அயோத்தி வழக்கில் சுமூகத் தீர்ப்பு
இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சுமூகமான தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய புனித இடத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கினை இந்து மகா சபைக்கும், மற்றொரு பங்கினைச் சன்னி வஃப்பு வாரியத்திற்கும், மூன்றாவது பங்கினை நிர்மோகி அகாரா அமைப்புக்கும் வழங்க அது உத்தரவிட்டது.
60 ஆண்டுகள் பழமையான அயோத்தி நில உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளையைச் சேர்ந்த நீதிபதிகள் எஸ். யு. கான், சுதிர் அகர்வால், வி. வி. சர்மா ஆகியோரைக் கொண்ட பிரிவு, மூன்று தனித் தனி தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இந்த நீதிபதிகளில் பெரும்பான்மையினர் அயோத்தி நிலம் பொதுவான சொத்து என்றும், இந்தச் சொத்துக்கு உரிமை கோரிய மூன்று அமைப்புகளாக இந்து மகா சபா, நிர்மோகி அகாரா, சன்னி மத்திய வஃப்பு வாரியம் ஆகியவை இந்தச் சொத்தைத் தங்களிடையே பொதுவாக வைத்திருந்தன என்றும் தெரிவித்திருந்தனர்.
நீதிபதி எஸ். யு. கான் தனியாக சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் கட்டிய மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டதல்ல என்றும், கோயில் ஒன்றின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டது என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் கான் மற்றும் அகர்வால் ஆகியோர் சர்ச்சைக்குரிய 2,400 சதுர அடி நிலத்தை மூன்று பிரிவாகப் பிரித்து உரிமை கோரிய மூன்று தரப்பினருக்கும் சமமாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு அளித்ததாக உத்திரபிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர் தேவேந்திர உபாத்யாயா தெரிவித்தார்.
நீதிபதி டி.வி. சர்மா தமது தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தில் பாபர் கட்டிய கட்டடம் இஸ்லாம் சமயக் கோட்பாடுகளுக்கு எதிராகக் கட்டப்பட்டது என்றும், மசூதிக்கு உரிய அம்சங்கள் அந்தக் கட்டடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மூன்று நீதிபதிகளும் சர்ச்சைக்குரிய இடத்தின் மத்திய குவிமாடம் இந்து மகா சபைக்கு சேர வேண்டும் என்றும், இந்த இடத்தில்தான் 1949ஆம் ஆண்டிலும் பின்னர் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது. சீதா ரசோய் பகுதியும், ராம் சபுத்தாரா பகுதியும் நிர்மோகி அகாராவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முழு பெஞ்சும் தெரிவித்தது. 3 மாதங்களுக்கு இப்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பினைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இந்தத் தீர்ப்பினை ஒட்டி, இந்தியா முழுவதும் முக்கிய பகுதிகளுக்குத் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. லாரிகள் ஓடுவது நின்றது. மொத்தமாகக் குறுஞ்செய்திகள் அனுப்புவதும் தடை விதிக்கப்பட்டது. பல கடைகள் முன்னதாகவே அடைக்கப்பட்டன. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான அலுவலகங்கள் மதியமே தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்பு, மூன்று தரப்பிற்கும் சமமான பங்கின் மூலம் அமைதித் தீர்வினை இலக்காகக் கொண்டு அமைந்துள்ளது.