு வாக்களிப்பாளர்களுக்குச் சேர்க்கப்படும். அடுத்தடுத்து இப்படியாக நான்கு சுற்றுகளின் பின்னர் அதிகப்படியான விகிதாசார வாக்குகளைப் பெற்றவர், தலைவராக அறிவிக்கப்படுவார்.

Flag_of_the_United_Kingdomமுதல் நான்கு சுற்றுகளிலும் மிகவும் நெருக்கமான விகிதாசாரங்களைப் பெற்ற சகோதரர்களில் 40 வயது நிரம்பியவரான இளைய சகோதரர் எட் மில்லிபாண்ட் (Ed Milliband), மிகவும் குறைந்தளவு வித்தியாசங்களில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். முதல் முறையாக லேபர் கட்சி 40 வயதே நிரம்பிய ஒரு இளைஞரைத் தலைவராகப் பெற்றிருக்கிறது.

லேபர் க‌ட்சியின் புதிய தலைவர், ’இது இளைய தலைமுறையின் காலம். அரசியல் இனி ஒரு புதுப் பரிமாணம் எடுக்கப் போகிறது’ என்று கூறியுள்ளார். அரசியல் அவதானிகள் இன்றைய இங்கிலாந்து அரசியல் களத்தை மிகவும் கவனித்து வருகிறார்கள்.

கூட்டரசாங்கமான கன்சர்வேடிவ் / லிபரல் கட்சித் தலைவர்கள் டேவிட் கமரன், நிக் கிளேக் ஆகியோர் முறையே 44, 43 வயதுடையவர்கள். தற்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்பேர்ன் 39 வயதே ஆனவர். இப்போது எதிர்க் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எட் மில்லிபாண்ட் 40 வயதே நிரம்பியவர்.

இவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் அதியுயர் பிரசித்தி பெற்ற வசதியுடையோர் கல்வி கற்கும் ஆக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள்.

இத்தகையோரால் சாதாரண மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ள‌ முடியுமா? வசதியின் பின்னணியில் வளர்ந்து பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்களில் கல்வி கற்ற இவர்களால் வாழ்க்கையின் அடிமட்ட மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியுமா?

அது மட்டுமின்றி, வாழ்க்கை என்னும் பாட சாலையில் அனுபவக் கல்வியின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இவர்களால் இங்கிலாந்து போன்ற கேந்திர, வியாபார முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் நலனைப் பாதிக்கும் முடிவுகளை அனுபவரீதியாக எடுக்க முடியுமா?

இப்படிப் பல கேள்விகள் பிறக்கும் அதே வேளையில், இன்றைய காலக்கட்டத்தின் தேவை இள ரத்தங்களின் துடிப்பான செயலாக்கங்களே. இன்றைய உலகில் வர்க்க பேதம் இங்கிலாந்து போன்ற நாட்டிலே மறைந்து வருகிறது. இன்றைய பொருளாதாரச் சூழலையும் வளரும் சந்ததியின் தேவைகளையும் இத்த்கைய இளைய தலைவர்களாலேயே புரிந்துகொள்ள முடியும் என்பது இவர்களது வாதம்.

அனுபவமா? இல்லை ஆரோக்கியமா? அன்றி அனுபவத்தினால் விளைந்த ஆரோக்கியமா? காலம் பதில் கூறும். காத்திருப்போம்.

========================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *