-மேகலா இராமமூர்த்தி

மரபியலும் பரிணாம வளர்ச்சியும்

உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் மதிக்கத்தக்கவை. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துக்களை மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிடுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே தமிழரின் தலையாய இலக்கண நூலான தொல்காப்பியம் அவற்றைத் துல்லியமாக விளக்கியிருப்பது நம்மை வியப்பிலாழ்த்துவதாகும்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர்
நெறிப்படுத்தினரே. (தொல்: மரபியல்)

என்று நூற்பா வகுத்த தொல்காப்பியர்,

the-origin-of-speciesஓரறிவுயிர்கள் உடம்பினால் (மெய்) அறியும் தன்மையன; ஈரறிவுயிர்கள் உடம்பினாலும் வாயினாலும் அறியும் தன்மையன; மூவறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு இவற்றால் அறிபவை ; நாலறிவுயிர்கள் உடம்பு, வாய் , மூக்கு மற்றும் கண்ணினால் அறிபவை; ஐயறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு , கண், செவி எனும் ஐம்புலன்களால் அறிபவை; ஆறறிவுயிர்கள் ஐம்புலன்களாலன்றியும் மனத்தினாலும் அறியும் தன்மையன என்று உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் படிப்படியாய் விளக்கிச் செல்கின்றார்.

அத்தோடு நில்லாமல், புல்லும் மரமும் இவைபோன்ற பிற தாவரங்களும் ஓரறிவுயிர்கள். சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல், ஏரல் முதலியவை ஈரறிவு படைத்தவை. கறையான், எறும்பு, அட்டை போன்றவை மூவறிவு உடையன. நண்டு, தும்பி, சுரும்பு, ஞிமிறு முதலியன நாலறிவு உடைய உயிர்கள். நாற்கால் விலங்குகளும், பறவைகளும், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களாகிய மீன், ஆமை முதலியவையும் ஐந்தறிவு படைத்த உயிர்கள். மக்கள் (மனிதர்கள்) ஆறறிவுயிர்கள்; மக்களேயன்றி தேவர், அசுரர், இயக்கர் போன்றோரும் இவ்வகையினரே என்று ஓரறிவுயிர்கள் தொடங்கி ஆறறிவுயிர்கள் ஈறாய் உள்ளவற்றைத் தக்க சான்றுகளோடும் அவர் விரித்துரைக்கும் திறம் அவர் அறிவின் ஆழத்தையும், நுட்பத்தையும் புலப்படுத்துகின்றது.

இவ்வாறு தமிழிலக்கணம் விளக்கிப் போந்த பரிணாம வளர்ச்சியை, ஆய்வு செய்து தக்க ஆதாரங்களோடு உலகிற்கு விளக்கியவர், 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த ’சார்லஸ் ராபர்ட் டார்வின்’ (Charles Robert Darwin) எனும் இயற்கையியல் அறிஞராவார். மருத்துவராக வரவேண்டும் எனும் தன் தந்தையின் ஆவலை நிறைவேற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த டார்வின், பின்பு அதில் ஆர்வம் இல்லாமல் சமய குருமார்களுக்கான கல்வியைக் கற்கத் தொடங்கினார். அப்போது தாவரவியல் பேராசிரியராக அங்கே பணியாற்றி வந்த ஜான் ஹென்ஸ்லோ (John Henslow) என்பவரின் நட்பைப் பெற்றார்.

அவ்வேளையில் (1831-ஆம் ஆண்டு), ‘பீகில்’ (Beagle) எனும் அரசுக் கப்பல்Charles_Darwin தென் அமெரிக்காவுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது. பேராசிரியர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அக்கப்பலில் ‘இயற்கை விஞ்ஞானியாக’ நியமிக்கப்பட்டார் டார்வின்.

உலகின் பலநாடுகளுக்கும் அக்கப்பலில் பயணம் மேற்கொண்ட அவர், இப்பயணத்தில் பற்பல இயற்கை அதிசயங்களைக் கண்டார்; ஆதி குடிகள் பலரைச் சந்தித்தார்; ஏராளமான புதைபடிவங்களைக் (Fossils) கண்டுபிடித்துச் சேகரித்தார்; எண்ணிலடங்காத் தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தார். தாம் கண்டறிந்த அனைத்தைப் பற்றியும் விரிவான குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டார். இக்குறிப்புக்களே இவருடைய பிந்தைய நூல்களுக்கு ஆதாரங்களாக அமைந்திருந்தன.

டார்வின்  நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. அதன் பயனாய் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திடமிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை அவர் வெளியிட்டார். அவர் அறிமுகப்படுத்திய இப்பரிணாமக் கொள்கையானது (Theory of Evolution), கடவுள் உலகைப் படைத்தார் எனும் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான புரட்சிகரமான அறிவியல் கொள்கையாய் அன்று அமைந்திருந்தது. ஆதலால், மதவாதிகள் உள்ளிட்ட அறிவியலாளர்கள் பலரும்கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை எள்ளி நகையாடினர்.

தன் ஆய்வுகளின் வாயிலாய்க் கண்டறிந்த உண்மைகளை ’உயிர்களின் தோற்றம்’ (The origin of Species) எனும் நூலாக 1859-ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அந்நூல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கிவருவதை நாமறிவோம்.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன என்று கூறிய டார்வின், இப்போராட்டத்தில் தாக்குப் பிடிக்கக்கூடிய வலிமை வாய்ந்த உயிரினங்களே நிலைத்து வாழ்கின்றன என்பதை விளக்கும் ‘தக்கன பிழைக்கும்’ ( survival of the fittest) என்ற கருதுகோளை முன்வைத்தார். இதில் இயற்கையின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே ’இயற்கைத் தேர்வு’ (natural selection) என்று அழைக்கப்படுகின்றது.

டார்வினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளன. மனித மரபுக்கூறுகளை (genes) ஆராய்ந்து அவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து சொல்லும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிகண்டுள்ளது.

உலக உயிர்களின் தோற்றத்தை, அவற்றின் படிநிலைகளை, வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைபுரியும் டார்வினின் கொள்கைகளும், அவற்றை மையமாக வைத்து அவர் எழுதிய நூல்களும் உலகின் தலைசிறந்த உயிரியலறிஞர்களில் ஒருவர் என்ற புகழை அவருக்கு ஈட்டித் தந்துள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *