சேக்கிழார் பாடல் நயம் – 154 (விண்ணவர்கள்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
மெய்யன்பராகிய ஆனாயரின் குழலிசை கேட்டருளிய சிவபிரான், கருணை நிறைந்த உள்ளத்துடன், அவரைப்போன்ற திருவுள்ளம் படைத்த தவமுடைய பார்வதி தேவியுடன் இடப வாகனத்திலேறி, பிறைச்சடை முடியுடன் வான்வழியே வந்து சேர்ந்தார். எல்லாத்திசையிலும் புடை சூழ்ந்து பிரானின் பூதகணங்கள் கலந்து வருகின்ற பொழுதில் அவர்களில் பல்வேறு வகைப்பட்ட ஒலிகள் கலவாமல், நாயனாரின் குழலிலிருந்து எழுந்த ஐந்தெழுத்திசை மட்டுமே விளங்கியது. அதனைக் கேட்டவாறே, அவர் முன் எழுந்தருளினார்.
அப்போது தம் முன் நின்ற சிவபிரான் ஆனாய நாயனாரின் குழலோசை கேட்டு மகிழ்ந்தார். அவர் நாயனாரை, ‘’இப்படியே, குழலிசைத்தவாறே நாம் இருக்கும் கைலாயத்திற்கு வருக!’’ என்றழைத்தார். அவ்வாறே அடியாரும் தம் நிலை பெயராமல் சிவலோகத்துக்கு வந்து சேர்ந்தார். அதனைச் சேக்கிழார்,
விண்ணவர்கண் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க,
எண்ணிலரு முனிவர்குழா மிருக்குமொழி யெடுத்தேத்த,
அண்ணலார் குழற்கருவி யருகிசைத்தங் குடன்செல்லப்,
புண்ணியனா ரெழுந்தருளிப் பொற்பொதுவினிடைப்புக்கார்.
என்று பாடினார்.
இதன் பொருள்
தேவர்கள் பொழியும் கற்பகப் பூமழை நெருங்கி உலகின்மேல் விளங்கவும், அளவில்லாத அருமுனிவர் கூட்டங்கள் மறைமொழிகளாலே எடுத்துத் துதிக்கவும், பெருமையுடைய ஆனாயர் குழலிசையை வாசித்துப் பக்கத்தில் உடன்செல்லவும், புண்ணியப் பொருளாயுள்ள சிவபெருமான் அங்குநின்றும் எழுந்தருளிப் பொன்னம் பலத்தினிடைப் புகுந்தருளினர்.
விளக்கம்
விண்ணவர்கண் மலர்மாரி என்ற தொடர், தேவர்கள் பொழியும் பூமழையைக் குறித்தது. . மலர் – கற்பகமலர். இவ்வுலகில் தெய்வ அற்புதங்கள் நிகழும்போது தேவர்கள் பூமழை பொழிவர். தேவருலகத்தில் இவ்வகைத் திருவருள் வெளிப்பாடான நிகழ்ச்சிகள் நிகழ்தற்கிடமில்லை யாதலின், அவர்கள் பூவுலகின் இவை நிகழக் கண்டபோது இவ்வாறு பாராட்டிப் பூமழை பொழிவர் , என்பதைக் குறித்தது! இருக்குமொழி- வேதமந்திரங்கள். இருக்கு என்பது நால்வேதங்களையும் பொதுவாகக் குறித்தது. இறைவன் திருவாக்கில் இருக்கும்மொழி என்பதும், என்றும் இருக்கும் நித்தியமான மொழி என்பதையும் குறிக்கும். மொழிகளால் ஏத்த என்க.
அண்ணலார் – பெருமையுடையவர். உலகில் அவரது பெருமை விளங்கிய இடமாதலின் இப்பெயராற் கூறினார்.
குழற்கருவி இசைத்து அங்கு உடன்செல்ல – குழல் வாசிப்பினைக் கேட்க, “நம்பால் அணைவாய்” என்று அருள்செய்யப் பெற்றாராதலின், அவ் வாணையின்படியே இறைவனருகில் குழல் இசைத்துச் சென்றார். அன்றுபோலவே இன்றும் என்றும் குழல் வாசித்து ஐயரின் அருகு ஆனாயர் எழுந்தருளி யிருக்கின்றார் என்க.
“நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் னடியின்கீ ழிருக்க” வேண்டும்
என்று அம்மையார் தாம் வேண்டிக்கொண்டபடி ஐயரது “எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றார்” என்ற சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. மேலும் அடியார்களை ,
“இடையறாமற் கும்பிடும் கொள்கை யீந்தார்” ,
“தம்முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதங் கொடுத்து”,
“கணத்தின் முன்னாங்கோ முதற்றலைமை பெற்றார்”,
“என்வலத்தில் மாறிலாய் நிற்க”,
“துணையடிகள் தொழுதிருக்க” ,
“நம் மன்னுலகு பிரியாது வைகுவாய்”,
“அரனார் மகனாராயினார்”
“சிவலோகத்திற் பழவடிமைப் பாங்கருளி” ,
“என்றும் பிரியா தேயிறைஞ்சியிருக்க” ,
“வன்றொண்ட ராலால சுந்தர ராகித்தாம் வழுவாத, முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்;
முதற்சேரர் பெருமானு நன்மை சேர்கண நாதரா யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார்” ,
“கமலினி யாருட னனிந்திதை யாராகி, மலைத் தனிப்பெரு மான்மகள்
கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்”
என்றெல்லாம் கூறிய சிறப்பை அறிந்து கொள்ளுதல், வேண்டும்!
புண்ணியனார் – புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாயும், பிறப்பிடமாயும், இருப்பிடமாயும், சேர்விடமாயும் உள்ளவர். சிவபெருமான்.
இப்பாடலில் ஆனாய நாயனாரின் சிவபத்தித்திறம், அவர்தம் குழலிசையாகவே வெளிப்பட்டதையும், அதன் சிறப்பை நிலவுலகினரும், தேவருலகினரும் அதனைக் கேட்டுப் போற்றிய சிறப்பையும் விளக்கியது. இறைவன் திருவருளைப்பெற நாம், நாமறிந்தவற்றைச் செய்தாலே போதும் என்பதைக் குறித்து, இப்பாடல் நமக்கு வழிகாட்டுகிறது.