கெற்பலி – மறவன்புலவு அகதி மக்களுக்கான நீதி

0

மறவன்புலவு க.சச்சிதானந்தன்
Maravanpulavu_Sachithanantha

=======================================
இக்கட்டுரை தொடர்பான முந்தைய இடுகைகள்

=======================================

என் முதலாவது வேண்டுகோள்.

கெற்பலி மற்றும் மறவன்புலவு புதுக்குடியேற்றவாசிகளுக்குக் காணி உறுதி வழங்குவதற்காக எந்தவிதப் பணமும் ஏழைகளான அகதிகளிடம் கேட்கக் கூடாது.

காரணங்கள் பின்வருமாறு:

2010 பங்குனி முதலாக, மறவன்புலவில் 10 குடும்பங்கள் ஒவ்வொன்றும் தோராயமாக ரூ. 9,000 வரை திரு. எம். கே. சீவகதாசரிடம் கொடுத்துள்ளன. 2010 ஐப்பசி முதலாக கெற்பலியில் 14 குடும்பங்கள் ஒவ்வொன்றும் முன்பணமாக ரூ. 1000 கொடுத்துள்ளன. மற்றவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கேட்டுள்ள தொகை தோராயமாக ரூ. 9000.

சாட்சியம் – பார்க்க காணொலி.

http://www.youtube.com/watch?v=_vn3yeMPVBQ

http://www.youtube.com/watch?v=f4uurJyNOVI

2010 பங்குனி முதலாகக் கேட்டு வாங்கப்படும் இந்தத் தொகைகளுக்கு அறவழிப் போராட்டக் குழுவினர் எந்தவிதப் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. இந்தப் பணம் அறவழிப் போராட்டக் குழு வைத்திருக்கும் 12 வங்கிக் கணக்குகள் எதற்குள்ளும் செலுத்தப்படவிவ்லை.

101 குடும்பங்களுக்கும் காணிகளை அளந்து உறுதி எழுதிக் கொடுப்பதற்காக ரூ. 61,000 தொகையை 1985இலேயே இந்தக் குடும்பங்கள் அப்பொழுது தமக்கு வந்த உதவித் தொகையில் கொடுத்துள்ளன. இதற்கும் அப்பொழுதும் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. சாட்சியம் – பார்க்க காணொலி

http://www.youtube.com/watch?v=lreGUMD4Fng

101 குடும்பங்கள் யாவரும் அன்றாடம் காய்ச்சிகள். கூலித் தொழிலாளர். பரம ஏழைகள். குடிசைகளுள் வாழ்பவர். இவர்களிடம் இந்தத் தொகை பெறுவது அநீதி. வாழ்விடம் தேடி அலைந்து அலமந்து தமக்குள்ள காணியைப் பெறத் துடிப்பவர்கள்.

அறவழிப் போராட்டக் குழுவில் போதுமான நிதி வசதி உண்டு. செப்டெம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளில் இருந்து செலவுக்காக அறவழிப் போராட்டக் குழு எடுத்த தொகை சில இலட்ச ரூபாய்கள். அந்தச் சில இலட்ச ரூபாய்களில் திரு. சீவகதாசர் செயல்படும் அறைகள் மூன்றின் குளிரூட்டத் தடுப்புகளுக்கான (Air conditioning) செலவு தோராயமாக ரூ. 60,000 அல்லது அதற்கு மேல். அந்த அறைகளுள் உள்ள மூன்று கணினிகளைத் திருத்தக் கொடுத்த செலவு தோராயமாக ரூ. 40,000. திரு. சீவகதாசருக்கு மாதச் சம்பளம் ரூ. 16,000. (அறவழி ஊழியருக்கான மொத்தச் செலவு தோராயமாக ரூ. 60,000) திரு. சீவகதாசரின் நீரிழிவு நோய் மருத்துவத்துக்காக நாள்தோறும் யாழ்ப்பாணம் சென்ட்ரல் நர்சிங் மனை சென்று அன்னாரது கால் புண்ணுக்கு மருந்து கட்டிவர (கடந்த 3 மாதங்களாக) அறவழி வாகனம், அதற்கான எரிபொருள், அதை ஓட்டும் தொழிற்பயிற்சி இயக்குநரின் முழுநாள் சம்பளம் யாவுக்குமாக மாதந்தோறும் செலவு தோராயமாக ரூ. 25,000. இதனால் ஓடுநராக மாறிய தொழிற்பயிற்சி இயக்குநர், தன்னிடம் பயில வந்த மாணவர்களுக்கும் தான் சார்ந்த தொழிலகத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய நேரமில்லாமல் திணறுகிறார்.

இவ்வாறான அலுவலக, மற்றும் ஊழியர் வசதிகள் பெருக்கச் செய்யும் செலவுகள் ஓரளவு தேவை எனச் சொல்லலாம். குறையில்லை.

இவ்வளவு நிதி வசதி இருந்தும் ஏழைகளிடம் எவ்வித பற்றுச் சீட்டும் எழுதாமல் நிதி பெற்று, அதற்குரிய கணக்கையும் அவர்களுக்குக் காட்டாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

என்னுடைய வேண்டுகோள்.

வசதி நிறைந்த, அறவழிப் போராட்டக் குழு நிதியிலிருந்தே (முன்பு பெற்ற ரூ. 61,000 உள்ளிட்ட நிதி) அந்த ஏழைகளுக்குக் காணி உறுதி வழங்கும் செலவுகள் அனைத்தையும் வழங்க வேண்டும். இதுவரை பெற்ற தொகை முழுவதையும் அந்த ஏழைகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

எனது இந்த முதலாவது வேண்டுகோளை ஏற்குமாறு அறவழிப் போராட்டக் குழுவைக் கேட்கிறேன். நீங்களும் வலியுறுத்துவீர்களாக.

நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *