குறளின் கதிர்களாய்…(475)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(475)
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.
–திருக்குறள் –17(வான் சிறப்பு)
புதுக் கவிதையில்…
மேகம்
கடலிலிருந்து
நீரைப் பெற்று
மழையாகப் பெய்யும்
தனது இயல்பிலிருந்து
மாறி
மழை பெய்யாது போனால்,
நீண்ட கடல் கூட
நீரின்றி வற்றிப்போகும்…!
குறும்பாவில்…
கடலில் நீரெடுத்து மேகம்
மழையாய்ப் பெய்யும் இயல்பிலிருந்து மாறிப்
பெய்யாவிடில் நெடுங்கடலும் வற்றிடுமே…!
மரபுக் கவிதையில்…
கடலி லிருந்து நீரெடுத்துக்
கனத்த மழையாய்த் தருமேகம்
நடப்பு நிலையில் மாறுபட்டு
நல்ல மழையே பெய்யாமல்
இடறும் வேளை வந்திட்டால்,
இயல்பில் நீண்ட பெருங்கடலும்
தடய மேது மில்லாமல்
தண்ணீ ரின்றி வற்றிடுமே…!
லிமரைக்கூ…
கடலில் நீரை எடுத்து
மழைதரும் மேகம் பொழியாவிடில் நெடுங்கடலும்
நீரின்றி வற்றிவிடும் அடுத்து…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
மழ வேணும்,
ஒலகம் நெலைக்க
நல்ல மழவேணும்..
கடலுல இருந்து
தண்ணிய உறுஞ்சி அத
மழயாப் பெய்யிற
மேகமும்
கொணம் மாறி
மழ பெய்யாமப் போச்சிண்ணா,
நீளமான பெரிய கடலும்
தண்ணிக்கு எந்த
வழியுமில்லாம
வத்திப் போவுமே..
அதால
வேணும் வேணும்
மழ வேணும்,
ஒலகம் நெலைக்க
நல்ல மழவேணும்…!