அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும். . . . . (1)
சக்தி சக்திதாசன்
ஆன்மீகம், ஆன்மீகம் என்று பேசியிருக்கிறோம், பேசக் கேட்டிருக்கிறோம்.
அது என்ன அறிவியல் ஆன்மீகம் எனும் கேள்வி நெஞ்சில் எழுகிறது.
எமது முன்னோர்கள் சொன்னார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு ஒரு விடயத்தை ஆன்மீகத்தின் பெயரால்.பின்பற்றுவதை விட்டு அதற்கான காரணத்தை ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்க முற்படும்போது அது எவ்வாறு இருக்கும் என்பதை எனக்கு வரையறுக்கப்பட்ட அறிவின் எல்லைக்குள் பார்ப்பதுவே நோக்கமாகிறது.
அதுசரி இங்கே கவியரசர் கண்ணதாசன் எவ்வாறு இணைகிறார் ?
எனது எழுத்துகளுக்கு மானசீகக்குருவாக நான் வரித்துக் கொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
நாத்திகம் எனும் ஆற்றில் அடியுண்டு புரட்டி எடுக்கப்பட்டு புடம் போட்டு ஆத்திகக் கரையில் ஒரு கரைதேர்ந்த ஆன்மீகவாதியாக உருப்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்.
அவர் தனது உள்ளக் கருத்துகளை உள்ளத்தினுள் ஏற்றுவதற்காய் பல நூல்களைப் படித்தார்.
அனுபவங்களில் அடைந்தவைகளை காலம் எனும் ஆசான் தனக்குப் புகட்டிய பாடங்கள் என எடுத்துக் கொண்டார்.
வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு உணர்வுக்கும் அதனைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் பாடல், கவிதை வரிகளாக்கினார்.
புராணப்படங்களில் மட்டுமல்லாது சமூகப் படங்களில் வரும் பாடல் வரிகளுக்குள் அவர் புதைத்து வைத்த ஆன்மீக விடயங்கள் பலவாகும்.
இவற்றில் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, நான் அறிந்த, கேட்டவைகளின் அடிப்படையில் எனது கோணைப் பார்வையைப் பதிவு செய்வதே இக்கட்டுரைகளின் நோக்கமாகிறது.
கவியரசரின் நெஞ்சத்திலே ஓடியவைகளல்ல எனது பார்வை. அவரது வரிகளின் தாக்கம் ஒரு பாமரனின் பார்வையில் எத்தகைய ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுவே இங்கே பதியப்படுகிறது.
ஆன்மீகம் என்பது ஆன்மாவின் ராகமாகிறது. இது மதங்களைக் கடந்தது.
இறைவனை எமக்குள்ளே காண முற்படும்போது அங்கே அது மதம் எனும் எல்லைகளைக் கடந்து விடுகிறது.
ஆனால் ஆன்மீகத்தை நோக்கிய எமது பயணத்திற்கு பக்தி மார்க்கம் பாதையாகிறது.
நீச்சல் பழகும் போது மிதக்கும் கட்டைகளைக் கையில் பிடித்து நீந்தப் பழகுகிறோம்.
நன்றாக நீச்சல் அடிக்கத் தொடங்கியதும் அம்மிதக்கும் கட்டைகளின்றி நீந்தி மகிழ்கிறோம்.
நீச்சலில் கரை கண்டதும் ஆழத்திற்கு மூழ்கி மென்மேலும் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறோம்.
அது போலத்தான் ஆன்மீகக் கடலில் நீச்சலடிக்க எமக்குப் பக்தி மார்க்கம் எனும் மிதக்கும் கட்டைகள் தேவைப்படுகின்றன.
ஆன்மீகம் முற்றாகக் கைவந்ததும் ஆன்மாவின் ராகத்தோடு இணைந்த பரவசத்தில் மூழ்குகிறோம்.
இக்கட்டுரைகளை ஒரு தொடராக இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிட எண்ணுகிறேன்.
எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஆதரவளித்து, ஊக்கமளிக்கும் வல்லவர்கள் பலர் நிறைந்த இந்த வல்லமை தளமே இதற்கான அடித்தளமாகிறது.
மீண்டும் அடுத்த தொடரில்…