ஐப்பசியில் ஆனந்த அன்னாபிஷேகம்

இராஜராஜேஸ்வரி

ஒவ்வொரு மாதமும் எழில் கோலம் காட்டும் பௌர்ணமிகளாக முழுநிலவுக் கோலங்களில் அழகு திகழ்ந்திடும் ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு என்றுமே முதலிடம். தனி விசேஷம். காலடி வைக்கும் புல் தரையெங்கும் ஜில்ஜில்லென்று பாதம் மூலம் தலைக்கேறி தாக்கும் குளிர்ச்சியான மழைத் தண்ணீரின் தடங்கள் என மகிழ்ச்சி பொங்கும்.

தாமிரபரணி ஆறு சுற்றிப் பாயும் திருநெல்வேலி நகரின் நடு நாயகமாக அமைந்துள்ளது நெல்லையை வேலி போலக் காத்தருளியதால்,  நெல்லையப்பர் ஆகி, திருநெல்வேலியான திருக்கோவில்.

பொற்றாமரைக்குளம், கருமாரி தீர்த்தம், தாமிரபரணி வயிரவ தீர்த்தம் என்று மொத்தம் 32 தீர்த்தங்கள். துறை சிந்து பூந்துறை இத்துறையில் சிந்திய எலும்புகள் பூக்கள் ஆயின.

தாமிரபரணி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லை என்று அழைக்கப்படும் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் ஆலயத்தில் அமைந்துள்ளது தாமிர அம்பலம்.

அர்த்த ஜாமத்தில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை அலங்காரம், மறு நாள் காலை விளா பூஜை. இறுதி காலத்தில் அனைத்து உயிர்களும் அன்னையிடம் அடங்குவதாக ஐதீகம். ஐயனுக்கு வலப்புறம் தனிக்கோவில் கொண்டு, செங்கோல் ஏந்தி இராஜராஜேஸ்வரியாய் அருளாட்சி புரிபவள் காந்திமதி அம்பாள். உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரித்து வழிபடுவதாக ஐதீகம்.

தேனீக்கள் தேனைச் சுவைக்கும் மலர்ச் சோலைகள் நிறைந்த திருநெல்வேலியில் உறையும் இறைவர். ஐப்பசி பிரம்மோற்சவம் பத்து நாள் அம்பாள் தபசு, பத்தாம் நாள் அம்பாள் கம்பா நதிக்கரைக்கு எழுந்தருளுகின்றாள். 11-ம் நாள் மஹா விஷ்ணு தங்கையை மணம் செய்து கொள்ள நெல்லையப்பரை அழைக்கின்றார். பின் திருக்கல்யாணம். பன்னிரண்டாம் நாளிலிருந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம். 14-ம் நாள் சிவன் சன்னதிக்கு மறு வீடு. அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு சீர் கொண்டு செல்கிறாள் இது காந்திமதி சீர் எனப்படுகிறது.

பஞ்ச பூதக் கலப்பால் உருவாகும் அன்னாபிஷேகப் பலன்கள்…மிகுந்த சிறப்பு பெற்றது.

ஐப்பசி மாதப் பௌர்ணமியில் நிகழ்கின்ற அன்னாபிஷேகம் சிவபெருமான் ஒருவனுக்கென்றே சிறப்பாகச் செய்யப்படுவது. அபிஷேகப் பொருட்களில் அன்னமும் ஒன்று. அன்னம் அபிஷேகப் பொருளாகவும் படையல் பொருளாகவும் விளங்குகிறது. பொங்கல், தயிரன்னம், எலுமிச்சம் பழ அன்னம், எள் அன்னம், சர்க்கரைப் பொங்கல், கூழ் முதலிய அன்னத்தின் வகைகளைப் பல கோவில்களில், பல தெய்வங்களுக்குத் தினமும் படைக்கின்றனர். ஆனால் சுத்த அன்னம் மட்டும் பெரும்பாலும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால் சிவலிங்கத்திற்கு மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.

அன்ன அபிஷேகத்தின்போது சிவலிங்கத் திருமேனி முழுவதும் அடங்கும்படியாக அன்னத்தை ஒரு வெள்ளைப் பட்டுப் போர்வையைப்போலச் சார்த்துகின்றனர். அப்போது கரிய சிவலிங்கத் திருமேனி, அன்னப் போர்வையால் தூய வெள்ளைத் திருமேனியாகக் காட்சியளிப்பது ஒரு அரிய- சிறப்பான வேறுபட்ட தரிசனமே. மேலும், வெள்ளைச் சிவலிங்கத்தை ஐப்பசிப் பௌர்ணமியில் தரிசிப்பதும் பொருத்தமே.

சிவன் அபிஷேகப் பிரியன். அன்னத்தால் அவனுக்கு அபிஷேகம் செய்வது உச்சநிலைச் சிறப்புடையதாகும்.

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருட்களைக் கொண்டு அன்ன அபிஷேகம் நடத்தப்படுகிறது. அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு, பக்திப் பரவசத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டு, முடிவில் அபிஷேக அன்னப் பிரசாதத்தை வாங்கி உண்கின்றனர்.

அறுவடையாகும் புதுநெல்லைச் சிவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்வதைப்போல, அவனுக்கு அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. அன்ன அபிஷேகத்தில் பொதிந்துள்ள உட்பொருளைத் தெரிந்து கொள்வோம்.

சிவன் பரம்பொருள். அவனது பிரதிபிம்பம் எல்லா உயிர்களிலும் பதிந்துள்ளது. அபிஷேக அன்னப் போர்வையால் சிவலிங்கத் திருமேனியில் அகமும் புறமும் குளிரும்போது, உயிர்களும் அவனது பேரருட்கவசத்தால் குளிர்வது இயற்கையே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, அந்தத் தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை.

அன்னம், அபிஷேக நிலையில் ஆண்டவனை முழுவதும் தழுவி, அவனைத் தன்னுள் அகப்படுத்தி, அவனிடம் அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயக்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் உண்மை நிலையை உணர்த்துவதே அன்ன அபிஷேகம்.

அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களின் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி. அன்னமே பிரத்யட்சமான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால், அது மிக உயர்வானது. அன்னம் பிரஜாபிஸ் சாக்ஷாத் அன்னம் விஷ்ணு சிவ என்பது முன்னோர் வாக்கு.

அன்னம் ஸ்வயம் பிராணாஅன்னம்தான் ஜீவன் என்பார்கள். உண்மையான பக்தி என்பது உயர்ந்ததைக் கடவுளுக்குச் சிரத்தையுடன் சமர்ப்பிப்பது.

நம் வாழ்வின் இயக்கத்துக்கு ஜீவாதாரமாக இருப்பது அன்னம். உபவாசம் (பட்டினி) இருந்து, மகாபிஷேகம் செய்து, அதன்பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது பக்தி, புண்ணியப் பலன்கள் பக்தர்களைச் சேர்கின்றன.

ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்னாபிஷேக நாள். ஆலயம் தோறும் அன்னாபிஷேகங்கள் முறைப்படி நடக்க உதவி செய்து இறையருள் பெறுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *