டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம்

புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு கெடுதல் என்பதை பெரும்பாலானோர் நன்கு அறிவர். அரசாங்கம் அதனை பல வகையிலும் தெளிவுபடுத்தியும், அதன் தீமைகளைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்துள்ளது. இருந்தும் உலகளவில் இன்றும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு கருத்தரங்கில் ஒரு அமெரிக்க விஞ்ஞாணி, உலகத்தில் பிடிக்கப்படும் சிகரெட் எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தினால் நிலாவினை தொட்டு திரும்பி விடலாம் என்றார். புகைப்பழக்கம் புகைப்பவரை மட்டும் அன்றி உடன் இருப்பவரையும் பாதிக்கும். உடன்பாட்டு புகைப்பழக்கம் ( passive smoking). உடலில் பல பாகங்களைப் பாதிக்கக் கூடியது. இருதயத்தையும் நுரையீரலையும் அந்தக் கொடிய பழக்கம் எப்படி பாதிக்கிறது என்பதைக் காண்போம்.

இருதயம் என்பது நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று. நுரையீரல், சிறுநீரகம் போன்ற மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டிரண்டாக இருக்கும் உடலில் மூளை, இருதயம், ஈரல், மற்றும் கருப்பை போன்றவைகள் , ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும். நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது தன் கடமையைச் செய்ய பிராணவாயு (Oxygen) மற்றும் குளுகோஸ்(Glucose) தேவை கையளவு இதயம் அவற்றை உடல் முழுவதும் தமனி (Arteries) எனப்படும் இரத்தநாளங்கள் மூலம் அதை அனுப்பும். இதயத்திற்கும் அது தன் கடமையைச் செய்யவும் பிராணவாயு மற்றும் குளுகோஸ் தேவை. இவை இருதயத்தில் உள்ள இரத்தநாளங்களின் வழியாக இருதயத்தின் தசையைச் சென்றடையும்.

கரோனரி தமனி (Coronary arteries) எனப்படும் இந்த இரத்தநாளங்கள் மிகவும் முக்கியமானவை. இவை கொழுப்பு படிந்து (Atherosclerosis) குறுகலாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும் அந்தத் தவிப்பே நெஞ்சுவலியாக (angina) உருவெடுக்கிறது. நீரிழிவு (Diabetes) நோய் இந்த இரத்தநாளங்களின் அடைபடும் செய்கையை மிக அதிகமாக்கும். புகைப் பிடிக்கும் பழக்கம் இருதய இரத்தநாளங்களைத் தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் (arteriosclerosis) தன்மையை மிகவும் பாதிக்கும். கொழுப்புப் படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis) பட்சத்தில் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது. குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ அஞ்சியோப்லாச்ட்டியோ (angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்யலாம். புகை பிடிப்போரின் இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் தன்மையை இழந்திருப்பதால் சிகிச்சையின் முழு பயனும் கிடைப்பதில்லை. இதனால் தான் மேலை நாடுகளில் ஏன் இந்தியாவின் சில மருத்துவமனைகளில் புகை பிடிப்பதை நிறுத்த மறுக்கும் நபர்களுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விடுவார்கள்.

புகைபிடிப்பது இருதயத்தை மட்டுமன்றி நுரையீரல்களை மிகவும் அதிகமாக பாதிக்கும், ஏனென்றால் இழுக்கும் புகை முதலில் சென்றடைவது நுரையீரல்களைத் தானே. நுரையீரல்கள் நாம் சுவாசிக்கும் மூச்சைக் கொடுத்து அதில் உள்ள பிராணவாயுவை எடுத்து நம் உடலில் உள்ள துஷ்ட வாயுவை (carbon di oxide) வெளியேற்றும் முக்கியப் பணி உடையவை. புகை பிடிப்பது நம் மூச்சுக் குழாயில் உள்ள சிறிய நுண்ணிய முடிபோன்ற அமைப்புகளின் வேலையைப் பாதிக்கும், இவை நம் மூச்சுக் குழாயில் உள்ள கபம், சளி மற்றும் கிருமிகளை வெளியேற்றும் முக்கிய வேலை செய்வன. எனவே தான் புகைபிடிப்போர் இருமி இவற்றை வெளியேற்றுவர். (Smoker’s Cough). நீண்ட நாள் புகை பிடிப்பது நுரையீரல் வாயு மாற்றும் தன்மையை (gas exchange and diffusion) பாதித்து மூச்சு முட்ட வைக்கும். நாளடைவில் பிராணவாயு இல்லாமல் இவர்களால் உயிர் வாழ முடியாது. மேலும் புகை நுரையீரல்களின் குறுகி விரியும் தன்மையை (elasticity) பாதித்து சில இடங்களில் நுரையீரல்களை அதிகமாக விரியச் செய்யும் , அதிகமாக விரிந்த நுரையீரல் பகுதி (emphysematous bulla) மற்ற பகுதிகள் விரியமுடியாத நிலையை ஏற்படுத்தி மேலும் மூச்சு முட்ட வைக்கும்.

புகை பிடிப்பது நுரையீரல் புற்றுநோய்க்கு(Lung Cancer) மிக முக்கிய காரணகர்தா, புற்றுநோயானது சிலசமயங்களில் உடனே தோன்றினாலும் பெரும்பாலானவர்களுக்கு பல வருடங்கள் கழித்தே தான் துர்செயலை காட்டும்.

புற்று நோயானது உயிர் எடுக்கும் ஒரு நோய். ஆரம்ப கட்ட நோய்களுக்கே அறுவை சிகிச்சை (curative surgery) மற்றும் கதிரியக்கம் (radiotherapy) மூலம் குணப்படுத்தும் வைப்பு உள்ளது. நோய் முற்றிய கட்டத்தில் நோயைப் பரவாமலும் நோயினால் ஏற்படும் பிற உபாதைகளைத் தடுக்கவும் (palliation) வேதிச்சிகிச்சை (Chemotherapy) மற்றும் கதிரியக்கம் (radiotherapy) உதவும்.

புகையினால் உண்டாகும் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய்கள் எவ்வளவு நாள் எவ்வளவு சிகரெட்டு புகைத்தார்கள் என்பதைப் பொருத்து அதன் விளைவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். இதனைப் பாக்கெட் வருடம் (pack years) என்று கூறுவார்கள். ஒரு பாக்கெட்டில் 20 என்ற விதம் இந்த கணக்கு செய்யபடுகிறது, ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் புகைப்பவர் ஒரு வருடம் புகைத்தால் அது 1 பாக்கெட் வருடம், அதே ஒரு நாளைக்கு 10 சிகரெட்டு புகைப்பவர் ஒரு வருடம் புகைத்தால் அது 1/2 பாக்கெட் வருடம், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் புகைப்பவர் 20 வருடம் புகைத்தால் அது 20 பாக்கெட் வருடம், பாக்கெட் வருடம் எவ்வளவு அதிகமோ அந்த அளவு புகை பழக்கத்தால் வரும் துர்விளைவுகளும் அதிகரிக்கும்.

புகை பிடிப்பது என்பது இன்று ஒரு கலாசார பண்பாகிவிட்டது, அதன் பின் விளைவுகளை அறிந்து உடனே நிறுத்தினால் உடல் நலத்திற்கும் பாதுகாப்பு , குடும்ப நலத்திற்கும் நன்மை. மிக முக்கியமாக பணவிரயம் குறையும். இந்தப் புகையினால் வந்த உடல் உபாதைகளால் துன்பப்படுவோர்களுக்கு புகை பிடிப்பதன் பாதிப்புகள் 20-30 வருடங்களுக்கு முன் தெரியாது, இன்று அதன் விளைவை அனுபவிப்போர் அன்றே யாராவது சொல்லியிருந்தார்கள் என்றால் புகை பிடித்திருக்கவே மாட்டேனே என்பார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்திற்கு அது தெரியும் மாற்றம் என்பது நம் மனதில் தான். அடுத்த முறை ஒரு சிகரெட்டை பற்றவைக்கும் போது 20 வருடங்களில் என் பெண் கல்யாணத்திற்கு நான் இருப்பேனா? பிள்ளையின் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ளமுடியுமா? என்று ஒரு விநாடி யோசித்தால் இந்தப் பழக்கம் தொலைந்து போகும்.

மீண்டும் வருவேன்…..

மருத்துவரைப் பற்றி அறிய : https://www.vallamai.com/?p=11516

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புகையாகும் வாழ்க்கை!

 1. புகை நமக்குப் பகை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
  புகை பிடிப்பதால் வரும் பாதிப்புகள் பல என ஒரு டாக்டர்
  உலக இதய தினத்தன்று பட்டியலிட்டார். அணு உலையை
  விட தீமையானது என்பதையும் பட்டியலிட்டார்.” கல்பாக்கத்திலும்
  கூடங்குளத்திலும் ஒவ்வொரு அணு உலையே இருக்கிறது.
  ஆனால் புகைப் பிடிப்பவர்களால் ஆயிரக்கணக்கான அணு
  உலைகள் நம் அருகே நிலைகொண்டிருகின்றன என்பதை
  நாம் எண்ணிப் பார்க்கும் தருணம் இது” என் நண்பர் ஒருவர்
  பல வருடங்களாகப் புகைப்பிடிப்பவர். அவருக்கு புற்று நோய்
  வரவில்லை! இதயக் கோளாறு எதுவும் வரவில்லை. ஆனால்
  நரம்பு மண்டலத்திலும் காலில் ரத்தக் குழாய் அடைப்பு போன்றவை
  வந்தன. தற்போது மூளையில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  அவர் பலகாலமாக சிறுகச் சிறுக சிகறட்டுக்குச் செலவழித்த பணத்தை விட
  அதிக பணம் மிகக் குறுகிய காலத்தில் மருத்துவத்திற்குச் செலவு செய்துள்ளார்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *