நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 69

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் – அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
‘ஈடில் லதற்கில்லை பாடு’.

பழமொழி – ‘ஈடில் லதற்கில்லை பாடு’.

எங்கடா கூட்டிண்டு போற. ஏதோ முக்கியமான இடத்த காண்பிக்கப் போறதா சொல்லிட்டு நிக்காம ஒரு மணிநேரம் கார ஓட்டிண்டே இருக்கியே. வழியில எவ்வளவு அழகான பூங்காக்களெல்லாம் இருந்தது. பச்சைப்பசேல்னு. அதவிடவா பெரிய இடம். அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

பாட்டி டோன்ட் வொரி. இப்போ நாம உங்களுக்குப் பிடிச்ச பழைய கலாச்சாரத்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கிற மியூசியத்துக்குத்தான் போய்க்கிட்டிருக்கிறோம். அங்க ஒவ்வொரு மாநிலத்திலையும் முன்னாடி காலத்துல என்ன பொருட்கள் உபயோகிச்சாங்களோ அவைகளையெல்லாம் பாக்க முடியும். ரொம்ப நல்லா இருக்கும்.  நானும் அப்பாவும் ஏற்கனவே பாத்துட்டோம். உங்களுக்காகத்தான் இப்போ போய்க்கிட்டிருக்கோம். இந்தாங்க இத காதுல மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டே வாங்க. அம்மாவின் தொணதொணப்பை நிறுத்தினான் என் பதினைந்து வயது மகன் சுஷாந்த்.

இன்னும் பத்துநிமிசத்துல நாம போய்ச் சேந்துடலாம். அம்மாவை உற்சாகப்படுத்தினேன். இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிக்கிட்டு வரேன். அம்மா என்ஜாய் பண்ணலேன்னா சப்புனு ஆயிடும்.

உள்ளே நுழைந்ததுதான் தாமதம். முதலில் இருந்த ஒரிசா சாமான்களை மந்தமான முகத்துடன் பார்த்துக் கொண்டே நடந்த அம்மா அடுத்த அறையின் தமிழ்நாடு என்ற பலகையைப் பார்த்தவுடனேயே உற்சாகமானாள். பாருடா பழங்காலத்து பித்தளை பொம்மைகள் வச்சிருக்காங்க.

இங்க வா சுஷாந்த் இதுக்குப்பெயர் தான் வார்ப்பு. கல்யாணத்துக்கெல்லாம் மைசூர்பாகு, பால்கோவா எல்லாம் இதுலதான் கிண்டுவா. ஆமா பக்கத்துல பெயர் எழுதிருக்குபாரு படிச்சுச் சொல்லு.

அம்மணி அம்மாள் என சுஷாந்த் பெயர் வாசித்தவுடன் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து அம்மா பேச ஆரம்பித்தாள். இது நம்ம ஊர்லேந்து எடுத்துண்டு வந்த பாத்திரம். அம்மணி மாமிய நாங்கெல்லாம் மைக் மாமினு தான் கூப்பிடுவோம். அவ்ளோ சத்தமா பேசுவா. எத்தன கல்யாணத்துக்கு மைசூர்பாகு கிண்டின பாத்திரம் இது.

அடுத்த பெயர வாசிடாப்பா. எல்லாமே பாக்கறச்ச நம்ம ஊர்லேந்து கொண்டு வந்தது மாதிரி தான் இருக்கு. கொப்பரை, அன்ன விளக்கு என வரிசைகள் நீண்டன.

அடுத்த அறைக்குச் சென்றவுடன் கல் உரல், அம்மி, எந்திரம் வரிசையாகப் பார்த்த பாட்டியின் கண்கள் கலங்கின. இதெல்லாம் நான் புழங்கினது. நீ பெயரே வாசிக்க வேண்டாம். அப்பெல்லாம் திருப்புளியிலேந்து (சமயலறையிலேந்து) கொல்லப்புறம் வரை கல்தொட்டிலதான் தண்ணி உட்டு வைப்போம். சைஸ் வாரியா இருக்கும்.

உப்பு, புளி, ஊறுகாய்கள், பழைய சாதம்  போட்டுவைக்க எடை குறைஞ்ச கல் பாத்திரம். அப்பயெல்லாம் ஏது பிரிட்ஜ். வாங்கின காய்கறிகள ஆட்டு உரல்குள்ள போட்டு மூங்கில்தட்டால மூடிவைப்போம். மாவு அரைக்கிற நேரம் மட்டும் அது வெளிய இருக்கும். பாட்டி உற்சாகத்தில் தானே பேசிக்கொண்டிருக்கிறாள்.

காஸ் அடுப்பு வந்து அரைவை மிஷின்களெல்லாம் வந்தவொடனே ஒவ்வொண்ணயா தூக்கி கொல்லப்புறத்துல வைக்க ஆரம்பிச்சோம். அப்பறம் நம்ம ஊர் ராமன்தான் எதுக்கு வீணா எடத்த அடைச்சிண்டிருக்குனு சொல்லி ஒரு லாரியில தெருவுல இருந்த எல்லா கல்தொட்டி, பழைய பாத்திரங்கள், மரச்சாமான் எல்லாத்துக்கும் ஒரு விலை போட்டு எடுத்துண்டு போய் எங்கியோ குடுத்தான். ஆனா அதெல்லாம் இத்தன தூரம் பிரயாணம் பண்ணி இங்கவந்து சேரும்னு நான் எதிர்பார்க்கல.

நம்மாத்து தூணப் பாத்தியா. ஆத்த இடிச்சு மாத்திக் கட்டும்போது வெளிய வச்சது. நடுரேழியில பல வருசம் நின்ன தூண். அப்பயெல்லாம் இந்த வரி இடுக்குகள்ல மூட்டப்பூச்சி வரிசையா வந்து நின்னுடும். ஊக்கால அதக் கீழதள்ளி நசுக்குவோம். இப்ப அதுக்கு வந்த வாழ்வப் பாத்தியா. எல்லாமே இந்த இடத்துல பளபளனு கம்பீரமா நிக்கறதுகள்.

இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்னைக்கும் அழிவே கிடையாதுனு பழமொழியே இருக்கே. அந்தப்பழமொழிய நீ படிச்சிருக்க மாட்ட. இருந்தாலும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ என ‘ஈடில் லதற்கில்லை பாடு’ என்ற பழமொழியை என் மகனிடம் சொல்கிறாள் அம்மா. .

பாடல் 70

முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? – இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர! ‘ஈனுமோ
வாழை இருகால் குலை?

பழமொழி – ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’

டேய். சீக்கிரம் வாடா. இவன் ஒருத்தன் இப்பதான் பொண்ணுமாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு நிக்கறான். அம்மா நிக்கறதால ஒண்ணும் சொல்லவும் முடியல.

புலம்பினான் கோவிந்தன்.

என்னடா..  என்னமோ குசுகுசுனு பேச ஆரம்பிச்ச. என்னயப் பாத்தவொடனே நிறுத்திட்ட. ஊர்சுத்தாம போய் படிக்கற வழியப் பாருங்க.  போலீஸ் தோரணையில் அதட்டுகிறாள் என் அம்மா.

அட போங்கம்மா. நாங்க என்ன பெரிசா பேசிடப்போறோம். பக்கத்துவீட்டு ஆண்ட்டி ரொம்ப நேரமா காம்பவுண்ட் சுவர்லேந்து எட்டி எட்டி நம்ப வீட்டையே பாக்கறாங்க. ஏதோ வம்பு சொல்லணுமா இருக்கும். அம்மாவை விரட்டினேன்.

உண்மைதான் இந்த ஆண்ட்டிக்கு காலங்காத்தால அப்டி என்ன வம்பு இருக்கும். நான் தலைசீவிக்கொண்டு நிற்கும் கண்ணாடி அருகேயிருக்கும் சன்னல்வழி பக்கத்துவீட்டு பக்கவாட்டுச் சுவர நல்லாப் பாக்க முடியும். அங்கதான் நிக்கறாங்க ஆண்ட்டி.

டேய் எவ்ளோ நேரம்டா. சீக்கிரம் வாடா. அங்க பெரிய பிரச்சினையே போயிக்கிட்டிருக்கு. என்னமோ ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்க. நண்பன் திரும்பவும் ஆரம்பிக்கிறான்.

ஒருவழியா கிளம்பி அவனுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் வழியில்….  டேய் நம்ப சுரேஷ ஸ்கூல்லேந்து ரஸ்டிகேட் பண்ணிட்டாங்கடா.

என்னடா சத்தமே காணோம். அதாண்டா ஸ்கூல விட்டு விலக்கிட்டாங்க.இனிமே அவனால படிக்கமுடியாது. அந்த வருத்தத்துல அவன் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம காணாம போயிட்டானாம். காலையில எங்கப்பா சொன்னதிலேந்தே எனக்கு வயத்தக் கலக்கிருச்சு. அதான் உன்னயப் பாக்க வந்தா நீ என்னவோ சீவி சிங்காரிச்சு இவ்ளோ லேட் பண்ணி உட்டுட்ட.

சரி இப்ப எங்கடா போய்கிட்டிருக்கோம். நான் கேட்கிறேன்.

அதான் நம்ம தனபால் இருக்கான்ல அவன் வீட்டுக்குப்போயி அவனுக்கு ஏதும் தெரியுமானு கேக்கலாம். எப்படியும் நாம நாலுபேரும்தானே எப்பவும் ஒண்ணாச் சுத்தினோம். இப்ப சுரேஷுக்கு ஒரு பிரச்சினைனா நம்மளத் தேடி தானே வருவான். நம்ம ரெண்டுபேர் வீட்டுக்கும் வரல. அதான் தனபாலக் கேக்கலாம்.

ஒருநிமிசம் நில்லுடா. பேசாம நாம ஸ்கூலுக்குப் போயி ஹெட்மாஸ்டர்கிட்ட உண்மயச் சொல்லிடலாம். எல்லாத்துக்கும் நிரந்தரமா தீர்வு கிடைச்சுரும். நான் கூறுகிறேன்.

நல்லா உதை வாங்குவோம். அவ்ளோதான் நடக்கும். நம்மளையும் ஸ்கூலவிட்டு

நிறுத்திடுவாங்க. ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’னு கேட்டதில்லையா. வாழை ரெண்டுதரம் குலை ஈனாது. அதுமாதிரிதான் நம்ம ஹெட்மாஸ்டர் எவ்வளவுதான் பொறுமசாலியா இருந்தாலும் முதல்தடவ தப்புசெஞ்சப்போ நம்ம எல்லாரையும் மன்னிச்சு விட்டாரு. ஆனா மேல மேல பெரிய தப்ப நாம செஞ்சிக்கிட்டேயிருந்தா அவர் மன்னிக்கணும்னு ஒரு அவசியம் இல்ல. இந்தமாதிரி தண்டனதான் கிடைக்கும். நண்பன் முடித்தவுடன் நான் ஆரம்பித்தேன்.

பாவண்டா சுரேஷ். நம்ம அல்ப சந்தோஷத்துக்காக ஸ்கூல் கேண்டீன்காரர் போட்டு வச்சிருந்த டீயில கரப்பான் பூச்சியப் போட்டோம். விசயம் தெரிஞ்சு கண்டுபிடிச்சு நம்மள அவர் முன்ன நிறுத்தினப்போ எவ்ளோ பொறுமையா அறிவுரை சொன்னார். இப்ப ஒருபடி மேல போயி விளையாட்டுத்தனமா கிளாஸ்ரூம் சன்னல் கண்ணாடிகள உடைக்கறதுல பந்தயம் வச்சிக்கிட்டோம். அத நம்பிதானே சுரேஷ் வாட்டர் பாட்டில சன்னல்மேல எரிஞ்சான்.  நாம மூணுபேரும் ஒடிப்போயிட்டோம். அவன் மாட்டிக்கிட்டான். உடைஞ்ச கண்ணாடித்துண்டுகள் பாட்டிலோட கீழ்த்தளத்துல நின்னுக்கிட்டிருந்த ஒண்ணாம்கிளாஸ் பையன் தலையில பட்டுட்டதாலதான் இவ்ளோ பிரச்சினையும்.

பேசாம நாம போய் ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுறலாம். அப்பறம் அம்மா அப்பாகிட்ட சொல்லி அடிஒத வாங்கிக்கிட்டு சுரேஷத் தேட உதவலாம்.

நண்பன் ஒப்புக்கொண்டதால் பள்ளிக்கூடம் நோக்கி விரைகிறோம்.  .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *