‘ஒச்சாயி’ படத்திற்கு வரி விலக்கு
ஒச்சாயி திரைப்படத்திற்குத் தமிழக அரசு, கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் திரவியபாண்டியன், தமிழக முதல்வருக்கும் பிறருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கடிதம் வருமாறு:
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
எங்களது, ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் புதுமுகங்கள் தயா, தாமரை நடிப்பில், ஆசைத்தம்பி இயக்கத்தில், ‘ஒச்சாயி’ என்கிற திரைப்படத்தைத் தயாரித்திருந்தேன். இந்தப் படம், 15-10-2010 அன்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்திற்கு ‘ஒச்சாயி’ என்கிற பெயர் தமிழ் அகராதியில் இல்லை என்று வரிவிலக்குச் சலுகை தருவதில் தாமதமானது.
இதை அறிந்து அரசியல் தலைவர்கள் திரு. தா.பாண்டியன், திரு. தொல்.திருமாவளவன், திரு. டாக்டர் எஸ்.சேதுராமன் ஆகியோர், ஒச்சாயி என்பது தூய தமிழ் வார்த்தை என்றும் அதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், 27.10.2010 அன்று ‘ஒச்சாயி’ திரைப்படதிற்கு முழு கேளிக்கை வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்ததாகவும், கண்ணியமாகவும் உள்ள எங்கள் ‘ஒச்சாயி’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்திட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘ஒச்சாயி’ தூய தமிழ் வார்த்தை என்றும், வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த, அரசியல் தலைவர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
திரவியபாண்டியன்
தயாரிப்பாளர்