பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 11

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

மின் தமிழ் இணையக் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலை மேற்கோள் காட்டி, அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

மின் தமிழ்க் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது –

பாலமுரளி:

பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?

அண்ணாகண்ணன்:

திரை விரித்து உரை நிகழ்த்திய போது, ‘திரையுரை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். திரை இல்லாமல் சுவர் போன்றவற்றிலும் ஒளியைப் பாய்ச்சி, உரை நிகழ்த்த முடியும் என்பது, பிந்தைய தெளிவு. மறவன்புலவு க.சச்சிதானந்தன், ‘ஒளியுரை’ என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார். ஒளியைப் பாய்ச்சாமல், கணித் திரையிலேயே படத்தினை அடுத்தடுத்து நகர்த்தி, உரை நிகழ்த்த முடியும். இது தொடர்பாக, முனைவர் அருள் நடராசன் அவர்களுடன் உரையாடியபோது, ‘படவுரை’ என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். முனைவர் மு.இளங்கோவன் ‘காட்சி விளக்க உரை’ என அழைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகக் ‘காட்சியுரை’ என்ற சொல்லை அண்மைக் காலமாகப் புழங்கி வருகிறேன்.

ஹரிகிருஷ்ணன்:

ஒன்றைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். PowerPoint என்பதை மொழிபெயர்க்க முடியாது. Presentation என்பதைத்தான் மொழிபெயர்க்கலாம்; முடியும். ஆகவே, காட்சியுரை என்று தமிழிலே குறிப்பிடப்படுவது பிரசன்டேஷன் என்ற சொல்லுக்கானது. பவர்பாயின்ட்டுக்கானது அன்று.  நுண்மென் சன்னல்கள், அதிமென் பலகணிகள், வெகுமென் காலதர்கள் என்றெல்லாம் Microsoft Widows எப்படி மொழிபெயர்க்கப்பட முடியாதோ அப்படியே பவர்பாயின்ட் மொழிபெயர்க்கப்பட முடியாது. Elder brother Eyeman என்று அண்ணா கண்ணனை மொழிபெயர்க்க முடியாததைப் போல. பிரசன்டேஷனுக்குக் காட்சியுரை, திரையுரை, காணுரை என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். பொருந்தும்.

ராஜாசங்கர்:

இதைப் போலவே சோடியம், பொட்டாசியம், செலினியம் என்பதை எல்லாம் மொழி பெயர்த்தே தீருவேன் என்று கிளம்பிய ஆட்களும் உண்டு.
பவர் பாய்ண்டுக்கு காட்சியுரை. அப்ப கீழே இருக்கறதுக்கெல்லாம் என்ன வார்த்தை? MS Access, MS Outlook, MS Outlook Express

இந்த உரையாடல் குறித்துத் தங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழுக்குப் புதிய வளம் சேர்ப்பதில் புதிய சொல்லாக்கமும் ஒன்று. அது, தமிழை உயிரோட்டமுள்ள மொழியாக வைத்திருப்பதில் முக்கியமான ஒன்று. சொல்லாக்க நெறிமுறை பற்றிப் பாரதி காலத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி ஒரு உடன்பாடு இன்னும் இல்லாததற்குக் காரணம், நெறிமுறை மொழி மரபைச் சார்ந்து மட்டும் அமைவதில்லை; மொழிக் கருத்தாக்கத்தைச் (language ideology) சார்ந்தும் அமையும் என்ற உண்மை. தமிழ் மொழியின் கருத்தாக்கம், ஒருமித்த ஒன்றாக இல்லை; அதனால் உடன்பாடு இல்லை.

சொல்லாக்கம் பற்றிப் பேசும்போது மொழியியலின் ஒரு அடிப்படியான கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே தமிழ் இலக்கணவியலின் அடிப்படைக் கருத்தும் ஆகும். ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்புக்குக் காரணம் இருப்பது சிறுபான்மையான சொற்களிலேயே. தொகைச் சொற்களின் பொருளில் அவற்றை உருவாக்கும் சொற்களின் பொருள்களின் கூட்டுப் பொருள் இருந்தாலும், அதற்கு மேல் பொருள் மாற்றம் இருக்கும். இதுவே இலக்கணம் சொல்லும் அன்மொழி. சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு, சமூக வழக்கு மரபாக வருவதே பெரும்பான்மை. ஒரு சொல்லின் பொருள் வெளிப்படையாகத் தோன்றாது என்று தொல்காப்பியர் சொல்வது இதைத்தான்.

ஆங்கிலத்தைத் தன் மாதிரியாக ஏற்றுக்கொண்ட நவீன தமிழ்ச் சமூகம், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்ப்பதையே புதிய தமிழ்ச் சொல்லாக்கத்திற்குத் தலையாய நெறிமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆங்கிலச் சொல்லில் உள்ள காரணப் பொருள், தமிழ்ச் சொல்லிலும் இல்லாவிட்டால் அது ஏற்புடைய சொல் அல்ல என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. இந்தக் கருத்து, விடமுடியாத ஒன்று அல்ல. ஆங்கிலத்தில் கணினியின் பகுதியான ஒன்றை mouse என்று சொல்லும்போது அது உருவ ஒப்புமையின் அடிப்படையில் வந்தது. கிராமத்தில் tube light என்ற சொல்லைக் குழல்விளக்கு என்று மொழிபெயர்க்காமல் வாழைத்தண்டு விளக்கு என்று சொல்லும்போது சொல் உருவ ஒப்புமையின் அடிப்படையில் வருகிறது. இதேபோல ஆங்கிலச் சொற்களை அவற்றின் வேர்ச்சொற்களை – அப்படியே மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அந்தச் சொற்கள் குறிக்கும் பொருளின் பயன்பாட்டின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாம்.

காட்சியுரை, படவுரை, ஒளிப்படவுரை என்று எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் பயன்பாட்டு வழக்கு மரபே ஒன்றை முடிவு செய்யும். சொல் குறிக்கும் பொருள் (object) மாற மாறச் சொல் மாற வேண்டியதில்லை. கரும்பலகை வெண்ணிறத்தில் வந்தாலும் அது கரும்பலகைதான்.

ஆங்கிலச் சொல் ஒருவரின் அல்லது ஒன்றின் பெயராக (name) இருந்தால் அதை மொழிபெயர்க்க முடியாது; கூடாது. இப்படிப்பட்ட பெயர், சொல் அல்ல; அது அடையாளம் காட்டும் குறியீடு. Oxford-ஐ கோதீர்த்தபுரி என்று பரிதிமாற்கலைஞர் மொழிபெயர்த்தது நிற்கவில்லை. அவருடைய பெயரின் மொழிபெயர்ப்பு நிற்கின்றதென்றால் அது பெயர் மாற்றம்; அடையாள மாற்றம்; சொல்லாக்கம் இல்லை. சதகர்ணியை நூற்றுவர்கன்னர் என்று இலக்கிய ஆசிரியர் மொழிபெயர்த்தால், அது இலக்கிய மரபு; வழக்கு மரபு அல்ல.

Power point என்ற சொல் ஒரு பொருளின் வணிகப் பெயராக இருந்தால் அது செய்யும் வேலையை மேலே சொன்ன ஏதாவது ஒரு தமிழ்ச் சொல்லால் குறிக்கலாம். வெகுஜன ஊடகம் பயன்படுத்தும் சொல் நிற்கும். Xerox என்ற வணிகப் பெயருக்கு ஒளிநகல் என்ற தமிழ்ச் சொல் வழக்கில் இருக்கிறது; கம்பெனியைக் குறிக்கும்போது ஜெராக்ஸ் கம்பெனி என்றே சொல்ல வேண்டும். Face Book என்ற வணிகப் பெயருக்கு முகமண்டலம் என்ற மொழிபெயர்ப்பு தேவை இல்லை. இந்த வணிகப் பொருள் செய்யும் வேலையைக் குறிக்க மின்னுறவு போன்று ஏதாவது ஒரு சொல்லை உருவாக்க வேண்டும்.

இன்று வணிகப் பெயர் பொதுப் பெயராக வரும் வழக்கு இருக்கிறது. Googled என்பது ஒரு எடுத்துக்காட்டு. தமிழில் இந்த மரபு இல்லை. மொழிபெயர்ப்புக்குத் தமிழாக்கம் என்ற சொல் வழங்குவது புறனடை. பேச்சு வழக்கிற்குச் சொல்லாக்கத்தில் இடம் கொடுத்தால், கூகுல்செய் என்று சொல்லலாம். அல்லது தேடு என்ற சொல்லே போதும்.

சொல்லின் நிலைப்பாடு அதன் பயன்பாட்டில் இருக்கிறது; அதன் பொருட்காரணத்தில் இல்லை; அதன் ஆங்கில ஒப்பீட்டு நெருக்கத்திலும் இல்லை.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *