செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(354)

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
கழிபே ரிரையான்க ணோய்.

– திருக்குறள் – 946 (மருந்து)

புதுக் கவிதையில்...

அளவறியாமல் உண்பதால்
அடையும் இழிவினை
அறிந்து,
அளவோடு உண்பவனிடம்
அளவிலா இன்பம் நிலைத்திடும்..

அதுபோல
அளவே இல்லாமல்
அதிக உணவு உண்பவனிடம்
அகலாமல் நோய் நிலைக்குமே…!

குறும்பாவில்...

இழிவறிந்தே அளவாய் உண்பவனிடம்
இன்பம் என்றும் நிலைப்பதுபோல் அளவேயின்றி
இரையுண்பவனிடம் நோய்தான் நிலைக்குமே…!

மரபுக் கவிதையில்...

உணவ ததிகமாய் உண்பதனின்
உண்மை இழிவினை யறிந்தேதான்
உணவை யளவாய் உண்பவனே
உயர்வாய் இன்பம் பெற்றிடுவான்,
உணர்வா யதனைப் போலத்தான்
உரிய அளவினுக் கதிகமாகக்
கணக்கே யின்றியே உண்பவனைக்
கணமும் நீங்காப் பிணிகளுமே…!

லிமரைக்கூ...

உணவதிகம் உண்ணல் இழிவே,
அறிந்தளவாய் உண்போனுக் கின்பம்போல் அளவிலாமல்
உண்போனுக்குண்டு நோயால் அழிவே…!

கிராமிய பாணியில்

திங்காதே திங்காதே
தீனிய அளவுக்குமிஞ்சி
திங்காதே திங்காதே..

அதிகமாத் திங்கிறது அழிவுங்கிறத
அறிஞ்சியேதான்
அளவோட திங்கிறவனுக்கு
இன்பம் நெலச்சிருப்பதுபோல,
அளவில்லாமத் திங்கவுனவுட்டு
அகலாம நோயிதான் நெலச்சிடுமே..

அதால
திங்காதே திங்காதே
தீனிய அளவுக்குமிஞ்சி
திங்காதே திங்காதே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *