குறளின் கதிர்களாய்…(465)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(465)
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு.
-திருக்குறள் – 943 (மருந்து)
புதுக் கவிதையில்…
உண்ட உணவு
செரிமானம் ஆகியது
தெரிந்து
அடுத்து உண்பதை
உடலின் தேவை
அளவறிந்து உண்ணவேண்டும்,
அதுவே
இந்த உடம்பைப் பெற்றவன்
அதனை
நெடுங்காலம் கொண்டுசெல்லும்
நல்வழியாகும்…!
குறும்பாவில்…
உண்டது செரித்ததை யறிந்து
உண்பதை உடல் தேவையறிந்து உண்பதுடலை
நெடுநாள் கொண்டுசெல்லும் வழியாகும்…!
மரபுக் கவிதையில்…
உண்ட உணவு செரித்ததையே
உணர்ந்தே யறிந்து அதன்பின்னே
உண்ணத் தொடங்கு முன்னாலே
உடலின் தேவை தனையறிந்தே
உண்ண லென்ப துயர்வாமே,
உடலை நெடுநாள் கொண்டுசெல்லக்
கண்ணும் கருத்தாய்ப் பேணிடவே
கண்ட வழியே இதுதானே…!
லிமரைக்கூ…
உணவை யுண்ணு முன்னாலே
உண்டது செரித்ததையும் உடல்தேவையும் அறிந்துண்டால்,
உடல்நிலைக்கும் நெடுநாள் தன்னாலே…!
கிராமிய பாணியில்…
மருந்து மருந்து
ஒணவே மருந்து,
ஒடலு வலுவாயிருக்க
ஒணவே மருந்து..
மொதலுல தின்ன ஒணவு
முழுசா செமிச்சாச்சாங்கிற
வௌரந் தெரிஞ்சி
ஒடல் தேவயயும் அறிஞ்சி
அதுக்கேத்தாப்பில
ஒணவு உண்டுவந்தா,
அதுவே
இந்த ஒடம்பு
நெடுநாள் தெடமா
நெலச்சிருக்க வழியாவும்..
தெரிஞ்சிக்கோ,
மருந்து மருந்து
ஒணவே மருந்து,
ஒடலு வலுவாயிருக்க
ஒணவே மருந்து…!