சுரேஜமீ

பொறுமை

apeak

காலம் செல்லச் செல்ல மனிதன் எதையுமே அவசர கதியில் கையாளவே எண்ணுகிறான்; எடுத்த செயலை எப்படியேனும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில்தான் எண்ணம் மேலோங்கியிருக்கிறதே ஒழிய, எப்படி ஒரு செயலைச் செம்மையாகச் செய்யவேண்டும் என்பதில்அக்கறை மிகச் சிலருக்கே இருக்கிறது என்பதே இன்றைய நிலை!

எதற்காக அவசரப்படுகிறோம் என்பதை உணர்வதன் அடையாளம்தான் ‘பொறுமை’!

பொறுத்தார் பூமி ஆள்வார் எனச் சும்மாவா சொன்னார்கள்?

பொறுமையின் பயனை அனுபவித்தவர்கள் எழுதிவிட்டுச் சென்ற சத்தியமான வார்த்தைகள் அவை என அறிந்தால்,

வாழ்வில் வெற்றிகளைக் குவிக்க முடியும்!

பொறுமையாக இருக்க எப்படி முனைவது?

அனுபவம் தரும் ஒப்பற்ற கல்விதான் பொறுமை; இது பெண்களுக்கு சற்று இயல்பானது என்று கூடச் சொல்லலாம். பொறுமையாக இருப்பதை, என்பது அமைதியாக இருப்பது என்ற பொருளில் இணைக்கக் கூடாது. பொறுமையும்; அமைதியும் இரு வேறு குணங்கள்.

நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்; காட்சியும்; தொடர்புகளும் நமக்குக் கற்றுத்தரும் இனிமையான பாடம்தான் ‘பொறுமை’.

ஒரு நாள் மிகுந்த வேலைப் பளுவிற்கு நடுவே, அலைபேசியில் என்னை அழைத்த என் மனைவி, குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவர வேண்டும் என்று கூறினார். நானும் புறப்படத் தயாராகி, சிற்றுந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், திரும்பவும் அலைபேசி அழைப்பில் என் மனைவி வர, சற்றுக் கடினமான வார்த்தைகளைக் கூறிவிட்டேன். வீட்டிற்குக் குழந்தைகள் வந்தவுடன், அம்மாவின் முகம் மாறுபட்டு, மவுனமாக இருப்பதை ஏன் என வினவி இருக்கிறார்கள். நடந்ததைக் கூறியிருக்கிறார்.

இரவில், என் மகள், சற்றே என் நிதானத்தைப் புரிந்து கொண்டு,

அப்பா…..விடுப்பா! சாதாரணமாக இரு……என்ன வேண்டுமென்றா அம்மா அழைத்தார்கள்? நீ மறந்துவிடப் போகிறாயே என்று நினைவூட்டியிருக்கிறார்கள்…..அவர்களுக்குத் தெரியுமா நீ கார் ஓட்டிக்கொண்டிருக்கிறாய் என்று? விடுப்பா….சிரி…..என்று எனக்குச் சொல்லும்போது

‘பொறுமை’ யின் அர்த்தம் விளங்கியது! ஆக ஒரு சூழலைப் புரிந்து கொண்டு, ஆறு வயதே நிரம்பிய குழந்தை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கிறது!

பொறுமையை இழந்தவன் தன்னையே இழக்கிறான் என்றால் மிகையாகது. இன்றைய சூழலில் நடக்கும் பல குற்றங்களுக்கும் காரணமாக இருப்பது

குற்றம் புரியத் தூண்டும் அந்த ‘கண’ நேரத்தில் நாம் பொறுமையை இழப்பதுதான்!

தமிழர்களின் கடந்தகாலத்தை மட்டுமல்லாமல், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என முக்காலத்தையும் சேர்த்துப் பதிந்த நீதிநூலாம் ‘திருக்குறள்’,

பொறுமையின் சிறப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டி ஒரு தனி அதிகாரமே ‘ பொறையுடைமை’ என பத்துப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல……’ எனும் குறளில்,

எப்படி இந்த பூமியானது, தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்கிறதோ அதுபோல

நாம் ஒவ்வொரு செயலிலும், நிகழ்விலும், நகர்விலும் பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறது.

பொறுமையாக இருந்தால் என்ன கிடைக்கும் என்பதை விட,

பொறுமையால் இந்த உலகில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை, நாம் செம்மையாகப் பேணமுடியும். இதைத்தான் திருவள்ளுவர்,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறயுடைமை
போற்றி யொழுகப் படும்! என்கிறார்.

நாம் பொறுமையாக இருந்தால் எல்லோராலும் புகழப் படுவோம் என்பதுதான் அதன் பொருள்!

சமகாலத் திரைப்படப் பாடலாசிரியரின் தேசிய விருது பெற்ற பாடலின் வரிகளில் ‘ பொறுமை’ பற்றி இவ்வாறு கூறுகிறார்….

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

இங்கு வலி என்பதை ‘பொறுமை’ என்ற பொருளில் எடுத்துக் கொள்ளவும்.

கம்பநாடன் அனுமனின் பொறுமையைச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார்….

……………………………..நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்…

என்றாரென்றால், அனுமனின் வெற்றிக்கு பொறுமைதான் காரணம் என்பதற்குச் சான்றல்லவா இந்தப் பாடல்!

காந்தியின் பொறுமைதான் இந்தியாவுக்கு, அன்னியர்களிடமிருந்து சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது;

சச்சினின் பொறுமைதான் 100 சதங்களைப் பெற்றுத் தந்தது;

முனைவர். அப்துல் கலாமின் பொறுமைதான் இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது;

ஸ்டீவ் ஜாப்ஸின் பொறுமைதான் ஆப்பிள் சாதனகளில் மிகுந்த பரிணாமங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உயர்த்தியது;

இன்னும் நிறையப் பட்டியலிடலாம்! ஆனால், பட்டியல்களை விட பொறுமை தரும் பாடம் நிச்சயம் ஒரு மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தும் என்பதே கண்கூடான அனுபவம்.

காலம் கடந்தும் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூடபொறுமை எனும் குணத்தால் வென்றுவிட முடியும்.

புரிதலின் வெற்றிக்குத் துணையாக இருப்பதும் பொறுமைதான்!

ஒருமுகப் படுத்தல் மற்றும் கவனித்தலின் அடிப்படையும் பொறுமையில்தான் இருக்கிறது!

பொறுமையாக இருப்பவர்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றால் நம்ப முடியவில்லையா? பொறுமையுடன் நிகழ்வுகளைக் கையாண்டு பாருங்கள்; உணர்ச்சி வயப்படுதலில் இருந்து விடுபட்டு, அறிவு பூர்வமாக சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் உடல்நலம் நிச்சயம் சீராக இயங்கும்.

நண்பர்களே, ஒரு நல்ல பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கினால் போதும்; பழக்கம் என்பது ஒரு செயலைத் தொடர்ந்து செய்தலின் அறிதலை நமக்கு ஏற்படுத்தும்; சில காலங்காளில் தானே ஒரு விருட்சமாக நம்முள் வளர்ந்து, நம்மை செதுக்கும்!

வாழ்வின் வெற்றி என்பது ஏதோ போட்டிகளில் வெல்வதிலோ; பெரும்பணக்காரனாவதிலோ இல்லை! ஆனால், இவையெல்லாம் கூட நம்மை நெருங்கி வரலாம்!

எப்பொழுது நாம் ஒரு நல்ல பழக்கத்தை பழகிக் கொள்கிறோமோ, அப்பொழுது இவ்வுலகில் ‘வெற்றி’ என்று கருதப் படும் அனைத்துக் காரணிகளுக்கும்

காரணமாக நீங்கள் இருப்பீர்கள்!

வெறும் வார்த்தையல்ல…..வரலாறு என்பதைக் காலம் சொல்லும்!

தொடர்ந்து சிந்திப்போம்…..

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *