வல்லமை – சிந்தனை,செயல்,முன்னேற்றம் – தலையங்கம்

1

சத்யமேவ ஜெயதே!

பவள சங்கரி

விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டதன் மூலம் உலகையே உலுக்கிய இணையதளம் இந்த விக்கிலீக்ஸ். இதன் முதுகெலும்பாகச் செயல்படும் இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் , இன்னும் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளப்பியதும் நிதர்சனம். தங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிப்பதாகவும், அச்சதியை முறியடிப்போம் என்றும் கூறியிருந்தார்.

விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கான நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கும் கூட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசாஞ்சேயை பாலியல் வழக்கு தொடர்பு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, சுவீடன் நாட்டிற்கு நாடு கடத்தப்படும் என்ற முயற்சிகள் நடந்து வந்தன. இதையடுத்து அவர் தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கூறி லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் 10 நாட்களில் இவர் நாடு கடத்தப்படுகிறார்.

அரசாங்கத்தை நெறிப்படுத்தவும், பொது மக்களுக்கு உற்ற துணைவனாகவும்,காவலனாகவும் இருக்கக்கூடிய பத்திரிக்கைகளின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே இருப்பது வருத்தத்திற்குரிய விசயமல்லவா? பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், பலரும் கேள்வி கேட்பதும், ஆராய்தலும், இயல்புதானே. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்கும் பட்சத்தில் எந்த அசாஞ்சேவிற்கும் யாரும் அச்சப்பட வேண்டிய தேவை இல்லையே. மகாத்மா காந்தி போன்று ஒவ்வொரு தனி மனிதரும் சுயசத்தியசோதனை செய்து கொள்ள ஆரம்பித்தாலே, இது போன்று அசாஞ்சேக்கள் நாடு கடத்தப்பட வேண்டி இருக்காதே. அதுமட்டுமல்ல ஒரு லோக்பால் மசோதாவிற்காக ஒரு முதியவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் வேண்டியிருந்திருக்காதே?

ஊழல் என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதற்கு மற்றொரு காட்டாக, கோவா டெய்லி பத்திரிக்கையின் கீழ்த்தரமான செயல். பணம் பெற்றுக் கொண்டு, அரசியல் நேர்காணலை செய்தியாகவே பிரசுரம் செய்து விலை போன கண்டிக்கத்தக்கச் செயல்! நாட்டை நல்ல விதமாக வழிநடத்துவதற்கு அரசியல் தலைவர்களுக்கு ஒரு பத்திரிக்கையின் ஆதரவு எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு ஒரு பத்திரிக்கைக்கும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறதல்லவா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த அளவிற்கு பொது மக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது என்பதும் ஐயப்பாடாகவே உள்ளது. காரணம் அதனை எளிமைப்படுத்தாமல் வைத்திருப்பதும், அனைத்துத் துறைகளுக்கும் விதிவிலக்கின்றி அமல்படுத்தாமல் இருப்பதும்தான்!   இப்படியே, நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு சட்டமும், திட்டமும் பல இன்னல்களுக்கிடையேயும், பெரும் போராட்டத்தின் முடிவிலும் கிடைக்கப் பெறும் பலனும் அர்த்தமற்றுப் போவதும் நடந்துவிடுகிறது. ஆக மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப்படும் ஆட்சி என்பதும் அர்த்தமற்றுப் போகும் அபாயமும் நேரும் வாய்ப்புமுள்ளது!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமை – சிந்தனை,செயல்,முன்னேற்றம் – தலையங்கம்

  1. தகவல் ஒரு ஆயுதம். ஆதாரம் அதனுடைய கூர்மையான முனை. திருடனுக்கு இருள் உறுதுணை. ஊழல் மன்னர்களின் பாசறையே திரைமறைவு. அசாஞ்சே தன்னை குற்றமற்றவன் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.
    மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப்படும் ஆட்சி  இந்தியாவில் இனியாவது நடைமுறையில் வரும் என்று ஆசைப்படுவோமாக. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *