-மேகலா இராமமூர்த்தி

இந்திரசித்தைக் கொன்ற இளவல் இலக்குவனைப் பாராட்டிய இராமன் இலக்குவனிடம், ”ஆடவர் திலகனே! இந்த வெற்றி நின்னால் கிடைத்ததன்று; அனுமன் எனும் உயர்ந்தவனால் கிடைத்ததன்று; வேறோர் தெய்வத்தின் சிறப்பினால் விளைந்ததும் அன்று! இது வீடணன் தந்த வெற்றி!” என்று வீடணனைப் புகழ்ந்தான்.  

ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று
 வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால்.
(கம்ப: இந்திரசித்து வதைப் படலம் – 9185)

இந்திரசித்தைக் கணை எய்து கொன்றது இலக்குவன்தான்! அப்படியிருக்க ”இது வீடணன் தந்த வென்றி” என்று இராமன் புகழ்ந்துரைக்கக் காரணம் என்ன?

நாகபாசப் படலத்தின் இறுதியில் இலக்குவன் நாகக் கணையால் கட்டுண்டு வீழ்ந்துகிடந்தது கண்டு மனம்பதைத்த இராமன், ”இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் போர் ஏற்பட்டது பற்றி நீ என்னிடம் கூறாததால் இந்திரசித்தனை நான் கொல்ல இயலாமல் கெடுத்துவிட்டாய் வீடணா!” (கம்ப: 8227) என்று வீடணனைக் கடிந்துகொண்டதைக் கண்டோம்.

அவ்வாறு தேவையில்லாமல் வீடணனைக் கடிந்துகொண்டது இராமனுக்கே பின்னர் வருத்தத்தை அளித்திருக்கக்கூடும்; அதற்குக் கழுவாய் தேடும் வகையில் இப்போது வீடணன் நேரடியாக இந்திரசித்தோடு போரிட்டு அவனைக் கொல்லாதபோதிலும் அவ்வெற்றியை வீடணனுக்குச் சமர்ப்பித்துத் தன் மனத்தை இராமன் ஆறுதல்படுத்திக்கொண்டதாகக் கருதலாம் என்கிறார்  கம்பனில் தோய்ந்தவரான மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன்.

இந்திரசித்து இறந்ததை இராவணனிடம் சொல்லச் சென்ற தூதுவர்கள் தம் உடலும் மனமும் நடுங்கியவாறே, ”அவன் இறந்தான்” என்று அமங்கலமாய்ச் சொல்ல அஞ்சி, ”உன் மகன் இன்று இல்லாமற் போனான்!” என்று சொல்லினர்.

அதனைக் கேட்ட அளவில் கண்கள் தீயைக் கக்கச் செய்திசொன்ன தூதுவர்களின் கழுத்துக்களை வாளால் வீசித் துண்டித்துவிட்டுச் சோர்ந்த இராவணன், தன் மகனை நினைந்து துன்பமும் பகைவரை நினைந்து சீற்றமும் கொண்டவனாய்த் தரையைக் கைகளால் அறைந்தான். வெந்தபுண்ணில் வேல்பாய்ந்ததுபோல் நொந்தவனாகி, என் சிறந்த மகனே என்பான்; என் தந்தையே என்பான்; என்னுயிரே என்பான்; உனக்குமுன்னர் உயிர்விட வேண்டிய நான் இன்னுமிருக்கிறேனே என்பான். இவ்வாறு இந்திரசித்தின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினான் இராவணன்.

மைந்தவோ எனும் மாமகனே எனும்
எந்தையோ எனும் என்னுயிரே எனும்
முந்தினேன் உனையான் உளனே எனும்
வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான்.
(கம்ப: இராவணன் சோகப் படலம் – 9195)

பின்பு புலம்பலை நிறுத்திவிட்டு எழுந்த இராவணன் தன் மகனின் உடலைத் தேடுவதற்காகப் பொருகளம் நோக்கிப் புறப்பட்டான். அங்கே பல பிணங்களையும் புரட்டிப்பார்த்து இந்திரசித்தின் கையையும் தோளையும் அதைத் தொடர்ந்து அவன் மெய்யையும் (உடல்) கண்டெடுத்தான். அவ்வுடலின்மீது வீழ்ந்து கதறியவன்,

”சினத்தொடு நின்று வெற்றியெய்தி இந்திரனுடைய செல்வத்தையடைந்து நினைத்ததை முடித்துநின்ற நான், சீதை என்கின்ற ஒருத்தியின் காரணமாக அந்நிலையிழந்து, எனக்கு நீ செய்யத்தக்க இறுதிக் கடன்களையெல்லாம் வருந்தி வருந்தி உனக்கு நான் செய்யும் நிலையை அடைந்தேன்! என்னைவிட இழிந்தவர் இவ்வுலகில் யாருளர்?” என்று அரற்றினான்.

சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி
நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால்
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார்.
(கம்ப: இராவணன் சோகப் படலம் – 9224)

பெறலரும் மைந்தனான இந்திரசித்தின் மறைவு தந்த வேதனையால் இராவணனின் அகமனம் திறந்து தன்னுடைய முறையற்ற கழிகாமமே இத்துயரத்துக்குக் காரணம் என்று அவனை ஒத்துக்கொள்ள வைப்பதை இங்கே காண்கின்றோம். அம்மட்டோ? தந்தைப் பாசத்தின் ஆழத்தையும், எப்படிப்பட்ட வீரத் தந்தையாலும் புத்திர சோகத்தைத் தாங்கவியலாது என்பதையும் இப்பாடல் அங்கை நெல்லியெனப் புலப்படுத்திப் படிப்போர் கண்களைக் குளமாக்கி விடுகின்றது.

இந்திரசித்தின் உயிரற்ற உடலையெடுத்துக்கொண்டு (தலையை இலக்குவன் எடுத்துக்கொண்டு போய்விட்டபடியால் அஃது இராவணனுக்குக் கிட்டவில்லை.]  இலங்கைக்குச் சென்றான் இராவணன். இந்திரசித்தின் மனைவியர் தம் கணவனின் உயிரற்ற உடலம் கண்டு தரையில்வீழ்ந்து புரண்டு அழ, இந்திரசித்தைப் பெற்றவளும் மயன்மகளுமான மண்டோதரி தலைவிரி கோலமாய் அங்குவந்து, மலைமீது மயில்வீழ்ந்ததுபோல், மகன் உடல்மீது வீழ்ந்து மூர்ச்சையுற்றாள். சிறிதுநேரத்தில் மூர்ச்சைதெளிந்து எழுந்தவள்,

”நாளுக்குநாள் கலையினால் வளர்கின்ற சந்திரனைப்போல் வளர்கின்ற இளம் பருவத்திலே உன் வில்லினால் இந்திரனை வெல்லக்கண்டு மகிழும் தவத்தை முன்பு செய்திருந்தேன்; தலையில்லாத உன் உடலைக் காண ஐயோ…என்ன தவத்தை (இங்கே பாவத்தைக் குறித்தது) செய்தேன்! நல்ல நினைவு இல்லாத நான் இனியும் இந்த நிலையில்லாத வாழ்வை மதிப்பேனா?” என்றாள்.

கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே உன்
சிலையினால் அரியைவெல்லக் காண்பதுஓர் தவம்முன் செய்தேன்
தலைஇலா ஆக்கைகாண எத்தவம் செய்தேன் அந்தோ
நிலைஇலா வாழ்வை இன்னும் நினைவெனோ நினைவுஇலாதேன்.
(கம்ப: இராவணன் சோகப் படலம் – 9232)  

இவ்வாறு இந்திரசித்தின் இளமைக்காலச் சாதனைகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லி அரற்றிய மண்டோதரி, ”பஞ்சுப்பொதியில் நெருப்புப் பற்றி எரிந்ததுபோலக் கடல்போன்ற அரக்கர்படை அனைத்தும் மனிதர் இருவரால் மாண்டதே தவிர மீண்டதில்லை; சீதையெனும் பெயருடைய அமுதத்தால் செய்த நஞ்சினால் நாளை இலங்கைவேந்தன் நிலையும் இஃதே என்பதை எண்ணி நான் அஞ்சுகின்றேன்” என்றுரைத்தாள்.

தன் கணவன், சீதையை அவள் விருப்பத்துக்கு மாறாய் வலிந்து பற்றிக்கொணர்ந்து சிறைவைத்திருக்க, அவன்மீது குற்றம் காணாதவளாய்ச் சீதையை அமுதாகத் தோன்றிய நஞ்சு என்று மண்டோதரி விளிப்பது கணவன்மீது அவள் கொண்ட மூடத்தனமான ’பதிபக்தி’யாகவே தெரிகின்றது.

மண்டோதரியின் மொழிகளால் சீதைமீது சீற்றங்கொண்ட இராவணன், ”கல்நெஞ்சினளாகிய வஞ்சகி சீதையை இப்போதே வாளால் வெட்டிக் கொல்லுகின்றேன்” என்று கிளம்பினான். இராவணன், தான்செய்த தவற்றுக்குச் சீதையை வஞ்சகி என்றுரைப்பது அடாதது அல்லவோ?

அப்போது இராவணனைத் தடுத்த அவன் அமைச்சன் மகோதரன்,  ”புலத்திய முனியின் மரபில் வந்தவனே! பெண்கொலை புரிதல் மண்ணுலக நீதியன்று! அறமுமன்று! அதனால் அழியாத பழிவந்து உன்னைச் சேரும்!” என்று எடுத்துரைக்கவே வாளைக் கீழேபோட்டான் இராவணன்.

அடுத்து, இராவணன் ஆணைப்படி உலகிலிருந்த அரக்கர்படை அனைத்தும் அவனைக் காண வந்துசேர்ந்தது. அவர்களைப் போருக்கழைத்த காரணத்தை அவர்களிடம் விரிவாய் விளக்கினான் இராவணன். வேற்றுப் பகுதிகளிலிருந்து வந்திருந்த அந்த அரக்கர்படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டது; அப்படையோடு இராவணனின் மூலசேனையும் இணைந்துசென்றது.

அப் படைப்பெருக்கத்தைக் கண்டு வானரக் கூட்டம் தொடைநடுங்கி அஞ்சியோடவே, அவர்களின் அச்சத்தைப் போக்கி அடுகளத்துக்கு அழைத்துவந்தனர் அங்கதன், அனுமன் போன்ற வானர வீரர்கள். களத்தை அடைத்துநின்ற அரக்கர்படையைத் தனியொருவனாய் எதிர்த்த இராமன், பெரும்பாலானவர்களைக் கொன்று குவித்தான்; அரக்கரின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதிவெள்ளம் கடலென இலங்கைக்குள் பாய்ந்ததுகண்டு அரக்கியர் அஞ்சியோடினர்.

தன்பொருட்டுப் பொருதோர் அனைவரும் பொன்னுலகு சேர்ந்துவிட, பாரிலும் விசும்பிலும் நீரிலும் நெருப்பிலும் செல்லும் பேராற்றலுடைய தன் தேரிலேறிய இராவணன், “நறுமணமிகு அழகிய கூந்தலையுடைய சீதை தன் மலர்க்கையால் வயிற்றிலடித்துக்கொண்டு துயரத்தில் மூழ்குதல்; அவ்வாறு நடக்காதெனின் மயன்மகள் மண்டோதரி அச்செயல்களைச் செய்தல்; இந்த இரண்டில் ஒன்றை இன்று போரில் நடைபெறச் செய்வேன்” என்று சூளுரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.

மன்றல்அம் குழல்சனகி தன்மலர்க் கையான் வயிறு
கொன்று அலந்தலைக் கொடு நெடுந்துயரிடைக் குளித்தல்
அன்றுஇது என்றிடின் மயன்மகள் அத்தொழில் உறுதல்
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான்.
(கம்ப: இராவணன் தேர்ஏறு படலம் –  9667)

ஒன்று, இராவணனாகிய தான் உயிரோடு இருக்கவேண்டும் அல்லது இராமன் உயிரோடிருக்க வேண்டும்; அந்த இரண்டில் ஒன்று இன்றைய போரில் முடிவாகிவிட வேண்டும் என்பதே இராவணன் சொன்னதன் உட்பொருள். போரின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை இஃது உணர்த்துகின்றது.

இராவணன் போருக்கு வருகின்றான் என்பதை வீடணன் உரைக்க, விரைவாய்ப் போருக்கெழுந்தான் இராமன். பெருவீரர்களான இராமனுக்கும் இராவணனுக்குமிடையே எழுந்தது கடும்போர். இராவணன் அம்புகளை மாரியாய் விட, அவ் அம்புகளைத் தன் கணைகளால் விலக்கினான் இராமன். தன் தேரொடு விண்ணிலேறினான் இராவணன்; அதுகண்டு, இந்திரன் தந்த தேரிலேறிப் போர்புரிந்துகொண்டிருந்த, இராமனும் விண்மிசைத் தன் தேரைச் செலுத்தினான். விண்ணில் தொடர்ந்தது வெம்போர். இருவரும் ஒருவர்மீது ஒருவர் தெய்வக் கணைகளை மாறி மாறிச் செலுத்தித் தம் வலிமையை வெளிப்படுத்தினர். இராவணன் சூலப்படையை விடுத்தான்; அதனை இராமன் தன் உங்காரத்தால் (’ஹூம்’ எனும் ஒலியெழுப்பி) பொடிப்பொடியாக்கியது கண்டு வியந்த இராவணன்,

”என் மிகச்சிறந்த வரபலத்தையெல்லாம் அழிக்கிறான்; இவன் சிவனோ? அல்லன்! திருமாலோ? அவனும் அல்லன்! தவம்செய்து ஆற்றல் பெற்றவனோ என்றால் இத்தகு பேராற்றலைத் தவத்தால் முடிக்கும் தகுதியுடையவன் ஒருவனும் இல்லை; அப்படியாயின் வேதங்களுக்கெல்லாம் மூலகாரணமான ஆதிப் பரம்பொருள் இவன்தானோ?” என்று தனக்குள் சொல்லி பிரமித்தான்.

மும்மூர்த்திகளும் திக்குவிசயம் செய்தபோது இராவணனிடம் தோற்றவர்கள் ஆதலின் அவர்களை விலக்கினான்; தானே மிகப்பெரும் தவங்களைச் செய்து  வரங்களைப்   பெற்றவன் ஆதலின் தன் வரங்களை அழிப்பவன் தன்னினும் மிகப்பெரிய தவம் செய்யவேண்டும்; அப்படி ஒருவன்  இருக்க இயலாது என்று இராவணன் ஈண்டு எண்ணுவது அவனுடைய தற்செருக்கால் வந்ததாகும்.

சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்துமுடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ்வேத முதல் காரணன் என்றான்.
(கம்ப: இராவணன் வதைப் படலம் – 9837)

”யாராயினும் சரி…இனிப் போரைக் கைவிடுவதில்லை” எனும் உறுதியோடு போரைத் தொடர்ந்தான் இராவணன். அப்போது இராவணனின் சிரத்தைப் பிறைமுகச் சரத்தால் கொய்தான் இராமன். ஒரு தலை அற்றுவீழ மீண்டும் முளைத்தது மற்றொரு தலை அவனுக்கு. புதிதாய் இராவணனுக்குத் தலைகள் முளைக்க முளைக்க அவற்றை அறுத்துத் தள்ளினான் இராமன். அதனைத் தொடர்ந்து, இராவணனின் உடலைத் தன் அம்புகளால் மூடினான். தன்னுடலெங்கும் துளைத்த இராமனின் அம்புகளால் சோர்ந்து செயலற்றுப் போனான் இராவணன். அவன் செயலற்ற நிலைகண்ட இராமன் அவன்மீது கணைகளைத் தொடுப்பதை நிறுத்தினான். அப்போது இராமனின் தேர்ப்பாகன் ”இதுதான் இராவணனைக் கொல்ல ஏற்ற சமயம்; அம்புகளைத் தொடர்ந்து செலுத்துக!” என்று கூறிய யோசனையை இராமன் ஏற்கவில்லை; ”நினைவிழந்து கிடப்பவனைத் தாக்குதல் போர்நெறியினின்று பிறழ்ந்த செயலாகும்” என்றுகூறி அதனைச் செய்ய மறுத்துவிட்டான்.

இராவணன் தெளிந்து எழுந்தபின் அவனுக்கும் இராமனுக்கும் மீண்டும் போர் தொடர்ந்தது. இராவணன் வில்லையுடைத்த இராமன், ”இவனை முடிக்கும் வழி யாது?” எனச் சிந்தித்து, அயன்படையை (பிரமாத்திரத்தை) எடுத்து இராவணனின் மார்பைக் குறிவைத்து விடுத்தான்.

இராகவன் எய்த தூய்மையான அந்த பிரமாத்திரம், இராவணனின் மூன்றுகோடி வாணாளையும், முயன்று பெற்றிருந்த பெருந்தவப் பயனையும், தேவர்களுள் ஒருவனான நான்முகன் முற்காலத்தில் ”எத்தேவராலும் நீ வெல்லப்பட மாட்டாய்” எனக் கொடுத்த வரத்தையும், மற்றுமுள்ள திசைகளையும், உலகங்கள் அனைத்தையும், போர்வெற்றிகளை ஈட்டித்தந்த இராவணனின் தோளாற்றலையும் உண்டுவிட்டு அவன் மார்பில் நுழைந்து உடலெங்கும் ஓடி உயிரைத் தேடிப் பருகிவிட்டு வெளியே போயிற்று.  

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும்
 முதல்வன் முன்நாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய்
எனக்கொடுத்த வரமும் ஏனைத்
 
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று மார்பில்
புக்கோடி உயிர்பருகிக் புறம்போயிற்று
இராகவன்தன் புனித வாளி.
(கம்ப: இராவணன் வதைப் படலம் – 9899)

உடலை விட்டு உயிர் நீங்கியதால் இராவணனின் மனத்தில் நீங்காதிருந்த சினம் அடங்கியது; அடங்காமல் முறையற்ற வழிகளில் திரிந்துகொண்டிருந்த மனம் அடங்கியது; பகைவுணர்வு அடங்கியது; சானகிமீது கொண்டிருந்த மையல் அடங்கியது; இவ்வாறு தீயன அனைத்தும் அடங்கியதால் அவன் முகங்கள் முன்பைவிட மும்மடங்கு பொலிந்தன என்கிறார் கவியின் வேந்தராகிய கம்பர்.

இராமனின் புனித வாளி ஏற்றிய ஒளியால் இராவணனின் அகம் பொலிவுற்றது; அஃது அவனுக்கு முகத்திலும் மும்மடங்கு பொலிவைத் தந்தது.

கீழே விழுந்துகிடந்த இராவணனின் உடலைப் பார்க்கின்றான் இராமன். அவன் முதுகில் திசை யானைகளின் கொம்புகளால் ஏற்பட்ட சிவந்த தழும்புகள் தெரிகின்றன. அதுகண்டவன், ”நான் பெருவீரன் இராவணனை வென்றேன் என்று பெருமிதம் கொள்ளமுடியாத வகையில் இவன் முதுகில் ஏற்கனவே புறப்புண்பட்ட தழும்புகள் உள்ளனவே! கார்த்தவீர்யன் எனும் மானுடனிடத்தில் இராவணன் ஏற்கனவே தோற்றவன் என்ற சொல்லுண்டு; இவன் தழும்புகள் அதனை மெய்ப்பிக்கின்றன” என்றான் அருகில் நின்றிருந்த வீடணனிடம்.

தன் அண்ணனின் வீரத்தை இராமன் இழித்துரைத்தது கேட்ட வீடணன் அதனைப் பொறாது கண்களில் நீரோடு, ”ஐய! கார்த்தவீர்யனும் வாலியும் பெற்ற வெற்றிகள், தேவர்கள் இராவணனுக்கு இட்ட சாபங்களால் விளைந்தவை; தையல் சீதையின்மேல் கொண்ட மையலும், உன் சீற்றமும் அல்லால் அவனை வெல்லவல்ல வீரர் இவ்வுலகில் யாருளர்?

உலகத்தையே வென்றுவிட்டபின் போரிட யாருமில்லாத காரணத்தால் எட்டுத் திக்குகளின் காவலாய் நின்ற குன்றனைய யானைகளின் நீண்ட கொம்புகளைத் தன் மார்பில் அழுத்திக்கொண்டான் இராவணன்; அவை முதுகின் வெளிப்புறமும் அழுந்தியதால் ஏற்பட்ட புண்களே இவை; பகைவர் ஆயுதங்களால் ஏற்பட்ட புறப்புண்கள் அல்ல!” என்று தமையன் இராவணனின் இணையில்லா வீரத்தை வீடணன் இராமனிடம் விளம்பவே, தன் வெற்றியில் மனநிறைவு பெற்ற இராமன், இராவணனுக்கு இறுதிக் கடன்களை ஆற்றும் பணியை வீடணனிடம் ஒப்படைத்துவிட்டு, இராவணனை வீழ்த்தியமைக்காகத் தன்னை வாழ்த்தவந்தவர்களைக் காணச் சென்றான்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *