சங்கர மடம் போட்ட சோறு
பாஸ்கர்
அது சுமார் எழுபதுகளின் தொடக்கம். எங்கள் குடும்பத்தில் வறுமை நர்த்தனம் ஆடிய நேரம். என் தந்தைக்குச் சின்ன அரசாங்க வருமானம். முழி பிதுங்கி நின்ற நேரம். ஐந்து பேரைக் கொண்ட குடும்பம். சின்ன வாடகை வீடு. கடைசி வரை பரிதாபம் காட்டாத வீட்டுக்காரர். காலையில் என்ன உண்டு பள்ளிக்குச் சென்றேன் என்றே நினைவில்லை. ஆனால் எனக்கு மதியச் சாப்பாடு பள்ளியில் தான். கொஞ்சநாள் மனம் கூசி உண்டேன். சின்ன வயது வேறு. அவமானம் பெரிதாகத் தெரியவில்லை.
அறிவு வளரத் தன்மானம் முறுக்கேறும் போல். என்னை யாரும் இந்தச் சூழல்களுக்காக ஒதுக்கவில்லை. நல்ல மனிதர்கள் நடமாடிய அந்த மயிலாப்பூர் ஆபிரகாம் தெரு குந்துமணி பங்களா எங்கள் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது. மாலையில் எங்கள் உணவகம் சங்கர மடம். அங்குக் கிடைக்கும் சோற்றுக்கு நான் பலமுறை நின்றதுண்டு. வீடு சொன்னது . நான் செய்தேன்.
அப்படி ஒரு நாள் நான் மிகவும் பயந்த இரவு. ஏழு மணிதான் இருக்கும். இந்தியா பாகிஸ்தான் போர் மூண்ட நேரம். ஊரடங்கு அமலில் இருந்த சமயம். செய்திகளில் சொன்னது போல், எல்லா விளக்குளும் அணைக்கப்பட்டு ஊரே இருள். அப்போது கலங்கரை விளக்கம் நீதிமன்றம் உள்ளே. அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. மிக வேகமாக ஒரு விமானம் மேலே செல்ல, நான் வாழ்வில் பயந்த நேரம் அது. நான் பயந்த அந்த இடம் சங்கர மடம். சித்திரைக் குளம் பக்கம்.
இப்போதும் அந்த வழியாகச் செல்லும்போதெல்லாம் எனக்கு அந்த வறுமை நாட்கள் உள்ளே புகும். உண்மையான வறியவன் எந்த உயர்விலும் தனது ஏழ்மையை மனசளவில் விடமாட்டான் என்றே நினைக்கிறேன். வறுமை கொடியது என்பது ஒன்று. வளர்ந்த நிலையில் ஒருவர் அதனை மறக்க முயல்வது அதனை விடக் கொடியது. மனத்தில் கர்வமும் திமிரும் ஓடும் போது அந்தச் சோற்றுக்காக வரிசையில் நின்ற நாட்கள் வந்து போகும்.
இதைப் பதிவிட அவமானம், அசிங்கம் இல்லை. ஒரு வேளை, கஷ்டப்படும் மக்களுக்குச் சின்ன உபகாரமாவது செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் இங்கு தான் விதைந்து எழும்பி இருக்க கூடும். இந்த ஊரடங்கு இருட்டில் சில சமயம் இரவில் பயணிக்கும்போது அண்மையில் பல சமயம் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது.
என் உடம்பில் ஓடும் உதிரம், கொஞ்சம் கொடுத்தது சங்கர மடம். அன்றைக்குச் சங்கராலயம்.
சென்ற வாரம் நண்பர் ரமேஷ் என் இல்லம் வந்து என்னிடம், இது சங்கர மடம் பொங்கல், சாப்பிடுங்கோங்கோண்ணா என்று சொன்னார்.
அவரின் அன்பு, நெகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து நினைவுகளில் தள்ள, இப்போது மனம் விம்முகிறது. வாழ்க்கையில் அழுகை பெரிய வரம். அதுவும் தனிமையில் அழும்போது மனம் சுத்தமாகிறது. என் வெப்பம் என்னை மேம்படுத்தட்டும்.