‘அச்சமின்றி’ படத்தின் இரு வரிக் கதை
ஷாஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஐ.பாதுஷா தயாரிக்கும் புதிய படம், ‘அச்சமின்றி’. இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ராஜேஷ் கே.வாசு. இவர் தமிழ், மலையாளப் படங்களில் துணை, இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்கும் முதல் படம், இது.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் வினாயக் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாகத் திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அண்மையில் வெளியான ‘தமிழ் படம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இன்னொரு நாயகியாக பெங்களூர் அழகி நடிக்கிறார். அவருக்கான தேர்வு நடந்து வருகிறது.
புதியவர் சஜிராம் இசையமைக்கிறார். பி.கே.ராஜா வசனம் எழுத, மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - வினோத், தயாரிப்பு மேற்பார்வை – இராமகிருஷ்ணன், குட்டிகிருஷ்ணன், செந்தாமரை.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் 2010 நவம்பர் பத்தாம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா, அக். 17 அன்று சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது. விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் சசிமோகன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் ரமேஷ்கண்ணா, முத்துக்காளை, சாம்ஸ், இசையமைப்பாளர் வீ.தஷி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, இந்தப் படத்தில் நடிக்கும் அறிமுக நாயகன் வினாயக், நாயகி திஷா பாண்டே, இயக்குநர் ராஜேஷ் கே.வாசு, தயாரிப்பாளர், எம்.ஐ.பாதுஷா ஆகியோரை வாழ்த்தினார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் ராஜேஷ் கே.வாசு கூறுகையில், “அதிகம் படித்து அதிகாரிகளாக வலம் வரும் சிலர், நாகரீகம் என்கிற பெயரில் நம் கலாச்சாரத்தை மறந்து, கடமை தவறுவதால் அவர்களும் பாதிப்படைவதோடு, அவர்களின் நல்ல குடும்பத்தின் எதிர்காலம் வழி தவறிப் போகிறது. இப்படி வாழ்க்கையில் நடக்கும் அழுத்தமுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதில் சுவராஸ்யமான திரைக்கதையை உருவாக்கி பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத ஒரு படத்தை உருவாக்குகிறேன். இந்தப் படத்தின் கதையை மக்களிடம் இருந்து எடுத்திருக்கிறேன். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் போல, பார்த்த காட்சிகள் போல, படித்த செய்திகள் போல ஒவ்வொரு காட்சியும் அமைந்திருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தப் போகிறேன். நல்ல படங்களுக்கு வரவேற்பு தரும் தமிழ் ரசிகர்கள், இந்தப் படத்தையும் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது…” என்றார்
விழாவுக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், மேலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.