வை.கோபாலகிருஷ்ணன்

அந்தப் பரபரப்பான பஜாரில் 15 நிமிடங்களாக டிராபிக் ஜாம். வாகனங்கள் ஏதும் நகர்வதாகவே தெரியவில்லை. கார் ஓட்டி வந்த நந்தினிக்குக் கடுப்பாக வந்தது.

கைக்குழந்தையுடன் கடைவீதிக்கு ஏதோ பொருட்கள் வாங்க வந்த மல்லிகா போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதால் ரோட்டைக் கிராஸ் செய்து விடலாம் என்று போகும் போது, தன் அக்கா நந்தினியைக் காரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் “அக்கா, எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” என்று ஆசையுடன், பேச வந்தும், நந்தினி கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு, “உனக்கு என்ன வேண்டும், லிஃப்ட் வேண்டுமானால் ஏறிக் கொள்,  என்னை அக்கா என்றெல்லாம் அழைக்காதே” என்கிறாள்.

மல்லிகா தன் கண்களில் வந்த நீரைத் துடைத்துக் கொள்கிறாள். தன் வீடு மிக அருகிலேயே இருந்தும், லிஃப்ட் எதுவும் கேட்டு தான் அவளை நெருங்கவில்லை என்றாலும், நந்தினியுடன் மனம் விட்டுப் பேச ஒரு வாய்ப்பாகக் கருதி,  அந்தக் காருக்குள் ஏறித் தன் அக்காவின் இருக்கை அருகிலேயே அமர்ந்து கொள்கிறாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் மிகவும் பாசமாக, பிரியமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறாள்.

தான் உயிருக்குயிராய்க் காதலித்த ஆனந்த்துக்கே தன்னைப் பதிவுத்திருமணம் செய்து வைத்தவளும் இதே தன் அக்கா நந்தினி தான் என்பதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள்.

தாயில்லாமல் வளர்ந்த தங்களைப் பாசத்துடன் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் தந்தை சம்மதிக்காத போதும், தனக்காக அவரிடம் பரிந்து பேசி, வாதாடியும் எந்தப் பயனுமில்லாததால் , உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, தனக்கும் ஆனந்துக்கும் ஐடியா கொடுத்தவளும் இதே நந்தினி அக்கா தான்.

அது மட்டுமல்லாமல் தானே பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து, பதிவுத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டுச் சென்றவளும் இதே அக்கா நந்தினி தான்.

ஆனால் 2 வயது சிறியவளான தான், அவசரப்பட்டு காதல் வசப்பட்டு, ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால், அக்கா நந்தினிக்கு இன்னும் சரியான வரன் அமையவில்லை.

அவள் கோபத்திற்கான காரணம் அதுவல்ல என்பது மல்லிகாவுக்கும் தெரியும்.  ஒரே ஆதரவாக இருந்து வந்த தங்கள் அப்பாவின் திடீர் மரணத்திற்குக் காரணம் தன்னுடைய கலப்புத் திருமணமே என்பதை மட்டும், அக்கா நந்தினியால் தாங்க முடியாமல் உள்ளது என்பதும் மல்லிகாவுக்கும் தெரியும்.

மல்லிகாவிடமிருந்து குழந்தை நந்தினியிடம் தாவி ஸ்டியரிங்கை பிடித்து விஷமம் செய்ய ஆரம்பித்தது. முதன் முதலாக அந்தக் குழந்தையைப் பார்த்ததும், அதன் முகத்தில் தன் அப்பாவின் சாயல் அப்படியே இருப்பதைப் பார்த்த நந்தினி மிகவும் ஆச்சர்யப்பட்டாள்.

”உன் பெயர் என்னடா”  என்று அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளியபடி கேட்கலானாள்.

“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.

தன் அப்பாவின் பெயரையும் அந்தக் குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி.

போக்குவரத்து சரியாகி வண்டிகள் நகரத் தொடங்கின.  நந்தினி மல்லிகாவை எங்கே கொண்டு போய் விடவேண்டும் என்பது போல பார்க்கலானாள்.

நேரே போய் முதல் லெஃப்ட் திரும்பச் சொன்னாள். கார் திரும்பியதும் வலது புறம் உள்ள மிகப் பெரிய பச்சைக் கட்டடம் என்றாள்.

கார் நிறுத்தப்பட்டது. நந்தினியை உள்ளே வரச் சொல்லி மல்லிகா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். குழந்தையும் நந்தினியை கட்டிப் பிடித்துக் கொண்டு காரைவிட்டுக் கீழே இறங்க மறுத்தது. பிறகு நந்தினியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மல்லிகா வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

மல்லிகாவின் கணவரும், அவருடைய சகோதரரும் நந்தினியை வரவேற்று உபசரித்தனர். அங்கிருந்த செல்வச் செழிப்பான சூழ்நிலையும், மனதிற்கு இதமான மனிதாபிமான மிக்க வரவேற்பும், நந்தினியை மனம் மகிழச் செய்தன.

பூஜை அறையில் தன் அப்பா ராமானுஜம் அவர்களின் மிகப் பெரிய படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழவே செய்தாள். குழந்தையை படத்தருகே கொண்டு சென்றாள் நந்தினி. “உம்மாச்சித் தாத்தா” என்றது அந்தக் குழந்தை.

தன் அக்காவுக்கு ஆசை ஆசையாக டிபன் செய்து கொண்டு சூடாகப் பரிமாற வந்தாள், மல்லிகா. மல்லிகாவின் கணவன் ஆனந்த் நந்தினியை மிகவும் ஸ்பெஷலாக விழுந்து விழுந்து கவனித்து உபசரித்தார்.

தன் தம்பிக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை, மெதுவாக சமயம் பார்த்து நந்தினியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தன் ஆவலைத் தெரிவித்து , அவள் விருப்பத்திற்காகவும், சம்மதத்திற்காகவும் தாங்கள் எல்லோருமே காத்திருப்பதாகக் கூறினார், ஆனந்த்.

தெருவில் நின்று கொண்டிருந்த தன் தங்கை மல்லிகாவை, தான் வேறு யாரோ போல “லிஃப்ட் வேண்டுமானால் காரில் ஏறிக்கொள், என்னை அக்கா என்று அழைக்க வேண்டாம்” என்று சொன்னதை நினைத்து வருந்தினாள் நந்தினி.

தனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியா விடை பெற்றுப் புறப்படலானாள், நந்தினி.

தன் தந்தை உருவில் பிறந்துள்ள தன் தங்கை பிள்ளை ராமானுஜத்திற்கு டாட்டா சொல்லி புறப்பட்டாள். அந்தக் குழந்தையை விட்டுப் பிரிய மட்டும் அவள் மனம் மிகவும் சங்கடப்பட்டது.

தனக்குத் திருமணம் ஆகி இந்த வீட்டுக்கே வந்துவிட்டால், தினமும் அவனைக் கொஞ்சி மகிழலாம் என்று அவள் மனம் சொல்லாமல் சொல்லி மகிழ்வித்ததை,  அவள் முகத்தில் பிரதிபலித்த சந்தோஷம் காட்டிக் கொடுத்தது.

நந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத் தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப் போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே.

வழியனுப்பக் கார் அருகே குழந்தை ராமானுஜத்துடன் மல்லிகா, ஆனந்த், ஆனந்தின் தம்பி ஆகியோர் சூழ்ந்து நிற்க, “கொஞ்ச நாள் பொறு தலைவா …… ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா …..’’ என்ற பாடல் யாருடைய செல்போனிலிருந்தோ அழைப்பொலியாக ஒலித்தது, நல்லதொரு சகுனமாக நந்தினி உள்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.