சர்வதேச விருது வென்ற சேவாலயா மாணவர்கள் – செய்திகள்

0

சென்னை, அடையாறு பகுதியின் காந்தி நகர் பகுதியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஒரு சேவை மையம் சேவாலயா.  இந்த அமைப்பு பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகின்றது.  இதன் ஒரு பகுதியாக மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகின்றது.

இந்த மகாகவி பாரதியார் பள்ளியின் மாணவர்கள் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஒரு சர்வதேச விருதினை வென்றுள்ளனர்.

அஹமதாபாத் -ல் உள்ள ரிவர் சைட் பள்ளி சர்வதேச அளவில் நடத்திய போட்டி “டிசைன் ஃபார் சேன்ஜ்”(Design for Change) அதாவது மாற்றத்திற்கான செயல் திட்டம்.  இந்தப் போட்டியில் முப்பது நாடுகளைச் சார்ந்த 25 மில்லியன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இந்தியாவின் 29 மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.  அதிக அளவில் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றதால், போட்டியின் முதல் பரிசு இருபது பள்ளிகளுக்கு அளிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.  மகாகவி பாரதியார் பள்ளிக்கான விருதுப் பரிசினை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சசி தரூர் அவர்களிடமிருந்து மாணவர்கள் பெற்றனர்.  27 நவம்பர் 2011 அன்று இந்த பரிசு வழங்கப்பட்டது.

”மாற்றத்திற்கான செயல்திட்டம்” போட்டிக்காக சேவாலயாவின் மாணவர்கள் தேர்ந்தெடுத்த பணித்திட்டம் (project) தான் இயற்கை வேளாண்மை முறை.  சேவாலயாவைச் சுற்றியுள்ள ஐந்து கிராம விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர் இந்த மாணவர்கள்.  முதல் கட்டமாக, ஒரு விளைநிலத்தைத் தேர்ந்தெடுத்து அதில் இரசாயண வேதிப் பொருட்கள் அடங்கிய பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் பயன்படுத்தாமல், அப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பிற தாவரங்களையே பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லியாகப் பயன்படுத்தினர்.  இரண்டாம் கட்டமாக மாணவர்கள் விவசாயிகளை அழைத்து வந்து செயல்முறை விளக்கமும் தந்தனர்.  இது மட்டுமின்றி இயற்கை வேளாண்மை வல்லுநர்களையும் அழைத்து வந்து விவசாயிகளுடன் கலந்துரையாட வைத்துள்ளனர்.  இறுதியாக விவசாயிகளிடம் இருந்து ”இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றுவோம்” என்ற உறுதிமொழியினையும் பெற்றுள்ளனர்.

சென்ற வருடமும் இந்தப் பள்ளி மாணவர்களே, இந்த விருது மற்றும் பரிசினைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.