அவசரநிலை பிரகடனம் -1975 – நாற்பத்தேழு வருடங்கள் நிறைவு

பாஸ்கர்
கிட்டத்தட்ட நாற்பத்து ஏழு வருடங்கள் முன்பு இரவின் பிந்தைய நேரத்தில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தார். சட்டங்களை மொத்தமாய்க் கையில் அள்ளி, எதிர்ப்போர் எல்லோரையும் அடைத்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என உலகுக்குச் சொல்லத் துடித்த ஒரு கோபமான சிந்திப்பு. அடக்கி ஆள்வது என்பதே ஆணவ புத்தி. அது ராணுவத்திற்கு சரி. ஒரு தேசத்தில் ஆட்சி செய்யும் அரசு செய்யக் கூடாது. எமெர்ஜென்சி இந்திராவுக்கு ஆயுதம்.
எதிர்க்கட்சிகள் திரண்டு இணைந்தன. எவ்வளவு தேசாபிமானிகள் அந்த எதிர்ப்பில் இருந்ததன் நிலையே எவ்வளவு பெரிய தவறை இந்திரா செய்கிறார் என்பது புரிந்தது. இந்திரா அசையவில்லை. அவர் மகன் சஞ்சய் இன்னொரு பக்கம் மீறல். பிளுமோடி, ஜார்ஜ் பெர்னான்டெஸ், செழியன், மொரார்ஜி, ஜெயப்ரகாஷ் நாராயண் என்ற எவ்வளவு நல்ல மனிதர்கள் எல்லாம் குமுறினார்கள். தெற்கின் மொத்த குமுறலைச் சொன்னவர் காமராஜர். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திரா சுடப்பட்டு இறப்பார் என்றும் , ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடக்கும் என யார் அறிந்தார்?
எனக்குத் தெரிந்து அவசர நிலையைப் பெரிதும் எதிர்த்து, கொஞ்சம் கூடப் பயப்படாமல் அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கி வாழ்ந்த துணிவான மனிதர் என்றால் அது சோ. ராமஸ்வாமி தான். எங்கள் கல்லூரிக் காலத்தில் இந்திரா செய்வது தப்பு எனப் புரிய வைத்ததே அவர் தான்.
இந்திரா செய்வதெல்லாம் நகைச்சுவை என்றும் அவருக்கு நாம் பரிசளிக்க வேண்டும் எனச் சொல்லி ஒரு பைசாவை மணி ஆர்டர் செய்யச் சென்ற பலருள் நானும் ஒருவன். கச்சேரி ரோடு தபால் அலுவலகம் அப்போது தான் புதிதாய்த் திறந்த நேரம். ஊழியர் ஒன்றும் சொல்ல முடியாது. இதைச் செய்யச் சொல்லி துக்ளக்கில் பிரகடனம் செய்ததே சோ தான். எங்கும் கூடி நின்று பேச முடியாது. இரவுக் காட்சி அரிது. சென்சார் கெடுபிடி அதிகம். ஆனாலும் கட்சிகளை எல்லாம் தாண்டி எதிர்க்குரல் கொடுத்த சோ ராமஸ்வாமி நமக்கு கிடைத்த அரண்.
இருபது வண்ண மலர் சூடிய அன்னை இந்திரா நடந்து வந்தார் எனப் பிரசார பாரதி அரசின் ஊதுகுழலாயிற்று. பிரகடனம் செய்த நான்கு மாதத்தில் காமராஜர் மறைந்தார். ஒன்பது மாதங்கள் நடந்த பல அத்துமீறல்களுக்குப் பின் எமெர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. அப்போது இந்திரா அம்மையாருக்கு வயது அம்பத்தெட்டு பின்னாளில் நானாஜி தேஷ்முக் இது பற்றியும் புத்தகம் எழுதினார். அவர் மட்டுமல்ல – இன்னல்களை அனுபவித்த தலைவர்கள் பலரும் எழுதினார்கள்.
சில வருடங்கள் கழித்து அவசர நிலை நியாயம் தானோ எனச் சிலர் கூறி வந்த நிலைக்கு இந்திய அரசியல் சூழல் மாறியது. பின்னாளில் இதே சோ, சர்வாதிகாரமற்ற அவசர நிலை தேவை என்றே சொல்லிவிட்டார். ஆனாலும் பாரத சரித்திர வரைபடத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கருப்பு மசிக் குடுவை கவிழ்ந்தது உண்மை.