இலவசங்கள் தரும் அரசு – சுமத்தும் சுமைகள்!

1

தலையங்கம் (25)

பவள சங்கரி

கேஸ் விலையிலும், டீசல் மற்றும் பெட்ரோல் விலையிலும் தற்போதைக்கு ஏற்றம் இல்லை என்ற செய்தியால் சற்று பெருமூச்சு விட்டனர் மக்கள்.அன்றாட,அத்தியாவசியத் தேவைப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று பால்.அதன் விலை இன்று லிட்டருக்கு கிட்டத்தட்ட 7ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது நியாயமற்ற செயல் என மக்கள் கருதுவதிலும் நியாயம உண்டு. ஏற்கனவே, நம் நாட்டில் பட்டினிச்சாவு மற்றும் சத்துக் குறைவினால் 57 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் மேலும் கொடுமையான விசயம் பெண் குழந்தைகளின் அதிகமான எண்ணிக்கையிலான பாதிப்பு!  தமிழ் நாட்டில் 17 % குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும், 3 வயதில் உள்ள 37 % குழந்தைகள் எடை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்! இந்த லட்சணத்தில் மேலும் மேலும் ,குழந்தைகளையேக் குறி வைத்து தாக்குவது போன்று பால் விலையை இந்த அளவிற்கு உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். உழைப்பாளர்களின் பெரும்பாலான நேரத்தின் உற்சாக பானம் என்றால் அது டீ மற்றும் காபிதான். இன்று சாதாரணமாக, ஒரு நல்ல காபி அல்லது டீயின் விலை 20 ரூபாயாக உள்ளது. இந்த பால் விலை ஏற்றத்தினால் இது மேலும் விலை ஏறக்கூடும். அதே போல ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்க்ரீம், குலோப் ஜாமூன் போன்றவற்றின் விலையும் உயரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

போதாக்குறைக்கு பேருந்துக் கட்டணமும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. காரணம் என்ன சொன்னாலும், பாதிக்கப்படப் போவது மத்தியதர மக்கள் மட்டுமே என்பதே இன்றைய நிலை. தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அடுத்து இரண்டு மடங்கான மின் கட்டண உயர்வு. இப்படி அன்றாடத் தேவைகள் அனைத்திற்கும் இரட்டிப்பு செலவு செய்ய வேண்டி வரும் போது, துண்டு விழப்போகும் பட்ஜெட்டை , அரசின் இலவசப் பொருட்கள் சரிகட்டுமா? அரியணையில் ஏற்றிய சாமான்ய பொது சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? துண்டு விழக்கூடிய இன்னொரு மடங்கு வருமானத்திற்கு என்ன வழி காட்டப் போகிறது?  அரசின் இந்த செயல் லிபியா,  சோமாலியா போன்று நம் தமிழ் நாட்டிலும், அமைதி குலைந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுத்துகிறது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலவசங்கள் தரும் அரசு – சுமத்தும் சுமைகள்!

  1. அரசின் இந்த செயல் லிபியா, சோமாலியா போன்று நம் தமிழ் நாட்டிலும், அமைதி குலைந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுத்துகிறது.-என்பது சத்தியமான வரிதான். வரவிருக்கும் நாட்கள் கொஞசம் என்ன ரெம்ப கொடுமையானதாக இருக்கும் நடுத்தரம மக்கலுக்கு. ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *