இராஜராஜேஸ்வரி

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே 

சுகந்திம் புஷ்டிவர்தனம் 

ஊர்வாருகமிவ பந்தனாத் 

மிருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத் 

ஓம் ஸ்வ புவ பூர்…

ஓம் ஸா ஜும் ஹ்ரோம் ஓம்.... 

மரண பயம் நீங்கி வாழ மிருத்யுஞ்சய மந்திரம்..

வள்ளுவர் எல்லாவற்றையும் சிந்தித்தவர். நெய்யும் தறியில் விழும் ஒவ்வொரு அடிக்கும் உதிருமாம் ஒரு சொல்: 

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து உலகு.. 

 உலகின் அழகே இந்த பிறப்பு-இறப்பு என்ற நிகழ்வில்தான் இருக்கிறது. உலகில் பிறக்கும் ஒன்று அழிவதுதான் விதி. அவ்விதிதான் உலகைப் பெருமை அடையச் செய்கிறது.  

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டு உடையார்

தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே

என்பார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்… 

‘முடிசார்ந்த மன்னரும், பிடி சாம்பலவார்’ என்பது நியதி. எனினும், பூமிக்கு வந்த பின், மரணத்தைப் பற்றி நினைப்பதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என்பதும், அப்படி வாழும்போது, பல வசதி வாய்ப்புகளை அனுபவிக்க வேண்டும் என்பதுமே பலருடைய ஆசை. 

இந்த இரண்டையும் நிறைவேற்றி வைக்கிறார், கோவை மாவட்டம் கோயில்பாளையம் காலகாலேஸ்வரர். தீர்க்காயுள் தரும் தலம் என்பதால் இதை “கொங்கு நாட்டுத் திருக்கடையூர்’ என்கின்றனர். 

தல வரலாறு: சிவபக்தனும், சிறுவனுமான மார்க்கண்டேயனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. அவனது தந்தை வருந்தினார். தந்தையின் துன்பத்தைத் தாளாத மார்க்கண்டேயன் ஆயுள்நீடிப்பு வேண்டி சிவபெருமானை வணங்கி வந்தான். ஆயுள் முடியும் நாளில் எமதர்மன் அவனது உயிரை எடுக்க வரவே, மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்குள்ள சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான். 

இருப்பினும் எமன் பாசக்கயிற்றை வீசவே, கோபமடைந்த சிவன், “என்னைச் சரணடைந்தவர் ஆயுள் நீட்டிப்பு பெறுவர்,” எனக் கூறி, எமனை எட்டி உதைத்தார். இதனால், எமன் சாதாரண மனிதனுக்கு ஒப்பாகிப் பூலோகத்தை அடைந்தான். 

மீண்டும் எமபதவி வேண்டி, கவுசிகபுரி என்னும் தலம் சென்று, அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவனாக எண்ணி வழிபட கல், விபூதி, வில்வம், ருத்ராட்சம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கே கிடந்த குச்சியை எடுத்து ஓரிடத்தில் குத்தினான். உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது. மணலுடன் நுரையைச் சேர்த்து லிங்கம் வடித்தான்.  

அருகில் விஸ்வாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். எமனைக் கண்ட விஸ்வாமித்திரர், “இந்த சிவபூஜையால் உன்னுடைய சாபம் நீங்கி விட்டது. நீ மீண்டும் எமபதவி பெற்றாய்,” என்றார். எமதர்மன் விட்டுச் சென்ற சிவலிங்கத்தை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் அங்குக் கோயில் எழுப்பப்பட்டது. 

பெரிய தட்சிணாமூர்த்தி: இக்கோயில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு. 

மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.

ஆயுஷ்யஹோமம்: இங்கு ஆயுள்விருத்தி ஹோமம், 60 வயது பூர்த்தியானவுடன் சஷ்டியப்தபூர்த்தி, 70 பூர்த்தியானவுடன் பீமரதசாந்தி, 80 பூர்த்தியானவுடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானவுடன் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதைச் செய்வது சிறப்பு. 

தேன், சந்தனப் பிரசாதம்: நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேகத் தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனைச் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத்தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது.

பச்சை நந்தி: இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதால் இது “சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் காலப்பொய்கை (எமதீர்த்தம்) ஆகும்.

திறக்கும் நேரம்: காலை 6- பகல் 12.30 மணி , மாலை 4- இரவு 7.30 மணி.

இருப்பிடம்: கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் ரோட்டில் 20 கி.மீ., தூரம். பஸ் ஸ்டாண்ட் பின்புற ரோட்டில் கோயில் உள்ளது.

போன்: 0422- 265 4546

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *