அவதார புருஷர் “குருநானக்ஜி”
விசாலம்
“போலோ ஸோநிஹால்” என்ற கோஷம் கேட்க, எல்லோரும் “ஸத்ஸ்ரீஅகால்” என்ற பதில் கோஷமும் இட, நம் உடல் புல்லரித்துப் போகிறது. இந்தக் கோஷம், சீக்கியர்கள் எங்கு வசித்தாலும் அங்கு முழங்கும் கோஷம். நான் முதன் முதலாக தில்லியில் காலடி வைத்தேன். கார்த்திகை திருநாளும் வந்தது. கார்த்திகையின் போது வாயிலில் பெரிய கோலம் போட்டு தீபங்கள் வைக்கத் தொடங்கினேன். என் அக்கம்பக்கத்தில் இருந்த சீக்கியர்கள் வியப்புடனும் பெருமிதத்துடனும் என்னைப் பார்த்தார்கள். அதில் சிம்ரித் கௌர் என்பவள் என்னிடம் வந்து “பஹின் ஜி, நீங்கள் எப்படி எங்கள் குருவின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுகிறீர்கள்? குருநானக்ஜியைத் தெரியுமா?” என்றாள்.
“என் முருகனின் ஜயந்தியைக் கொண்டாடுகிறேன். இன்று குருநானக்ஜியின் ஜயந்தியா? அதனால் என்ன! நானும் உங்கள் குருவின் ஜயந்திக்காக விளக்குகள் வைக்கிறேன்” என்றேன்.
இந்தப் பதில், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. எப்போது கார்த்திகை தீபத் திருநாள் வந்தாலும் “குருநானக்” குருவின் ஜயந்தியும் என் மனத்திலே ஒன்றிவிடுகிறது.
குருநானக்ஜியினால் தான் சீக்கிய மதம் தோன்றியது. அந்த மதத்தில் எல்லாமே குருதான். சீக்கியன் என்றால் சீக்னேவாலா என்ற பொருளில் மாணவன் என எடுத்துக்கொள்ளலாம். ஸம்ஸ்கிருதத்திலும் சிக்ஷா என்று சொல் உண்டு. சிறு விதை விதைக்கப்பட்டது. அதை அன்பாலும் நற்பண்பினாலும் வளர்த்து, பின் துளிர்விட வைத்த சீக்கிய மதத்தை, பின்னர் வந்த குருமார்கள் போற்றி வளர்த்து, பெரிய ஆலமரமாக்கினர்.
சீக்கிய மதத்தில் எல்லா இடங்களிலும் குரு நிறைந்திருப்பார். அவர்கள் தெய்வமாகத் தொழுவது ஒரு புத்தகம் “குருகிரந்த சாஹீப்”. அதில் வரும் மொழி “குருமுகி”. அவர்கள் பாடும் பஜன் “குருபாணி”. அவர்களது ஆலயம் “குருத்வாரா”. அவர்கள் தெய்வமே “வாஹேகுரு”. ஆக மொத்தம் அவர்களது மதத்தில் எங்கும் குருவே நிறைந்திருக்கிறார்.
லாகூருக்கு அருகில் தல்வண்டி எனும் கிராமத்தில் முதல் குரு அவதரித்தார். அவரது ஜனனத்தை அவதாரம் என்றே சொல்ல வேண்டும். பாபர் காலத்திலிருந்து நாட்டில் பல கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, மக்களிடையே அமைதியில்லாமல் அதர்மம் பெருகும் நேரத்தில் இவரது ஜனனம் ஒரு அவதார புருஷரின் தோற்றமாகவே இருந்தது. இவருக்கு prophet of punjab and sind என்ற பெயரும் உண்டு.
சிறு வயதிலிருந்தே கடவுள் ஸ்மரணையுடன் கவிதைகளும் எழுதி வந்தார். இவரைப் படிக்க அனுப்பிய இவரது தந்தைக்குப் பெரிய ஏமாற்றம் தான் இருந்தது. முதலில் கோபால் பந்தா என்பவர், அவருக்கு ஹிந்தியைக் கற்பித்தார். ஒரு நாள் அந்த மாஸ்டர், இவரிடம் ஒரு புத்தகத்தைக்
கொடுத்து, “படி” என்றார்.
நானக்ஜி, “இதெல்லாம் படித்து என்ன பயன்? கடவுளைத் தெரிந்துக்கொள்ளும் வழி இதில் இருக்கிறதா?” என்றார். அந்த ஆசிரியர் இவரது மரக்கட்டையால் ஆன எழுதும் பலகையை வாங்கி, அதில் சில எழுத்துகளை எழுதினார். நானக்ஜி அந்த்க் குருவிடம் திரும்பவும் பேசினார் .
“ஆசிரியரே, நான் ஒன்று கேட்கவா?”
ஆசிரியர் சிரித்தபடி தலையாட்டினார்.
“நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?”
“நான் கணக்கு. வியாபாரத்திற்கு வேண்டிய அறிவு. வரவு சிலவு…..”
“இந்தப் படிப்பு சுதந்திரம் அடையப் போதுமா? சுதந்திரமென்றால் இந்த வாழ்க்கைப் பந்தத்தினின்று விடுபட்டு அடைய வேண்டிய இலக்கு,,,”
“இது எப்படி கிடைக்கும் நீயே சொல்லு”
“உலகப் பற்றை எரித்து அதைச் சாம்பல் ஆக்குங்கள். அது, எழுதும் மசியாகட்டும். அறிவை எழுதும் அழகான தாள் ஆக்குங்கள். அங்கு கடவுள் மேல் வைக்கும் அன்பு பேனாவாகட்டும். உங்கள் இதயம் ஒரு எழுத்தாளன் ஆகட்டும். குருவின் நினைப்பில் படைப்புகள் குவியட்டும். அந்த அழகுத் தாள், கடவுளின் நாமஸ்மரணத்தால் வரம்பின்றி நிறையட்டும்”
அப்படியே பிரமித்து நின்றார் ஹிந்தி மாஸ்டர்.
பின் இவர் தந்தை இவரை சம்ஸ்கிருதம் படிக்க அனுப்பினார். பண்டிட்ஜி, “ஓம்” என்று ஆரம்பிக்க, இவர் ‘ஓம்’ என்பதைப் பற்றிப் பெரிய வியாக்யானமே செய்துவிட்டார்.
இவரது தந்தை இவரைக் கடையில் அமரவைத்தார். இவரோ கடையில் இருந்த பொருட்களை எல்லாம் தானமாகக் கொடுக்க ஆரம்பித்தார். இவரது தந்தை இவருக்குக் குதிரை சவாரி கற்றுக் கொடுத்து, ஊர் ஊராகச் சவாரி செய்து, வியாபாரம் செய்யப் பழக்கினார்.
“என் வியாபாரம் என்பது ஆன்மீக அறிவைப் பெறுவது. இதனால் வரும் லாபம்தான் நமது நற்குணங்கள், நற்செயல்கள், ஈச்வரனைக் காண்பது. அந்த ஈச்வரனின் காரியாலயத்தில் தான் என் சேவை இருக்க வேண்டும்” என்று சொல்லி, சன்யாசிகளுடன் சாதுக்களுடனும் சுற்றலானார்.
இவரது தந்தை கவலையுற்றார். திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று எல்லா அப்பாக்களும் செய்வது போல் மகனுக்கு “சுலக்கனி” என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் இவரின் அப்பா.
ஸ்ரீசந்த, லக்ஷ்மிசந்த என்று இரு மகன்கள் பிறந்தனர். அதில் ஸ்ரீசந்த என்பவர்தான் சீக்கியர்கள், நீண்ட தாடி முடியுடன்தான் இருக்க வேண்டும் என்பதைக் கண்டிப்பாக்கினாராம்.
நானக்ஜி இந்தியா முழுவதும் அத்துடன் இலங்கை, துருக்கி, காபுல், பாக்தாத், கந்தஹார், சியாம் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார். திபெத்தியர்கள் குருநானக்ஜியைப் புத்தராகவே பார்த்தனர். “குரு கோம்ப்கா மஹராஜ்” என்று அவரை அழைத்தனர். இவர் செய்த அதிசங்கள் பல.
ஒரு சமயம், சிக்கிம் என்ற இடத்தில் இருக்கும் மக்கள் இவரைப் பார்த்தனர். தங்கள் பிரச்சனையைக் கூறினர். அதாவது அங்கு இருக்கும் நதி எப்போதுமே உறைந்துபோய் இருப்பதால் அதை உபயோகிக்க முடிவதில்லை என்றும் குடிக்கக்கூட நீர் கிடைப்பதில்லை எனவும் கூறினர்.
நானக்ஜி அவர்கள் அந்த நதியில் காலை வைத்தார். அந்த நதியும் அவரது பாதங்களைத் தொட்டு மகிழ்ந்து புனிதமானது. அவர் கால் விட்ட இட்ங்கள் எல்லாம் இன்று வரை உறையாமல் இருக்கிறதாம் அந்த இடத்தின் பெயர் “லாச்சன் கோம்பா {Lachen Gompa} அங்கு இருக்கும் மக்கள் குருஜி அவர்களை ‘ரிம்பொச்சே நானக்குரு’ என்று அழைக்கிறார்கள்.
குரு நானக்கின் போதனைகள்
* இறைவன் நாமாவை விடாது கூறு
* நேர்மை வழியைப் பின்பற்றி ஊதியம் பெற்றுக்கொள். அன்பான வாழ்க்கை நடத்து
* உன்னிடம் இருப்பதை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்துகொள்.
* முடிந்த வரையிலும் அன்ன தானம் செய்.
குருபானி………
“முகாமு கரி தரி {dhari} பைஸணா {bhaisana}
நித சலணை கீ கோத் [goth]
முகாமு த பரு ஜாணியை
ஜாரஹே நிஹசலு லோக
துனியா கைஸீ முகாமே
கரி ஸிதகு கரணீ கரச் ஜாகஹூ லாகி {lagi } ரஹூ நாமே ”
{you regard this world as ur home, but you are all the time worried about leaving it. world is your home only when you reach the world which is not subject to change and destruction, this world is not your home. do your duty with absolute devotion becaz this is the wealth which will
be useful in your journey to the next world}
நீ இந்த உலகத்தை உன்னுடைய வீடாக நினைக்கிறாய். இந்த வீட்டில் பல மாறுதல்கள் நிகழும். அழிவு வந்து போகும். வீடு என்பது உன் ஆன்மா. அழிவற்றது. அதுதான் உண்மையான வீடு. நீ உன் கடமைகளை ஒரு வித எதிர்பார்ப்பும் இன்றி, அன்புடனும் சிரத்தையுடனும் நிறைவேற்றி வந்தால் அதுவே மேலே போகும் பிராயணத்தில் உனக்கு மிகவும் உதவும்”
சீக்கியர்களின் திருவிழா, குருநானக்ஜியின் ஜயந்தி. அதாவது பிறந்த நாள். “குரு கிரந்தசாஹிப்” என்ற புத்தகமே அவர்களது கடவுள். அதில் பல நல்ல தத்துவங்கள், அறிவுரைகள் கூறப்பட்டிருக்கின்றன. அவர்களது “சபத்”, கேட்க மிகவும் ரம்மியமாக இருக்கும்.
=================================
குருநானக் படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா