ஆறுமுக நாவலர் தந்த சைவத் தமிழ்ச் சூழல்

1

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐநா ஆலோசகர் (ஓய்வு), எழுத்தாளர், பதிப்பாளர்)

Maravanpulavu_Sachithananthanஉலகம் முழுவதும் தமிழர். 41 நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர். மேலும் 20 நாடுகளில் சிறு சிறு தொகைளில். மொத்தமாக, தி.பி.2041இல் (கி.பி.2010) 9.5 கோடித் தமிழர். இவர்களுள் 7 கோடித் தொகையினர் சைவத் தமிழர்.

கடந்த 200 ஆண்டுகளாக, தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், 14 நாடுகளில் புதிதாக 4,500 தமிழ்ச் சைவக் கோயில்கள். கடந்த 25 ஆண்டுகளில் மேலும் 20 நாடுகளில் புதிதாக, 500 தமிழ்ச் சைவக் கோயில்கள். தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், உலகெங்கும் தோராயமாக, 5,000 தமிழ்ச் சைவக் கோயில்கள்.

கடந்த 1,000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்கொக்கில் அரசப் பூங்காவில் நடைபெறும் ஊஞ்சல் விழாவில் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்கும் தேவாரம் ஓதுதல். தாய்லாந்து அரசரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதுதல்.

கடந்த 200 ஆண்டுகளாக, கிழக்கே பிஜி நாடு தொடக்கம், மேற்கே கரிபியன் தீவுக் கூட்டம் வரை சூரியன் மறையாமலே கேட்டு வருவது தேவார, திருவாசகங்களை, திருப்புகழை, காவடிச் சிந்துகளை.
இன்றோ, உலகெங்கும் 30 நாடுகளில் திருமுறைகளையும் சைவத் தமிழ் பாக்களையும் பயிற்றுவிக்கும் 25,000 பாடசாலைகள். இங்கே பயிலத் தோராயமாக ஏழு இலட்சம் சைவத் தமிழ் மாணவ மாணவியர் வருகின்றனர்.

ஹவாய்த் தீவில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஓதுவார் இசைக்கும் தேவார திருவாசகங்களையும் சேர்த்துக்கொண்டால், சூரியன் மறையாத தமிழ்ச் சைவச் சூழலில் பூமிப் பந்து சுழல்வதை  உணரலாம்.

இவ்வாறு உலகெலாம் உணர்ந்து ஓதுவார்க்கு, வேண்டுவார் வேண்டுவதை ஈயும் சிவபெருமான், உலகச் சைவத் தமிழ்ச் சூழலுக்குத் தலைவன்.

முழுமை என உண்டா? முழுமையை அடையலாமா? என்ற வினாக்களின் விடையே சிவநெறி. முழுமையானவர் சத்தியும் சிவனும் ஆய கடவுள். முழுமையற்றது உயிர். முழுமையை நோக்கிய பயணமே பிறவிகளுக்கு ஊடான உயிர்க் கூர்மை. முழுமையை நோக்கிய உயிரின் பயணத்தைத் தடுப்பன மலங்கள். மலங்களின் தடைகளைக் கடக்க, வினைகள் பாற, புலன்களின் வேட்கையைத் தணிவிக்க, மனத்தை வழிப்படுத்த, பார்வதி உடனுறை சிவபெருமானே துணை நிற்கிறார் என்ற அறிவுசார் நிலையே சைவத் தமிழ்ச் சூழலாம்.

உலகெங்கும் சைவத் தமிழ்ச் சூழலை உருவாக்கி அருள் பெருக்கிய பெருமுயற்சிக்கு நீண்ட வரலாறுண்டு.

புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி, மேலான நன்னெறி ஒழுக, சைவ நெறிக்கு ஆட்படுத்தக் காலத்துக் காலம், அருளாளர் பெருமக்கள் தொண்டாற்றி வந்துள்ளனர்.

பர சமய கோளரியாகிய திருஞானசம்பந்தர், ‘அடக்குமுறைக்குப் பணிவோம் அல்லோம்’ என வாழ்ந்த திருநாவுக்கரசர் போன்ற சைவத் தமிழ்ப் போராளிகளின் வழியில் 188 ஆண்டுகளுக்கு முன் (திபி 1853 மார்கழியில், 18.12.1822) யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர்.

புலமை வளம், பொருள் வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். எனவே வாழ்க்கை அவருக்குப் போராட்டமாகவில்லை. ஆனால் போராட்டத்தையே வாழ்க்கையாக்குவதற்கான புறச் சூழல் ஆறுமுக நாவலருக்கு இருந்தது.

navalarசைவத்தையும் தமிழையும் தம் இரு கண்களாகப் போற்றினார். அக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு சைவத் தமிழ்ச் சூழலைப் பார்த்தார். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சைவத் தமிழ்ச் சூழல் அமையுமாறு வழி சமைத்தார்.

அவர் தமையனார் தியாகராசா, ‘பெரிய புராணம் ஒரு கட்டுக் கதை’ என்றார். ஆறுமுக நாவலர் வெகுண்டெழுந்தார். கத்தி ஒன்றை எடுத்தார். மூத்தவர், தமையனார் என்றெல்லாம் பாரார். வெட்ட முனைந்தார், இளமைப் பிராய ஆறுமுக நாவலர். அதன் பின் தியாகராசருடன் முகம் கொடுக்கா விரதமிருந்தார். தியாகராசர் இறக்கும் காலை, ஆறுமுக நாவலரை அழைத்தார், நடந்ததற்கு வருந்தினார்.

ஆறுமுக நாவலரின் கொள்கைக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டு. சைவத் தமிழ்ச் சூழல் பெரிதா? குடும்பம் பெரிதா? சைவத் தமிழ்ச் சூழலே ஆறுமுக நாவலருக்குப் தேவையானதாகத் தெரிந்தது.
யார்? எவர்? எனப் பாரார், எந்தச் சூழல்? எந்தத் தேவை? எனப் பாரார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரியதை, சிவநெறி வளர்ச்சிக்கு உரியதை மட்டுமே ஆறுமுக நாவலர் நோக்கினார். அவருடைய போராட்டங்களின் பின்னணி இதுவே.

ஆறுமுக நாவலருக்கு 25 வயது. யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோயிலில் சிவாகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடக்குகிறார். 57 வயதில் அவர் இறக்கும் வரை அந்தப் போராட்டத்தைக் கைவிடவில்லை.

கருவறையில் முருகனின் சிலை அமைய வேண்டும். கோயிலில் உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது. சிவாகம விதிகளைக் கோயிலில் பின்பற்ற வேண்டும். இவை போராட்டக் கரு.
உயிர்ப் பலி இன்றில்லை. முருகன் சிலை கொண்ட கருவறைக்காகக் கரூரில் இருந்து கொண்டு சென்ற கருங்கற்களால் கட்டிய கட்டடம் முடிவடையவில்லை. சில ஆண்டுகள் முன்பு வரை முற்றுப்பெறாக் கோயிலாக இருந்த அக்கருவறையின் சான்றுகள் கூட இன்று நல்லூர் முருகன் கோயிலில் இல்லை.

ஆனாலும் ஆறுமுக நாவலரின் முயற்சியால் அவரது 56ஆவது வயதில் தொடங்கிய வழக்கு, அவர் இறந்து 40 ஆண்டுகளின் பின் தீர்ப்பாகி, நல்லூர் முருகன் கோயில் கணக்குகளை ஆண்டுதோறும் நீதிமன்றத்துக்குக் கொடுக்கும் நிலை வந்தது.

தேவதாசிப் பெண்களைத் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து ஈழத்துக் கோயில் திருவிழாக்களில் நடனமாடிக் களிக்கும் அடியார்களை ஆறுமுக நாவலர் சாடினார். அந்த வழக்கத்தை விட்டுத் திருமுறைகளைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஊக்குவித்து பெருமளவு வெற்றியும் கண்டார்.

ஆறுமுக நாவலருக்கு 41 வயது. சிவ தீட்சை பெறாத வைதீக பிராமணர்கள், கருவறைக்குள் சென்று திருமேனி தொட்டுப் பூசை செய்யலாகாது, வழிபடலாகாது என்பது ஆறுமுக நாவலரின் நிலை. அந்தப் பணியை ஆதிச் சைவர்களான சிவாச்சாரியார்களே செய்யலாம் என்றார். சுமார்த்தர்களிடம் திருநீறு வாங்குவது பொருத்தமானதல்ல என்பது அவர் வாதம். ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இக்கருத்துகளைப் பரப்பி வெற்றி கண்டார்.

ஆறுமுக நாவலருக்கு 47 வயது. சிதம்பரத்தில் தில்லையில் தீட்சிதர்கள் வேத வேள்விக்காக உயிர்ப் பலி கொடுக்க முயல்கின்றனர். ஆறுமுக நாவலர் ஒப்பவில்லை. அங்குள்ளவர்களை அழைக்கிறார். கண்டிக்கிறார். தீட்சிதர்களின் முயற்சி தோல்வியில். இதனால் ஆறுமுக நாவலர் மீது தீட்சிதர்கள் கோபம் கொள்கின்றனர்.

ஆறுமுக நாவலருக்கு 49 வயது. திருமுறைகளே அருட்பாக்கள் என ஆறுமுக நாவலர் கருதினார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரிய அருட்பாக்கள் வேறு எதுவும் இல்லை என்றார். இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை திருஅருட்பாக்கள் என்றவர்களைக் கண்டித்தார். இந்த வாதம், நெடுங் காலம் தொடர்ந்தது. ஆறுமுக நாவவருக்குப் பின்னும் அவரின் மாணவர் பலர் இந்த விவாதத்தினைத் தொடர்ந்தனர்.
Navalarசைவத் தமிழ்ச் சூழலின் எழுச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மீள்வளர்ச்சிக்கும் மக்களிடையே அறிவு பெருக வேண்டும் என நாவலர் கருதினார். சைவத் தமிழ் நூல்களை அக்கால மக்கள் எளிதில் புரியுமாறு எழுதினார், பதிப்பித்தார். தற்காலப் பதிப்புலகின் தந்தை, தமிழ் வசன நடையின் முன்னோடி என ஆறுமுக நாவலரைப் பாராட்டுவர்.

ஆறுமுக நாவலர் காலத்தில் சைவத் தமிழ்ச் சூழலின் மிகப் பெரிய சவாலாக, கிறித்துவ மதமாற்றம் நடைபெற்று வந்தது. ஈழத் தமிழர்கள் பலர், பணத்துக்காகவும் பதவிக்காகவும் கிறித்துவ மதத்தைக் கைக்கொண்டனர். கிறித்துவ மதமாற்றத்துக்கு எதிராக ஆறுமுக நாவலர் நடத்திய போராட்டங்கள் பல.

சைவத் தமிழ்ச் சூழலின் பெருமைகளை விளக்கி, நூல்கள் வெளியிட்டார். கிறித்துவ மதத்தின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை விளக்கிப் பிரச்சாரம் செய்தார். சைவப் பாடசாலைகளை உருவாக்கினார். சைவ அமைப்புகளை வளர்த்தார்.

தனது நாவன்மையாலும் எழுத்து வன்மையாலும் கிறித்துவ மதமாற்றத்தைப் பெரிதும் தடுத்து நிறுத்தினார்.

இவரது போராட்டங்களில் இவருக்குத் துணையாக, இவரது மாணவர்கள் பணி புரிந்தனர். காசிவாசி செந்திநாதய்யர், சதாசிவம்பிள்ளை, பொன்னம்பலம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, கறோல் விசுவநாதபிள்ளை என இவர் பின்னால் அணி திரண்டோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

போராட்டங்களையே வாழ்வாகக் கொண்டு 57 ஆண்டுகள் வாழ்ந்தார். திபி 1910 கார்த்திகை மகத்தன்று (5.12.1879) சிவனடிப்பேறு எய்தினார்.

கடந்த 25 ஆண்டுகளாக ஏறத்தாழ 30 நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர், சென்ற இடமெல்லாம் சைவத் தமிழ்ச் சூழலை வளர்த்து வருகின்றனர் எனில், ஆறுமுக நாவலர் தொடக்கிவைத்த சைவ மறுமலர்ச்சிப் பணியே காரணமாகும்.


(04.12.2010 அன்று சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்தில், ‘வாழ்க்கையே செய்தியாக’ என்ற தலைப்பில் ஆறுமுகநாவலர் பற்றி, சச்சிதானந்தன்  உரையாற்றவுள்ளார். ‘ஆறுமுகநாவலர் தந்த சைவத் தமிழ்ச் சூழல்’ எனற கட்டுரை, பெருமன்ற வெளியீடாகிய சைவ சித்தாந்தம் இதழுக்கு எழுதியது. அச்சில் வரும் முன், வல்லமையில் முதலில் வெளிவந்துள்ளது.)

=====================================

படங்களுக்கு நன்றி – http://en.wikipedia.org/wiki/Arumuka_Navalar | http://www.jaffnavoice.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆறுமுக நாவலர் தந்த சைவத் தமிழ்ச் சூழல்

  1. தங்கள் கட்டுரையிலிருந்து சில புதிய தகவல்களை பெற்றுக்கொண்டேன். ஆறுமுக நாவலரைப்பற்றி மேலோட்டமாக தான் எமது மாணவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இப்போது உங்கள் கட்டுரை விளக்கத்தையும் கற்றுக்கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.
    புலம் பெயர்ந்து வந்தாலும் எமது இளம்சமுதாயத்தினர் தமிழையும், சமயத்தையும் விருப்பத்தோடு கற்கிறார்கள் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
    Kind Regards
    Mrs.P.Muraliharan (U.K)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.