கவிஞர் தேவா

‘பழனி அண்ணே ‘ – இந்த பெயர் காஞ்சிபுரத்தின் அருகிலுள்ள பாலுசெட்டிச் சத்திரம், என்ற ஊரில் மரியாதைக்குரிய பெயர்! காரணம் அவசர ஆபத்துக்கு இவர் தயவு ,108 ஆம்புலன்சு போன்றது. இவர் அந்த காலத்திய 5 ஆம் வகுப்பு ஆங்கில வழியில் படித்தவர்

ஊரில் பஞ்சாயத்துக்காரர்கள் இருந்தாலும் ,இவருடைய தீர்ப்பிற்கும் பெரும் மரியாதை இருந்தது. அதனை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

மெலிந்து உயர்ந்த உருவம் தொள, தொளவென வெள்ளை கதர் சட்டை , பாகவதர் கிராப்பு, காலில் எப்போதும் அவாய் செருப்பு . வேறு செருப்புக்கு மாறியதும் இல்லை. கக்கத்தில் எப்போதும் குடை இருக்கும் அதை அவர் விரித்தும் நான் பார்த்ததே இல்லை!

சிறுவயதிலேயே திருமணம் நடந்து விட்டது. மனைவி மூன்று குழைந்தைகளுக்குத் தாய் ஆனதுடன், விண்ணில் பறந்து போனாள்.
மாற்றாந்தாய் கொடுமைக்கு அஞ்சி மறுமணம் வேண்டாம் என்று முடிவு செய்தார். கடவுள் மேல் கொண்ட பக்தியால், நெற்றியில் திருநீறு பட்டையாக
மின்னும். யாராவது திருநீரை நெற்றியில் சிறிதாக இட்டு விட்டால் ,

“எலே !!என்னடா பொண்டுக ? நெத்தியல பொட்டு வச்சாப்போல . ஆண்டவன் விஷயத்துல நீ கஞ்சத்தனம் பார்த்தே , உன் விஷயத்துல அவன் பாத்துடுவான் ஜாக்கிரத !” என்பார் .

முனிசிபாலிடியில் ஏதோ வேலை . தனக்கென்று இருந்த வீடு , ஊரில் நூலகம் இல்லாததால் நூலகம் ஆனது. யார் எது கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார். தன்னிடம் இல்லாத போதும் மற்றவர்களிடமாவது வாங்கிக் கொடுத்து விடுவார். இவரே ஒரு குடிசையில் வாடகைக்கு குடி இருந்தார் என்பதுதான் ஆச்சரியம்! இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து பொறியியல் வல்லுநர்கள் ஆக்கினார். தாய்நாட்டிற்கு சேவை செய்யச் சொன்னால் அவர்களோ மேலை நாட்டிற்கு பணம் பார்க்கப் போய்விட்டனர் .

இந்த கருத்து வேறுபாட்டில் பிள்ளைகளுக்கும், இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்ததை, என் தாய் மாமனிடம் அடிக்கடிச் சொல்லுவார்.

”ஏலே!!சத்யா பொறந்த நாட்டை மதிக்காம போறதுங்கல்லாம் பெத்தவங்களையும், மத்தவங்களையும், எங்க மதிக்கப் போவுதுங்க ?”

“ஐயா நான் சொல்லுறேன்னு,தப்பா நெனைச்சிக்கக் கூடாது திரை கடல் ஓடியும் ,திரவியம் தேடுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?”

”டேய் !டேய் !! சும்மா நிறுத்துடா அதே பெரியவங்கதான் உள்ளூர்ல ”பூனை பிடிக்க ,முடியாதவன் அசலூர்ல போய் யானை பிடிக்கப் போறானாம்னு சொல்லியிருக்காங்க , அது தெரியுமில்ல உனக்கு . எங்களுக்கும் பழ மொழி முது மொழி எல்லாம் தெரியும் ! போடா போக்கத்த பய மவனே !!, ஆச !!பணம் நெறைய கெடைக்கும் , புகழ் ,பாரின் ரிடர்ன் என்ற பேரு, காரு, பங்களா இதெல்லாம் வரும் இல்ல ! டேய் அதுக்கெல்லாம் மனசு வேணும்டா, மனசு வேணும். உனக்கு சொன்னா புரியாது . போடா போய் வேலயப்பாரு ”.

பழனி ஆதங்கத்திற்கு காரணம் உண்டு . அவரின் தகப்பனார், அம்பலவாணர் ,தேசப் பற்று மிகுந்தவர் வெள்ளையனுக்கே வைத்தியம் பார்த்தவர் என்பதை எங்க ஊர் பெரியவர்கள் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். நாட்டு வைத்தியத்தில் நல்ல திறைமைசாலி .

ஒரு முறை கலெக்டர் துரை, அவ்வூர் வந்திருக்கிறார். வந்தவருக்கு கடுமையான வயிற்று வலி. வெள்ளைக்கார டாக்டர்கள் வந்து பார்த்தும் வலி தீர்ந்த பாடில்லை . துடித்துப் போனார் துரை . இதைப் பார்த்து அவ்வூர் பெரியவர் இரக்கப்பட்டு வைத்தியர் அம்பலவாணரை அழைத்து வந்தார் . வைத்தியரின் கோலத்தைப் பார்த்த துரை சிரித்துவிட்டார். நம்ம டாக்டராலேயே முடியவில்லை இந்த ஆளைப் பார்த்தா பேயோட்டி போல இருக்கிறான் இவன் எப்படி,? என்றாராம் ,எகத்தாளமாக!

வைத்தியர் துரையின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு தன் துணிப்பையில் வைத்திருந்த விபூதியை துரையின் நெற்றியில் இட்டு சூரணத்தை எடுத்து ஒரு வெற்றிலையில் இட்டு , அதில் தேனைக் கலந்து துரையை நக்கச் சொன்னாரம் . துரையும் சந்தேகத்துடன்தான் நக்கினாரம். அரை மணிநேரத்தில் துரையின் வலி காணாமல் போய்விட்டதாம். துரைக்கு ஒரே ஆச்சரியம் !!

சந்தோஷத்தில் அம்பலவானரைப் பார்த்து உனக்கு ஏதாவது பரிசு கொடுத்தே ஆகவேண்டும் என்ன வேண்டுமோ கேள் ,என்றாராம் .

அம்பலவாணர் நிதானமாக ”நீங்கள் உண்மையில் ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும் என்று விரும்பினால் எங்கள் நாட்டுக்குச் சுதந்திரம் கொடுங்கள்”
என்றாராம். அப்படிப்பட்டவரின் பிள்ளைதான் பழனி. தேசப்பற்று அவர் இரத்தத்திலேயே ஊறி இருந்தது.

ஆகஸ்ட் 15 நெருங்கினால் போதும் இவரைப் பிடிக்க முடியாது ,அன்று கொடியேற்றி பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பதில் மும்முரமாகவும் ஆனந்தமாகவும் இருப்பார். இது அந்த ஊரே அறிந்த விஷயம் . குடியரசு தினத்திற்கு இரண்டே நாட்கள் இருந்தது. வழக்கம் போல் ஒரு மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து போய்க்கொண்டு இருந்தார் . காற்று இவரை தள்ளுகிறதா அல்லது இவர் தானே வேகமாக நடக்கிறாரா, என்பது தெரியாத அளவிற்கு அவ்வளவு வேகம் . வாய்க்கால் வரப்பைத் தாண்டி ரோட்டிற்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தார் .

”அண்ணே ,பழனி அண்ணே !

யாருப்பா அது ? அட நம்ம முருகேசனா? பட்டாளத்திலிருந்து எப்ப வந்தீக ? நல்லா இருக்கீகளா தம்பி ?

”எல்லாம் உங்க அசீர்வாதம்தான் அண்ணே . நீங்க மட்டும் அன்னைக்கு ரயில் ஏற பணம் கொடுக்காம இருந்திருந்தா ,எனக்கு உத்யோகமே ஏதுன்னே ?”

”டேய் நிறுத்துடா பொடிப்பயலே பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு .நல்லா இருடா உன் அப்பன ஆத்தாள காப்பாத்து அது போதும்டா !

”அண்ணே ! டவுனுக்கா போறீங்க ? “
”ஆமாம்பா ”

“ஒத்தாச வேணும்னா நானும் வரட்டுங்களா?”

“ வேனாம்பா. சின்ன ஜோலி தான் ,”குடியரசு தினம் வருதில்ல, தொ.. இந்த கொடியில் இருக்கிற செகப்பு கலர் சாயம் போயுடுது அதான் சாயம் ஏத்திட்டு வரலாமுன்னு போறேன் . “

பழனி தன் கையில்வைத்திருந்த பையில் இருந்து தேசியக் கொடியை , வெளியில் எடுத்தார். அடடா!! இந்தக் கொடியையா! என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முருகு .

”அடஎன்னமுருகு இப்படி சொல்லிப்புட்டே”.

“அதுக்கு சொல்ல வரலன்னே துணி இத்துப் போயிருக்குதேன்னு சொல்ல வந்தேன் பேசாம புது கொடி வாங்கிடலாமேன்னு சொன்னேன்.”

இந்தக் கொடியின் மகத்துவம் தெரியாம பேசற ! இது எங்க அப்பாருது. மகாத்மா காந்தி மெட்ராசு பொதுக்கூட்டத்துல பேச வந்தாராம் . அவர் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியபோது அந்த மகாத்மா அவருக்குக் கொடுத்தாராம்.

”’அப்படியா”! என்று ஆச்சரியத்துடன் முருகேசு கொடியை பிரித்துப் பார்த்தான். பலமாக காற்று வீசவே கொடி பறந்து நடு ரோட்டில் விழுந்தது . அதை எடுக்க இருவரும் ஓடினர் . ”ஐயோ !! என்ற அலறல் சத்தம் . ரத்த வெள்ளத்தில், பழனி. சாயம் போன சிகப்பு கலரை பழநியின் இரத்தம் சிகப்பாக்கியது. மோதிய லாரியில் ‘‘ஜெய்ஹிந்த் ரோட்வேஸ்” என்றிருந்தது .

 

படத்திற்கு நன்றி : http://photobucket.com/images/indian%20flag/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *