செய்திகள்

கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது தில்லி உயர்நீதி மன்றம் – செய்திகள்

28 நவம்பர் 2011. புது தில்லி.  2G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட ஐந்து பேருக்கு இன்று தில்லி உயர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி திரு. வி. கே. ஷாலி கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக தீர்ப்பளித்தார்.

”ஜாமீன் பெறும் இவர்களுக்கு, உச்சநீதி மன்றம் வழக்கமாக ஜாமீனில் விடுவிப்பவர்களுக்கு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்” என்று திரு. வி. கே. ஷாலி கூறினார்.  அதாவது ஜாமீனில் விடுதலையான தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலுவலர்களுக்கு உச்சநீதி மன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளும் இவர்களுக்கும் பொருந்தும்.

இன்றைய இந்த தீர்ப்பின்படி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி திரு. சரத் குமார், சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த திரு. கரீம் மொரானி, குசேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபுள்ஸ் ன் இயக்குநர்கள் திரு ஆஸிஃப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கபட்டது.

அலைக்கற்றை வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் திரு. சித்தார்த்த பெஹுராவும் ஜாமீனுக்காக மனுச் செய்திருந்தார்.  ஆனால் இவருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்த்தது.  ஆகவே இவரின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி.  மேலும் பெஹுரா சிபிஐ க்கு திருப்தி ஆகும் வகையில் முழுமையான வாக்கு மூலம் தந்துவிட்டு மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்குமாறு பெஹுராவின் வழக்கறிஞரிடம் நீதிபதி ஷாலி தெரிவித்தார்.

இதற்கு முன் கனிமொழியின் வழக்கறிஞர்கள் ஜாமீன் பெற பலமுறை விண்ணப்பம் செய்தும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.  கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை தி.மு.க. வரவேற்றுள்ளது.

கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள், இன்று மாலை 5:15 வரை ஜாமீனில் வெளிவருவதற்கான ஆவணங்களை திகார் சிறையில் சமர்ப்பிக்காததால், திகாரில் இருந்து கனிமொழியை நாளை விடுவிக்க உத்தரவிட்டார் நீதிபதி திரு. ஷாலி.  நாளை காலை கனிமொழி திகாரில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க