சைவத்தைப் பேணும் அம்மை-3
இறைவனுக்கு அம்மையார் வழங்கும் பெயர்கள்
“அடிகள், அழகன், அந்தணன், அட்ட மூர்த்தி, அண்டத்தான், அண்டவாணன், அண்ணல், அப்பன், அம்மான், அமரர் பிரான், அரவப் புயங்கன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், உம்பர் கோன் தானத்தான், எந்தை, எம்மான், எரியாடி, கங்கை மணவாளன், கண்ணாளன், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், சீராளன், செஞ்சடையான், செம்மேனிப் பேராளன், ஞானத்தான், தழல் வண்ணன், தன்னோடே ஒப்பான், நம்பன், நன்றுடையான், நனையாச் சடைமுடி, நுதற்கண்ணான், நெய்யாடி, பரமன், பிரான், புண்ணியன், பெரியான், பெருமான், மணிமிடற்றான், மாயன், மைத்தமர்ந்த கண்டத்தான், வானத்தான், வானோர் பெருமான், விண்ணோன், விமலன், வெண்ணீற்றன், வேதியன்” முதலிய பல பெயர்களைப் பயன்படுத்தி அம்மையார் இறைவனைப் போற்றுகிறார்.
ஆலமரத்தடியில் அமர்ந்த நிலையைக் குறிப்பிடும் பெயரையும், பிற்காலத்தில் பெருவழக்காகிய சிவன் என்ற பெயரையும் அம்மையார் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இறைவனின் தோற்றச் சிறப்புகள்
இறைவன் சிவந்த சடை உடையவன். அதில் பிறை நிலவையும் கொன்றை, எருக்கு, வன்னி மலர்களையும் சூடி இருக்கிறான். கங்கை ஆறும் அங்கே தங்கி உள்ளது. நெற்றியில் ஒரு கண்ணைப் பெற்றிருக்கிறான். அவனது மிடறு நஞ்சு உண்டதால் கறுத்துள்ளது. எட்டுத் தோள்களை உடையவன். தலையிலும் மார்பிலும் இடையிலும் பாம்புகளே அணிகலன். மார்பில் நூலும், ஏனக் கொம்பும், மண்டை ஓட்டு மாலையும், எலும்புகளும் அணிந்திருக்கிறான். உடல் பவளம் போல் சிவந்த மேனியாக உள்ளது. அதில் முழுவதும் நீறு அணிந்துள்ளான்.
அவனது இடது புறத்தில் நீலக்குழல் கொண்ட மலைமகள் பாகம் பிரியாதவளாக இருக்கிறாள். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டிருக்கிறான். கையில் தீ ஏந்தி உள்ளான். ஆனேறு அவனது வாகனமாக உள்ளது. கால்களில் கழலும் சிலம்பும் அணிந்துள்ளான். வேறு பொன் அணிகள் அணியவில்லை. அவனது அடிகள் செந்தாமரை போல் உள்ளன. அவனது இருப்பிடம் சுடுகாடு. அங்கு அவன் பேய்க் கணங்களுடன் நடனமாடிக்கொண்டு இருக்கிறான். கையில் கபாலம் ஏந்தி ஊர் ஊராகப் பலி ஏற்றுத் திரிகிறான்.
திருமாலும் சிவனும்
தற்போது வழக்கில் இல்லாத, திருமால் பற்றிய, ஒரு கருத்தை அம்மையாரின் பாடல்களில் காணமுடிகிறது. ஈசனின் வலப் பக்கம் திருமால் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஒருபால் உலகளந்த மாலவனாம், மற்றை
ஒருபால் உமையவளாம் (அற்புதத்திருவந்தாதி-41)
…………………………செங்கண்
திருமாலைப் பங்குடையான் (அ-52)
ஓருருவாய் நின்னோடு உழிதருவான்- நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் (அ-54)
…………………………………………………பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ-(அ-59)
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் (அ-3)
இக்கருத்து ஏழாம் நூற்றாண்டில் கூடத் தொடர்ந்து இருந்திருக்கிறது. ‘மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன்’ என்று சம்பந்தரும், ‘மாலோர் பாகம் திகழ்ந்தான்’ என்று அப்பரும் குறிப்பிடுகின்றனர். இவ்வழக்கு காலப் போக்கில் கைவிடப்பட்டு, உமையைத் திருமாலின் சோதரியாகக் கூறும் உறவு முறை ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சிவனை விட மூத்தவர் திருமால். இவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வணங்கப்பட்டு வந்தவர். புதிதாக வந்த சிவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பழைய தெய்வங்களுடன் தொடர்புபடுத்தியிருக்கக் கூடும் என ஊகிக்கலாம்.
சங்க காலத்தின் முற்பகுதியில் தோன்றிய நூல்களில் சிவன் முருகனின் தந்தையாகக் கூறப்படவில்லை. பிற்பகுதியில் தோன்றிய ‘கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல்’ ஆகியவற்றில் மட்டும் முருகனைச் சிவனின் மகனாகக் கூறும் வழக்கம் புதிதாக ஏற்பட்டதை ஒப்பிடுக.
இறைவனின் செயல்களும் கோலங்களும்
முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, அரக்கன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அர்ச்சுனனைச் சோதிக்கக் கிராத வேடம் பூண்டது. அடி முடி தேடிய மால் அயனுக்கு அறிய முடியாதபடி நின்றது, காலனைக் காலால் உதைத்தது, காமனை எரித்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் நடனமாடியது என்று சிவனின் பல திருவிளையாடல்களையும் கோலங்களையும் அம்மையார் குறிப்பிடுகிறார்.
சிவனுடைய தோற்றத்தில் அம்மையார் குறிப்பிடாத பல அம்சங்கள் தேவாரக் காலத்தில் சேர்ந்து விட்டிருப்பதை அடுத்த பகுதியில் காண்போம்.