மயிலை என்கிற மெட்ராஸ் என்கிற சென்னைப்பட்டினம் – வயது – 384
பாஸ்கர்
அறுபதுகளில் ஆரம்பித்து சென்னையை ரசித்து வருகிறேன். முதலில் எனக்கு அது மயிலாப்பூர். அப்புறம் அது மெட்ராஸ். இன்று எனக்கு சென்னை. அந்த பால்ய வயதில் எனக்கு ஊர் பற்றிய ஈர்ப்பு ஏதுமில்லை. சுற்றி வந்த தெருக்களும், குளங்களும், பூங்காக்களும், சினிமா கொட்டகையும், கொஞ்சம் பள்ளிக்கூடங்களும் தான் எனக்கு இந்த மண். ஒரு அரைக்கை வெள்ளை சட்டை, இடுப்பில் எப்போதுமே நிற்காத அரை டிராயர் (வீட்டில் நிஜார்) ஒரு சின்னப்பை தாண்டி உலகம் வேறில்லை.
கொஞ்ச நாள் அம்புலிமாமா, பிறகு வளர்ந்த பின் முத்து காமிக்ஸ் என வாசிப்பு தொடர மெல்ல கல்கண்டுக்கு வந்தேன். படித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை ஊட்டியது எது என தெரியவில்லை. ஒரு குக்கிரராமத்தில் பிறந்து இருந்தால் இவை எல்லாவற்றையும் நான் இழந்து இருக்கலாம். பெரிய குண்டுமணி பங்களா என அழைக்கப்படும் அந்த ஆபிரகாம் தெரு குடியிருப்பு என்னை சீராட்டி கொண்டாடியது. நான் அவர்களின் செல்லம். என்னை அய்யா என அழைத்த நேசமான மக்கள் இன்று யாரும் இல்லை. ப்ரைனோ பேபி பைல்வான் பாஸ்கர் என கொஞ்சிய தந்தை பற்றிய நினைவு இன்றும் பசுமை. அய்யா பையா என என்னை கொஞ்சிய தாயும் மனதில் நீங்காமல் இருக்கிறார். விவரம் புரியாத வயதில் கள்ளமும் கபடும் நிச்சயம் இருக்க முடியாது என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி.
அடிப்படையில் எங்கள் ஏழ்மை குடும்பம் எனக்கு பலம் தான். அது இல்லாமல் இருப்பின் என்னை நிறைய பேர் அண்டியிருக்காமல் இருக்க கூடும். எந்த பரிவுக்கும், பாசத்திற்கும் பின் ஒரு பரிதாபம் இருக்கவே செய்கிறது. இதை எல்லாம் நான் கடக்கவில்லை. அது என்னை கடந்தது. எத்தனையோ இரவுகள் பட்டினியுடன் கடந்து இருக்கிறேன். ஆனால் அன்புக்கூட்டத்தில் பசியின் வலி தெரியவில்லை. அண்டை வீட்டார் எங்கள் பசியை போக்க முயன்றார்கள். சிலர் துணி மணி கொடுத்தார்கள். கோவில் வாசலில் இலவச உணவுக்கு வரிசையில் நின்ற போது அவமானம் தெரியவில்லை. ஆனால் ஏன் பிறயோர் நிற்கவில்லை என கேள்வி மட்டும் எழுந்தது.
ஆனால் வளர வளர பிம்பம் பெரிதாகிறது. பள்ளியில் மதிய உணவு யாருக்கு வேண்டும் என கேள்வி எழுந்த போது யாரும் எழுந்து நிற்கவில்லை. நான் மட்டும் எழுந்தேன். அந்த கூச்சம் பல நாள் என்னுள் இருந்தது. இதுவும் சென்னையின் கொடை என இப்போது சமாதானம் செய்து கொண்டாலும் அந்த வலியை மறக்க முடியவில்லை .
எப்படியோ என்னுள் எழுந்த மொழி ஆசை தமிழ் தாண்டி ஆங்கிலத்திற்கும் சென்றது. படிப்பின் மீது ஈர்ப்பு இல்லை. பத்தாம் வகுப்பு பெயில். அப்பா பெல்ட்டால் அடித்தார். பிறகு அவரே மருந்தும் இட்டார். எந்த இன்னலிலும் யாரும் இந்த மயிலாப்பூரை விட்டு நகரவில்லை. அதற்கு நாதியும் இல்லை. எங்களுக்கு மெட்ராஸ் என்ற ஒரூ இடம் தனியாக இல்லை. இந்த இடம் தான் உலகம் என்றான பின் பெயரில் ஒன்றுமில்லை. இதனை இன்று வரை கெட்டியாக பிடித்து கொண்டு இருக்கிறேன். எங்கு சென்றாலும் இரவுப்பொழுது இந்த மண் தான். இது ஒரு கொள்ளும் புத்தி.
சென்னையும் நானும் ஒன்றாகவே வளர்ந்தோம். அது இளமையாக இன்றும் இருக்கிறது. மூப்பு என்னை தழுவுகிறது. பார்க்கும் ஒவ்வொரு இடத்திற்கு பின்னும் ஒரு சரித்திரம் இருப்பது போல அவை எல்லாவற்றிலும் எனக்கு தனி நினைவுகள். என்னையும் தாங்கிய இந்த மண்ணையும் மக்களையும் தாண்டி எனக்கு வேறு உலகம் இல்லை. பிடித்துக்கொண்டே இருக்கும்போது நழுவும் காலம் போல மெல்ல பிடி தளருகிறது. நேசமும் வாஞ்சையும் இந்த மயிலை மீது தான். இது எனக்கு போதி மரம் போல ஒவ்வொரு நாளும் சென்னை புதிதாக பிறந்து கொண்டு இருக்கிறது.
பெரும் வியப்பில் அதனை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இந்த உணர்வுக்கு எப்படி பெயரிட்டாலும் அதை அடைக்க முடியாது. ஒரு ஊரை, இடத்தை கவர்ந்து இருந்து மனசுக்குள் அதனை போஷிக்க முடியுமா? முடியும் என்பது எனது அனுபவம். இதற்கு காரணம் மயிலை என்கிற சென்னை. இந்த வானம் என்றும் எனக்கு கானம். இந்த தாகம் தீராகாதல். வாழ்க மயிலை, வாழ்க சென்னை.