குறளின் கதிர்களாய்…(421)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(421)
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.
-திருக்குறள் -428(அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
அகில வாழ்வில்
அஞ்சிடத்தக்க தீயசெயலைச்
செய்ய
அஞ்சாமலிருப்பது
அறிவற்ற மூடச்செயலாகும்,
அத் தீய செயலை
அஞ்சிச் செய்யாமல் விடுவது
அறிவுடையோர் செயலாகும்…!
குறும்பாவில்…
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமல் செய்வது
அறிவில்லா பேதைகளின் செயலே, அதற்கஞ்சி
அதனைச் செய்யார் அறிவுடையோர்…!
மரபுக் கவிதையில்…
செய்யத் தகாத தீச்செயலைச்
சிறிதும் அஞ்சா வகையினிலே
செய்யத் துணிந்தே அறிவிலாதே
செயலில் வீழ்வர் அறிவிலாதார்,
உய்யும் வகையை யறிந்துள்ள
உயர்ந்த அறிவைக் கொண்டோர்கள்
செய்யார் ரதனை அஞ்சியேதான்
செயாமல் விட்டு விடுவாரே…!
லிமரைக்கூ…
அஞ்சிடாமல் செய்தே உய்யார்
அறிவிலாதார், தீயதென அறிந்தஞ்சி அறிவுடையோர்
அச்செயலை எப்போதும் செய்யார்…!
கிராமிய பாணியில்…
அறிவொடம அறிவொடம
அதுதான் அறிவொடம,
பயப்படவேண்டியதுக்குப் பயந்து
பாத்துச்செய்யிறதுதான் அறிவொடம..
ஆபத்து வருமுண்ணு
அஞ்சாம கெட்டதச் செய்யிறவன்
அறிவில்லாத முட்டாளுதான்,
தீங்குதான் தருமுண்ணு அறிஞ்சி
அதுக்குப் பயந்து
அதச் செய்யாம இருக்கவந்தான்
அறிவு உள்ளவன்..
தெரிஞ்சிக்கோ
அறிவொடம அறிவொடம
அதுதான் அறிவொடம,
பயப்படவேண்டியதுக்குப் பயந்து
பாத்துச்செய்யிறதுதான் அறிவொடம…!