பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல் துறை – செய்திகள்

0

26 நவம்பர் 2011.  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி. மண்டபம் கிராமம், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காசி என்பவரை திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்தவர்கள் நவம்பர் 22 அன்று பிடித்துச் சென்றுள்ளனர்.  காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காசியை விடுவிக்குமாறு அவருடைய தாயார் வள்ளி காவல் நிலையத்தில் வேண்டியுள்ளார்.  அவரிடம், மற்ற நெருங்கிய உறவினர்களை அழைத்து வந்தால் விசாரணை செய்து விட்டு அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு வள்ளி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் காவல்துறை வேனை நிறுத்தி வள்ளியை வண்டியில் ஏற்றியுள்ளனர்.  வண்டியில் காசியின் மனைவி லட்சுமி (20 வயது), காசியின் தம்பி மனைவி கார்த்திகா (வயது 18), காசியின் தங்கை ராதிகா (17 வயது) மற்றொரு உறவினர் மாதேஸ்வரி (20 வயது) ஆகியோர் வண்டியினுள் இருந்துள்ளனர்.  22 நவம்பர் அன்று இரவு முழுவதும் தைலமரக்காட்டில் வைத்து வள்ளியின் கண் எதிரே அவருடைய மகள், மருமகள்களை நான்கு காவலர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

விடியற்காலையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விரட்டியுள்ளனர்.  மீண்டும் 23 நவம்பர் அன்று காவல்துறை வாகனம் தெருவுக்குள் வருவதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஓடியுள்ளனர்.  இதைத் தொடர்ந்து மற்றவர்களின் உதவியுடன் 26 நவம்பர் 2011 அன்று விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் திரு பெ. சண்முகம் கூறுகையில் : ”காவல்துறையின் கொடூரமான இச்செயலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்த பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.  காசி உட்பட காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன், அந்தப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்திக் கோருகிறோம்.

காவல்துறையினரின் இந்த அராஜகத்திற்கு எதிராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் வலுவான கண்டனப் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *