பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 8

0

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

அரிஅரவேலன்,முக மண்டலத்தில் எழுப்பிய கேள்வி:

மதுரையில் 5ஆவது முறையாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதைத் தெரிவிக்க பின்வரும் தொடர்களில் எது சரியானது?
* 5ஆவது மதுரை புத்தகக் கண்காட்சி
* 5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி
* மதுரையில் 5ஆவது புத்தகக் கண்காட்சி
* மதுரையின் 5ஆவது புத்தகக் கண்காட்சி
* மதுரையில் நடைபெறும் 5ஆவது புத்தகக் கண்காட்சி

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

‘மதுரையில் நடைபெறும்’ என்பது பெயரெச்சத் தொடர்; அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல் தொகுதி ‘5ஆவது புத்தகக் கண்காட்சி’. இரண்டும் சேர்ந்தது ‘மதுரையில் நடைபெறும் 5ஆவது புத்தகக் கண்காட்சி’ என்னும்  பெயர்த் தொடர். இந்தப் பெயர்த் தொடரை வினையை நீக்கிச் சுருக்கலாம். வினை இல்லாதபோது பெயரோடு வரும் வேற்றுமை உருபு ‘உரியது’ என்ற பொருளைத் தரும் ஐந்தாம் வேற்றுமை உருபாக (இன்) மாறும். அப்படி மாறினால் சுருக்கிய தொடர் பெயர்த் தொடராகவே இருக்கும். இதுவே ‘மதுரையின் 5ஆவது புத்தகக் கண்காட்சி’.

வேற்றுமை உருபு மாற்றம் நிகழாதபோது (‘மதுரையில் 5ஆவது புத்தகக் கண்காட்சி’) தொடர் பெயர்த் தொடர் அல்ல; அது, சுருக்கிய வாக்கிய அமைப்பு. இதைப் பயன்படுத்தும்போது ‘நடைபெற்றது’ போன்ற வினைமுற்று இறுதியில் தொக்கி நிற்கும். சுருக்கிய  வாக்கிய அமைப்புகளைப் பத்திரிக்கைச் செய்திகளின் தலைப்புகளில் பார்க்கலாம்.

ஐந்தாம் வேற்றுமை உருபு இல்லாமலும் இரண்டு பெயர்ச் சொற்கள் அடுக்கிவந்து ஒரு பெயர்த்தொடர் உருவாகலாம். அதுவே ‘5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி’. பல பெயர்கள் அடுக்கி வந்து பெயர்த் தொடர் ஆகும்போது பெயர்கள் வரும் வரிசையில் ஒரு நிரல் உண்டு. எண்ணுப் பெயர் மற்ற பெயர்களுக்கு முன்னால் வரும். எனவே ‘*மதுரை 5ஆவது புத்தகக் கண்காட்சி’ என்று வரவேண்டிய தொடர் ‘5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி’ என்று வரிசை மாறி வருகிறது.

பெயர்கள் அடுக்கி வரும்போது, மேலே காட்டிய தொடரில் உள்ளது போல், ஒற்று இரட்டிக்கும். இன்றைய தமிழில் ஒற்று இரட்டாமல் எழுதுவது பெருகி வருகிறது. வழக்கு மிகுதி கருதி அதையும் ஏற்றுக்கொள்ளலாம். இதுவே ‘5ஆவது மதுரை புத்தகக் கண்காட்சி’.

மகரத்தில் முடியும் பெயர்களையும் ஒற்று மிகாமல் அடுக்கி‘புத்தக கண்காட்சி’ என்று எழுதுவோரும் உண்டு.

கொடுத்துள்ள ஐந்து தொடர்களும் சரியானவைதான். அவற்றின் இலக்கணக் கூறுகள்தான் வேறுபடுகின்றன. முதல் தொடரை வேண்டுமானால் பள்ளியில் சொல்லித் தரும் இலக்கண விதியிலிருந்து முரண்பட்டது என்று சொல்லலாம்.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *